1015. பாதம்பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை யிவ்வுல காண்டு தொண்டின்
பேதம்புரி யாவருட் பேரர சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணின ரண்ண லாரே.
48

     1015. (இ-ள்.) வெளிப்படை. தமது பாதங்களைவேற்றரசர்கள்
சூழ்ந்து பணிந்துபோற்றக், கெடுதிகள் பீடிக்காதவகையால்
இவ்வுலகினை அரசாண்டு திருத்தொண்டினின்றும் விலகாத
அருட்பேரரசும் ஆளப்பெற்று, இறைவனாரது கழலணிந்த
திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தனர். 48
    

     1015. (வி-ரை.) பரமன்னவர் - வேற்றரசர். வென்றனர்
என்பது மேற்பாட்டில் கூறினாராதலின், அவ்வாறு வெல்லப்பட்ட
பரமன்னரும், வெல்லப்படாமல் தாமே இவரது நீதியும் ஆணை
வலிமையும் கண்டு வந்து சாரும் மன்னரும் வந்து பாதம் பணிந்து
போற்றினர் என்க. திருவாதவூரடிகளது அமைச்சுத்திறத்தினை நயந்து
பலதேய மன்னர்களும் தாமே வந்து பணிந்து நட்புரிமை கொண்டு
நடந்தனர் என்ற செய்தியை நினைவுகூர்க.

     ஏதம்........ஆண்டு - "தெவ்வுடன் வென்று - பரமன்னவர் பணிந்து போற்ற" என்றவாற்றால் புறப்பகையால் வரும் ஏதம்
பிணியாவகையிலும், "வெம்புலன்" (1014) என்றதனால்
அகப்பகையால் வரும் ஏதம் பிணியாவகையிலும் உலகாண்டனர்
என்க.

      தொண்டின் பேதம் புரியா - சிவத்தொண்டினின்றும்
பிரியாத - சிறிதும் திறம்பாத. அருட்பேரரசு - சிவனதருளின்
கீழதாகிய பெரும்பாக்கியம். உலகாளும் அரசினும் அரனது
திருத்தொண்டாகிய அரசே பெரிது என்று காட்டுவார்
இவ்வுலகாண்டு என வாளாகூறி, அருட்பேரரசு எனச் சிறப்பு
அடைமொழி தந்து விதந்து எடுத்துக் கூறினார். உலகுயிர்மேல்
வைத்த சீவகாருண்ணியத்தினும் சிவனருட் பெருமையே பெரிதெனக்
கொண்டனர் மூர்த்தியார் என்பது காண்க. (உலகு) ஆண்டு
என்றமைந்த ஆசிரியர், (பேரரசு) ஆளப்பெற்று என்று சிறப்பித்துக்
கூறிய திறனும் இக் கருத்தே பற்றியது. மேல்வரும் பாட்டில்
களிற்றரசர் என்னாது களிற்றன்பர் என்றதும் காண்க.

     முடிமன்னர்களாகிய தமிழ் மூவேந்தர்களில் ஒருவராய்,
"மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் றமிழ்முதலாம், பன்னுகலை
பணிசெய்யப் பாரளிப்பா" ராகிய ஐயடிகள் காடவர்கோ னாயனார்
இக் கருத்துப்பற்றியே (உலக) "அரசாட்சி இன்னலெனவிகழ்ந்ததனை
யெழிற்குமரன் மேலிழிச்சி, நன்மைநெறித் திருத்தொண்டு
நயந்தளிப்பா ராயினார்" என்ற சரிதம் கேட்கின்றோம். அவரது
திருவுள்ளநிலை இக்கருத்தே பற்றிய தென்பது "படிமுழுதும்
வெண்குடைக் கீழ்ப் பாரெலா மாண்ட, முடியரசர் செல்வத்து
மும்மை - கடியிலங்கு, தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத்
தொண்டுபட், டோடேந்தியுண்ப துறும்"என்று அவர் அருளிய
க்ஷேத்திரத் திருவெண்பாவினா லறியப்படும். இதனையே வியந்து
எடுத்துப் பாராட்டி "முடியரசா, மத்திற்கு மும்மைநன் றாலரற்
காயைய மேற்றலென்னும், பத்திக்கட லையடிகள்" என்று
துதித்தருளினர் நம்பியாண்டார்நம்பிகள் (திருவந்தாதி 56). "போகம்
வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்" என்ற திருவாசக
முதலியவை காண்க.

"கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்;
மேலை யிந்திர னரசினைக் கனவினும் வெஃகேன்;
மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்;
சால நின்பதத் தன்பையே வேண்டுவன் றமியேன்"

(கந்தபுரா - யுத்தகாண் - பானு - வதைப்பட - 154) என்று
வீரவாகுதேவர் கேட்ட வரத்தின் உள்ளுறையும் கருதுக.

     அண்ணலார் - பெருமையுடையவர். பெரும்பேறாகிய
சிவனடிப் பேறு பெற்ற இடமாதலின் இப்பெயராற் கூறினார். ஏகாரம் தேற்றம்.

     பல மன்னர்கள் - என்பதும் பாடம். 48