1013. |
நுதலின்கண்வி
ழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதமெங்குநி றைந்து விளங்கப் பவங்கண் மாற
வுதவுந்திரு நீ,றுயர் கண்டிகை, கொண்ட வேணி
முதன்மும்மையி னாலுல காண்டனர் மூர்த்தி
யார்தாம். 46 |
1013. (இ-ள்.)
வெளிப்படை. நெற்றியின் கண்
விழியுடையவராகிய சிவபெருமானது வாய்மையாகிய நுண்பொருள்
கொண்ட நூலின் பொருள் எங்கும் நிறைந்து விளங்கவும், பவங்கள்
மாறவும் உதவுகின்ற திருநீறும், உயர் உருத்திராக்கக கண்டிகையும்,
கொண்ட சடையும் என்ற முதன்மைபெற்ற மும்மையினால்மூர்த்தியார்
தாமே உலகத்தை அரசு செலுத்தினர். 46
1013.
(வி-ரை.) நுதலின்கண் விழித்தவர் - கண்-
ஏழனுருபு. விழியவர் என்பது விழித்தவர் என
வந்தது. நெற்றியில்
உள்ள கண்ணை, உலகமெல்லாம் இருண் மூடியதொரு காலத்தில்,
அவ்விருளைப் போக்கி ஒளி தருதற் பொருட்டு விழித்தவர-
திறந்தவர் என்றுரைத்தலுமாம். "மலைமடந்தை விளையாடிவளையாடு
கரத்தான் மகிழ்ந்தவன்கண் புதைத்தலுமே வல்லிருளா யெல்லா,
வுலகுடன்றான் மூடவிருளோடும்வகை நெற்றி யொற்றைக்கண்
படைத்துகந்த உத்தமனூர்" (தக்கராகம் - திருக்கலயநல்லூர் - 4)
என்ற ஆளுடையநம்பிகள் தேவாரம் காண்க. இவ்வாறு ஒரு காலம்
நுதற்கண் திறந்து ஒளி தந்தது போலவே உண்மை தெளிந்து உலகம்
உய்தற்பொருட்டு நுணங்கு மெய்ந்நூல்களையும் இறைவர் அருளினர்.
அந்நூல்களின் பதம் எங்கும் விளங்க மூர்த்தியார்
அரசு
செய்தளித்தனர் என்ற குறிப்பும் காணத்தக்கது. "மேவியவெந்
நரகத்திலழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும்
வேதமுதலானை" (கொல்லிக் கௌவாணம் - திருக்கானாட்டு
முள்ளூர் - 10) என்ற நம்பிகள் தேவாரத்தினும் "நாயகன்கண்
நயப்பால் நாயகி புதைப்ப வெங்கும், பாயிரு ளாகி மூடப் பரிந்துல
கினுக்கு நெற்றித், தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த
பண்பிற், றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்"
(1 - 52) என்ற சிவஞானசித்தியாரினும் உள்ள கருத்துக்கள் ஈண்டுச்
சிந்திக்கத்தக்கன.
மற்றொருகாலம்
மன்மதனை எரிக்க நுதலின் கண்ணை
விழித்தனராதலின், அதற்கிணங்கக் காமக்குரோத
முதலியவற்றாலுண்டாகும் பவங்கள்மாற உதவும்
சிவசாதனங்களை
உதவினர் என்ற குறிப்பும் காணத்தக்கது.
நுணங்கு
நூல் - நுண்ணியனவாகிய உண்மைப்பொருள்களை
விளக்கும் வேத சிவாகமமாதி சித்தாந்த நூல்கள். நூலின்
பதம் -
அவற்றால் உணர்த்தப்படும் சிவநெறி. பவங்கள்
- பாவங்களின்
வழித்தாய் வரும் பிறவியும் அதனைப் பின்பற்றி வரும் துன்பங்களும்.
உயிர் - கொண்ட என்ற அடைகளின் பொருத்தமுங் காண்க.
உதவும்
- சாதனமாய் நிற்கும். விளங்கவும் - மாறவும்-உதவும்
என்க. உதவும் மும்மை என்க. விழித்தவர்
உதவும் என்று
சுட்டியுரைப்பினு மமையும்..
முதல்
- முத்தி சாதனங்களில் முதன்மைபெற்ற.
முதல்
மும்மையினால் உலகாண்டவர் மூர்த்தியார்தாம்
- இப்பாட்டினால் "மும்மையா லுலகாண்ட மூர்த்தி" என்ற முதநூற்
றொடரை விரித்துணர்த்தயபடி கண்டுகொள்க. 46
|