1016.
|
அகல்பாறையின்
வைத்து முழங்கையை யன்று தேய்த்த விகலார்களிற் றன்பரை யேத்தி முருக னாராம்
முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி மாட
வீதிப்
புகலூர்வரு மந்தணர் தந்திறம் போற்ற லுற்றாம்.
49 |
(இ-ள்.)
வெளிப்படை. அகன்ற சந்தனப் பாறையில் வைத்து
அன்று தமது முழங்கையை (எலும்புதிறந்து மூளைகாணத்) தேய்த்த,
போர்வல்ல யானைமேற் போந்த அன்பராகிய மூர்த்தியாரைத்
துதித்து, முகில்சூழ்ந்த வாசனையுடைய சோலைகள் சூழ்ந்த
நெருங்கிய ஒளி பொருந்திய மாடவீதியுடைய திருப்புகலூரில்
அவதரித்த முருகனாராகிய அந்தணரது திறத்தினைத்
துதிக்கத்
தொடங்குகின்றோம்.
(வி-ரை.)
இது கவிகூற்று. ஆசிரியர் தமது மரபின்படிஇதுவரை
கூறிவந்த சரிதத்தை முடித்துக் காட்டி, மேல்வரும் சரிதத்துக்குத்
தோற்றுவாய் செய்கின்றார்.
அகல்பாறை
- சந்தனம் தேய்க்கும் இடமகன்ற பாறை.
"வட்டம் திகழ்" (987). அகலுதல் - பெருகுதல்
என்று கொண்டு
புகழாலும் சிறப்பாலும் பெருகும் என்றுரைத்தலுமாம். "மடங்கொன்
றறிவகற்றுங் கல்வி" (குமரகுருபரர் - நீதி நெறி விளக்கம்) என்றது
காண்க. ஏனைக்கற்கள்போல் வெறும்பாறையாய் நின்றொழியாது இது
திருவாலவாயுடையார்க்குச் சந்தனக்காப்புத் தர உதவுதலும், மூர்த்தயாரது செழுமுழங்கை தேய்க்கப்பெற்று
வாசமெல்லாம் கமழ
விளங்குவதும், இவை காரணமாக அன்று முதல் இன்றுவரையும்
இனிமேலும் புகழ்நீளப் பெறுவதுமாகிய பாறை என்றதாம். இனி,
அகல் - நீங்கும் என்று கொண்டு மாயாபதார்த்தங்களா யொழியும்
ஏனைக்கற்பாறைகளின் வகுப்பினின்றும் நீங்கும் - சிவசாதனமாகும்
- என்ற குறிப்புப்பட உரைத்தலுமாம்.
முழங்கையை
- இறைவனது மெய்ப்பூச்சுக்குரிய
சந்தனக்கட்டைக்கு ஒப்பாகத் தேய்க்க உதவும் முழங்கை (987)
தோல் இரத்தம் நரம்பு எலும்பு மூளை என்ற புலால்கமழும்
தன்மைபோய் நல்ல மணமுடைப் பண்டமாக இறைவன் ஏற்றுக்
கொண்டதும், பின்னர் இறைவனருளினால் தேய்ந்த புண் ஊறு
தீர்ந்து வண்ண நிரம்பி வாசங்கலந்து விளங்கியதுமாகிய முழங்கை
என்று காட்டியபடி (990).
அன்று
- பாதகச் சமண அரசன் மிறை செய்து (983)
சந்தனக்கட்டை தேடிக்கொள்ளும் துறையும் அடைத்துக்
கொடுங்கோன்மை செய்த அதனால் (984) இறைவனுக்குஅணிநற்றிரு
மெய்ப்பூச்சுக்கு உதவும் தமது நியதியாகிய திருப்பணிக்கு முட்டு
நேர்ந்த அன்று (987). அன்று முன்னறிசுட்டு.
தேய்த்த
- கட்டும் புறத்தோல் நரம்பு என்பு கரைந்து தேயச்,
சோரி கலுழ்ந்து, என்புதிறந்து, மூளை புல்லும்படி (987 - 988)
அன்பின் துணிவினால் முழங்கையினைத் தேய்த்த என்ற சிறப்புக்
காட்டியது.
இகலார்
களிற்று அன்பர் - அன்பின்றுணிவினால்
கைதேய்த்த பின் இறைவனருளாலே அரசராக யானையால்
எடுக்கப்பட்டுப் பிடரிமேற் கொள்ளப்பெற்ற அன்பர் (1002). இகல்-
போர்வன்மை. களிறு - அரசயானை. "பெய்ம்மாமுகில் போன் மதம்பாய் பெருகோடை நெற்றிக்,
கைம்மா" (998). யானையின்
மேல் காணப்பட்ட அதனால் உலகிற்கு அரசராகி விளங்கியும், தாம்
அன்பராகவே நின்று இறைவனது திருவடையாளங்களாகிய நீறு -
கண்டிகை - வேணி என்ற மும்மையினால் உலகாண்டவர்
என்று
காட்டும் பொருட்டுக், களிற்றரசர் என்னாது
களிற்றன்பர் என்றார்.
இதற்கு இவ்வாறன்றி, அன்பாகிய மதம் பொருந்திய யானைபோன்ற
அன்பர் என்று முன் உரைகாரர்கள் உரைத்தனர்.
ஏத்திப்
போற்றலுற்றும் - என்க. துதித்து அதன்
துணையானே மேல் துதிக்கலுறுகின்றோம் என்றபடி.
முருகனார்ஆம்
- அந்தணர் - என்று கூட்டுக.
அந்தணர்களுள், தாம் செய்த திருப்பணிகளின் தன்மையினால்
முருகனை ஒப்பார் என்று எடுத்துச் சொல்லத் தக்க திறமுடையாராக
ஆகும் என்ற குறிப்பும் காண்க. 1025 - 1026 - 1028
திருப்பாட்டுக்களில் இவர் செய்த திருப்பணியும் சிவபூசைத் திறமும் ஊரும் பேரும் மரபும்
கூறி விரிக்கப்படுவன. இதனால்
வருஞ்சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தபடியாம்.
"தேவு சான்மணிப்
பீடத்தி லீசனைச் சேர்த்தி, யாவினோரைந்து
மமுதமும் வரிசையா லாட்டித், தாவி லாததோர் வாலிதா மணித்துகில்
சாத்திப், பூவின் மாலிகை செய்யசாந் தத்தொடும் புனைந்தான்"
(குமாரபுரிப்படலம் - 68), "முழு தொருங்
குணர்ந்திடு முருகன்
யாவருந், தொழுதகு மிறைவனூற் றொடர்பு நாடியே, விழுமிய
கண்ணுதல் விமலன் றாண்மலர், வழிபடல் புரிந்தனன் மனங்கொள்
காதலால்" (மீட்சிப்படலம் - 33) முதலிய கந்தபுராண வரலாறுகளை
இங்குக் கருதுக.
முகில்
சூழ்..........புகலூர் - முருகனார் அவதரித்த திருப்புகலூர் என்ற நகரச்
சிறப்பு. இதனைப் பின்னர்
விரித்துக்கூறுவர். அன்றியும் முகில்சூழ் நறுஞ்சோலை அவர்
மலர்ச் சோலைகளிற்சென்று கோட்டுப்பூ முதலியவற்றை எடுத்துத்
தொடுத்துச் சாத்திப் பணிசெய்த திருத்தொண்டினைக் குறிப்பித்ததும்
காண்க. மேல் வரும் பாட்டிலும் இவ்வாறே குறிப்பித்தலும்
கண்டுகொள்க. பிறவி வெப்பத்துக்கு அஞ்சிய
உயிர்கள்
புகலடையும் சிறப்புப்பற்றிப் புகலூர் எனப்படும் என்பர். அதனைக்
குறிப்பாலுணர்த்துதற்கு இவ்வாறு அந்நகரத்தின் தண்மைச்
சிறப்பினால் தொடங்கிக் காட்டினார். மேல்வரும் புராண இறுதியிற்
றலவிசேடத்திற் கண்ட சிறப்புக்களும் பார்க்க.
திறம் - தொண்டின்
வரலாறும் பண்பும். "மெய்ம்மைத்
தொண்டின்றிறம் போற்றி" (1030) என
வரும்புராணத்திறுதியில்
முடித்துக் காட்டியதும் காண்க.
|