1014. ஏலங்கமழ் கோதையர் தந்திற மென்று நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் றெவ்வுடன் வென்று நீக்கி
ஞாலந்தனி நேமி நடாத்தி நலங்கொ ளூழிக்
காலம்முயிர் கட்கிட ரான கடிந்து காத்து,
 47

     1014. (இ-ள்.) வெளிப்படை. மயிர்ச்சாந்து மணம் வீசுகின்ற
கூந்தலினை உடைய பெண்களின் தொடர்பினை என்றைக்கும்
நீங்கிய துறவொழுக்கமாகிய சீலத்தினை மேற்கொண்டவராய்,
வெவ்விய ஐம்புலவின்பங்களைப் பகைவர்களுடனே வென்று நீக்கி,
உலகினைத் தனி ஆணையினால் ஆட்சி செலுத்தி நன்மை
கொள்ளும் ஊழிக்காலம் உயிர்களுக்கு வரும் இடர்கள் வாராமே
காத்து, 47

     1014. (வி-ரை.) ஏலம் கமழ்......சீலம் - துறவுநிலை.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் துறவொழுக்கம் பூண்டாரிருவர்.
அவர்களாவார், அப்பர் சுவாமிகளும் மூர்த்தி நாயனாருமாம்.
"மூர்த்தியா ரப்பர் நல்ல துறவறம்" (37) என்பது திருத்தொண்டர்
புராண வரலாறு. உலக நலம் எதனையும் விரும்பாமலே
அரசாட்சியினை ஏற்றது போலவே, எவ்வித உலகப் பற்றுமின்றி
அவ்வரசாட்சியினை மூர்த்தியார் செலுத்தினர் என்பது இப்பாட்டால்
அறிவிக்கப்பட்டது. இந்நாளிலோ எனின், அரசாட்சியின் எந்தப்
பயனுமற்றதொரு சிறு பகுதியேயாயினும் அதனை மக்கள் விரும்பி
அதனை அடைவதன் பொருட்டுப் பெரும்போரும், பெரும்பொருட்
செலவும், தகுதியற்ற பல செயல்களும் செய்து, "பொய்ம்மையே
பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்" புல்லறிவாண்மை பெருகிவரக்
காண்கிறோம். ஒரு சிறு அரசாங்க பதவிதானும் மக்களைச்
சுயநலத்தில் அழுத்திப் பற்பல தாழ்வுகளிற் புகுத்துவது எளிதில்
இசைவதாகின்றது. இதனைப் பல துறையினும் அறிந்த அமைச்சர்
பெருமானாகிய ஆசிரியர், உண்மை நாயன்மார்களாகிய
எந்தம்பெருமக்களது உயர்வையும் அருமையினையும் எடுத்துக்
காட்டுவாராய் இங்கு மூர்த்தியாரது முழுத் துறவொழுக்கத்தினை
விதந்து எடுத்து விரித்தனர். இவ்வரசாட்சியினையும் மூர்த்தியார்
விரும்பினாரல்லர். அவர் விரும்பியது "வன்மைக்கொடும் பாதகன்
மாய்ந்திட, நன்மை அரசன் இப்புவிதாங்க வேண்டு"
மென்பதொன்றுதான். பின்னர், இறைவன் "நீயே அரசு
கைக்கொண்டு முன்புள்ள துன்பநீங்கக் காத்துப் பணி செய்து
எம்முலகடைக" என்றருளியதனால் அருளிதுவாகில்
வையந்தாங்குவன்" என்றதுவே அவர்தம் மனநிலை (1000).

     வெம்புலன் - "ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள"என்றபடி
ஐந்து புலங்களினின்பங்களும் ஒருங்கே துய்க்கப்படும் மகளிர்
இன்பத்தை நீக்கியதேயன்றிக், கண் செவி முதலிய தனிப்புலனின்
பங்களையும் மூர்த்தியார் விழையாது நீக்கினர்என்பார், வெம்புலன்
- வென்று - நீக்கி
என்றார். ஒவ்வொரு புலனின்பமே மக்களை
மயக்கிக் கேடுகளில் ஈர்த்துத் தள்ளவல்லதென்பது பெரியோர்
கண்ட உண்மையும் அனுபவமுமாம். "மாற நின்றென்னை மயக்கிடும்
வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து" -(திருவாசகம்).

     புலனை வெல்லுதலாவது புலனின்பத்தைப் பற்றிக்கொண்டு
அவற்றின் பின்தாம் செல்லாமல் தம்மைப் பின்பற்றி அவை
நிற்குமாறு செய்தல். "தம்மையைந்து புலனும்பின் செல்லுந் தகையார்"
(சண்டீசர் - புரா - 2). இதற்குப் புலன்களை அடக்குதல் என்று
பொருள் கொள்வாருமுண்டு. அது பொருளன்றெனத் திருமூலர் மிக
உருசிபட உரைத்தருளினர். "அஞ்சு மடக்கி னசேதன
மாமென்றிட், டஞ்சு மடக்கா வறிவறிந் தேனே" (திருமந்திரம் -
ஐந்திந்திரிய மடக்குமுறைமை 7 - 330).

     வெம்புலன் தெவ்வுடன் - தெவ் - பகை. அரனடியாரை
வன்மை செய்து மூர்த்தியாரையும் அந்தம் இலவாம் மிறைசெய்வித்த
அமண்கையர்களது பகைமை. அவர்களைச் சார்ந்த வடுகக்கருநாட
மன்னன் இறந்து பட்டானெனினும், அவனை அவ்வாறு செய்யும்படி
தூண்டிச் சைவத்துக்குப் பகைமை பூண்ட சமண்கையர்களது சார்பு
அந்நாட்டில் இருந்தது. ஆதலின் அத்தகைய பகைகள்
சைவமக்களைத் தாக்காமல் வென்று நீக்கினார். இது, அவ்வவர்களை
அவரவர்க்குரிய அளவில் அமைந்து நிற்கச் செய்தலினாலும், வன்மை
புரிவோரைத் தண்டித்தும் நாடு கடத்தியும் முறை செய்தலினாலும்,
அவர்களுட் பொய்விட்டு உண்மைச் சைவத்தினைச் சார வருவோரை
உடன் தழுவிச் சைவராக்கி உயர்த்தியும் பிறவாறும் ஆணை
புரிதலினாலும் ஆம். தண்டியடிகள் புராணமும் திருஞானசம்பந்த
நாயனார் புராணமும் பார்க்க.

     தெவ்வுடன் வென்றுநீக்கி - மூர்த்தியார் அரசு பூண்டது
புறப்பகையாய்ச் சைவத்துக்கு நேர்ந்த இப்பகையை நீக்குதல்
கருதியதாதலின் இவ்வாறு எடுத்துக் கூறியதுமன்றி, உடன் என்ற
உருபினைத் தெவ் என்றதனோடு புணர்த்தியோதினார். இது
புறப்பகைவெல்லுதல் குறித்தது. பரமன்னரை வென்றது வரும்பாட்டிற்
காண்க.

     வெம்புலன் வென்று - என்றது உட்பகை வெல்லுதல்குறித்தது. இதனால் "மேன்மை மன்னரைப் புவிசார்வதென்று?" (985) எனக்
கவன்றாராதலின் அப்பண்பு பொருந்த நடத்துவித்த திறம் கூறியபடி.

     இந்நாளின் அரசாட்சியின் குறிக்கோள் உடல்-உடைமைகளின்
புறக்காவலுடன் நின்று விடுகின்றது. அது உயர்ந்த இலக்கியமாகாது.
புலப்பகையாகிய உட்பகையினின்றும் உயிர்களைக் காக்கவேண்டுவது
அரசாட்சியின் பெருநோக்கமாதல் வேண்டுமென்பதாம். இவ்வாறு
அன்பினாற் செய்யப்பட்ட இது தற்பயன் குறியாது பலகாலம் சிவனை
நினைந்து அவனது சீர்பரவச் செலுத்தியபோது அருளாக உருப்படும்.
படவே, அது சிவபுண்ணியமாகிய அவனருளைத் தேடித்தரும்
என்பது.

     ஞாலம் தனி நேமி நடாத்தி - உட்பகை புறப்பகையுடன்
வென்று நீக்கி விட்டாராதலின் உலகத்தைத் தம்முடைய தனிக்காவல்
பெற முறை செலுத்தினார் என்பதாம். தனி நடாத்துதல் -
வேறொருவரும் இதனிற் பங்கிடாதபடி தாமே செலுத்துதல்.

     நேமி - அரசாணையைச் சக்கரமாக உருவகம்செய்து கூறுதல் மரபு.

     ஊழிக்காலம் - நீண்டகாலம் என்ற பொருளில் வந்தது.
இங்குக் காலத்தின் அளவு ஒருவரது வாழ்நாளின் அளவாகக்
குறுகியிருப்பினும், அதன் பயன் நீடுழியிருப்பதென்பதும் குறிப்பு.

     உயிர்கட்கு இடரான காத்து - தம்கீழ் வாழும் எல்லா
வுயிர்களுக்கும் வரும் எவ்விதத் துன்பங்களும் வாராமற் காத்து.இது
அரசாங்கத்தின் முக்கிய கடமை.
"மாநிலங்கா வலனாவான்" (121),
"நினது சிலைக்கீழ்த் தங்கி யினிதுண்டு தீங்கின்றி யிருந்தோம்" (695)
என்ற விடங்களில் உரைத்தவை பார்க்க. இக் கருத்துப் பற்றியே
கழறிற்றறிவார் நாயனார் அரசாட்சியை ஏற்பதன் முன்பு
இறைவனிடம், "யாரும் யாவும் கழறினவும் அறியும் உணர்வும்",
பிறவும் வேண்டிப் பெற்றனர் என்ற (கழறிற் - புரா - 14) வரலாறும்
சிந்திக்க.

     நீறு - மனத்தூய்மைக்கும், உருத்திராக்கம்
கண்ணோட்டத்துக்கும், சடைமுடி அபேதத்துக்கும் அறிகுறியாவன
என்றும், இவ்வியல்புகளின்றி வெறும் வேடத்துக்காக இவற்றைத்
தரிப்பதிற் பயனில்லை என்றும், மூர்த்தி நாயனார் புறவேடத்தின்வழி
அகத்திலும் ஒழுகினார் என்றும் இம்மூன்றும் சீவகாருண்ணியத்திற்கு
அறிகுறிகள் என்றும் இங்கு விசேடவுரை காண்பாரு முண்டு.

     மூர்த்தியார், இவற்றைச் சிவபெருமானது
அருளடையாளங்களாகக் கொண்டு தாங்கினாரேயன்றித் தாம்
உயிர்களின்மேல்வைத்த கருணைக் கறிகுறியாகத் தாங்கினாரல்லர்.
"வயங்கு நீறு", "ஐயன் அடையாளம்," "தாங்கும் மொய்புன்சடை"(1008)
என்றவை காண்க. பொது நோக்காக உலகியலில் உயிர்கள் மேற்
செல்வதும், சீவகாருண்யம் என்ற பெயரால் சமணர் புத்தர்
முதலாயினோர்களது அறவுரைகளிற் காணப்படுவதுமாகிய
கொள்கை வேறு. அது பசு புண்ணியத்தின்பாற்படும். அதனினும்
பெரிதாய் இங்கு மூர்த்தியார் தாங்கிய நிலை வேறு. "அமண்
குண்டரிற்போது போக்கும், வன்மைக்கொடும் பாதகன் மாய்ந்திட"
(985) என்றும், "முந்தைச் செயலாம் அமண்போய்" (1006) என்றும்,
"கலகஞ்செய் அமண்முத லாயின கட்டு நீங்கி" (1012) என்றும்
கூறியவாற்றால் மூர்த்தியாரின் திருவுள்ளநிலை விளங்கும். அவர்
உலகாளக் கைக்கொண்ட நீறு கண்டிகை சடை என்ற மூன்றும்"
ஆழ்க தீயது; எல்லாம் அரன் நாமமே சூழ்க; வையகமும் துயர்
தீர்கவே" என்ற தேவாரத் திருவாக்காலும், "ஆழ்கதீய தென்றோதிற்;
றயனெறி, வீழ்கவென்றது; வேறெல்லா மரன்பெயர் சூழ்க வென்றது;
தொல்லுயிர் யாவையும், வாழி யஞ்செழுத் தோதி வளர்கவே"
என ஆசிரியர் சேக்கிழார் பெருமான் அதற்கு வகுத்த
பேருரையாலும் அறியப்படுகின்றபடி உலகம் சிவநெறியிற்
செழித்தோங்கும் கருத்தையே விளக்குவனவன்றிச் சாமானியமாய்
அறியப்படுகின்ற சீவகாருண்ணியம் என்ற மட்டில் அமைந்துபடுவன
அல்ல. இது எல்லா வுயிர்களையும் சிவனது பெருநெறியில்
வாழவைப்பதும், அல்லாதவற்றைநீக்குவதும் ஆகிய சிறப்பாகிய
சிவபுண்ணிய மென்னும் பேரருட்டிறம். "தெவ்வுடன் வென்று"

என்றதும் காண்க. சிவன தடையாளங்களாகிய நீறு கண்டிகை சடை
என்ற சாதனங்களை வெறும் வேடத்திற்காகப் புனைந்தாலும்,
விருப்பமின்றி உண்ணினும் பயன்றரும் மருந்துபோல, அவை
அம்மட்டிற் பயன் தந்தேவிடும் என்பது நூற்றுணிபாம். அன்றியும்
அத்திருவேடத்தைக் கண்டு ஈடுபடுவார்க்கு அவை பயன்தருதல்
ஒருதலையாம். 47