1019.






நண்ணு மிசைதேர் மதுகரங்க ணனைமென் சினையின்
                                 மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ வாச மலர்வா யேயல்ல; தண்ணென் சோலை யெம்மருங்குஞ் சாரு மடமென்
                                 சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன்
                             பொழியுமால். 3 

     (இ-ள்.) நண்ணும்.....பொழிவ - பொருந்திய இசை தேர்கின்ற
வண்டுகள் மலரும் பருவத்து அம்புகளையுடைய மெல்லிய
கிளைகளின் பக்கங்களில் பறக்கவே நிறமும் மதுரமுமுடைய
தேனினைப் பொழிவன; வாச மலர்வாயே அல்ல - மணமுடைய
மலர்களின் அலர்ந்த வாய்கள் மட்டுமே அல்ல;
தண்ணென்.....மணிவாயும் - குளிர்ச்சி பொருந்திய சோலைகளில்
எல்லாப்பக்கங்களிலும் சார்கின்ற இளமையும் மென்மையும் உடைய
நாகணவாய்ப் புட்களின் பண்பொருந்திய இனிய மொழியைச்
சொல்லும் வாயும்; பதிகச் செழுந்தேன் பொழியும் -
திருப்பதிகங்களாகிய செழிய தேனினைப் பொழியும். (ஆல் - அசை)

     (வி-ரை.) மதுகரம் - வண்டு. நண்ணும் - மதுகரங்கள்
என்று கூட்டுக. இசை தேர் மதுகரங்கள். வண்டுகள்
இயற்கையுணர்வினால் இசைகளைத் தேர்ந்து பண்பாடுவன
என்பதனை "கள்ளார், வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா
னீச்சரத்தாரே", "சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த
வண்டு, வேறாய வுருவாகிச் செவ்வழி நற் பண்பாடு மிழலை யாமே"
(பண் - மேகராகக் குறிஞ்சி - மிழலை - 7.) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரங்களும், "அளிதேர் விளரி, ஒலி நின்ற
பூம்பொழில்" (நீத் - விண் - 10), "விரையார் நறவந்,ததும்புமந்
தாரத்திற் றாரம் பயின்றுமந் தம்முரல்வண், டதும்புங் கொழுந்தேன்"
(மேற்படி 36) என்ற திருவாசகமும், முதலிய திருவாக்குக்களாலறிக.
"அரும்பருகே சுரும்பருவ வறுபதம் பண்பாட" (தக்கராகம் -
கலயநல்லூர் - 1) என்ற நம்பிகள் தேவாரக் கருத்தும் இங்குப்
பொலிவுறுதல் காண்க. 948 - ல் உரைத்தவையும் பார்க்க.

     நனை - அலரும் பருவத்து அரும்புகள். இவையே வண்டுகள் ஊதி அலர்த்தப் பெறுவனவும் அலரும்போது தேன் சொரிவனவுமாம்.

     அலைய- சுற்றிப்பறக்க. அலரும் பருவத்துப்புதுப்பூக்களின்
மருங்கு வண்டுகள் சுற்றிப்பறந்து மொய்க்கும் இயல்பு காண்க.
உணவு பிச்சைக்கு இச்சித்துப் பாடி வருவார்க்குக் கதவு திறந்து
பிச்சையிடுவார்போல மதுகரங்கள் இசை தேர்ந்து பாடி மருங்கு
அலைய அவற்றுக்கிரங்கி மலர்கள் இதழ்க் கதவந் திறந்து
தம்பாலுள்ள தேனை அவை உண்ணக்கொடுத்துப் பொழிவன என்ற
உருவகக் குறிப்பும் காண்க. அலைய என்று இலேசுபடக் கூறிய
அதனால் சிறுசிறு துளிகளாகப் பல பூக்களினும் தேடித் திரிய என்ற
பொருள் தொனிப்பதும் காண்க. வண்ணம் - மதுரம் - என்ற
அடைமொழிகள் தேனின் அழகிய நிறமும் சுவையும் குறித்தன.

     மலர்வாயேயல்லாமல் - மணிவாயும் - தேன் பொழிவ
என்றபடியாம். மலர்வாய் - மலர்களின் திறந்த (அலர்ந்த) வாய்.
மணிவாய் தேன் பொழிவ - மணிவாய் -
அழகிய - (அல்லது)
மணிபோன்ற - வாய். பதிக ஒலியைத் தேன் என்று
உருவகப்படுத்தினார். பொழிதல் இங்கு இனிய ஒலியை
வெளிப்படுத்தல் குறித்தது. சாரிகை - நாகணவாய்ப்புள்.
பண்ணின் கிளவி வாய்
-
பண்ணுடைய சொல் போன்ற ஒலியைத்
தோற்றுவிக்கும் வாய்.

     மலரின்தேனை மதுரத்தேன் என்றதனால் அது
புலனின்பமாகிய நாவின்சுவை ஒன்றே தருவதாம் என்பதும்,
பதிகத்தைச் செழுந்தேன் என்றதனால் அது புலனின்பமாகிய
செவிச்சுவை தருவதனோடு உயிர்க் குறுதியாகிய அன்புச் சுவையும்
தரும் என்பதும் குறிப்பு. இது குறிக்கவே முன்னதனை மலர்வாய்
என்று வாளா கூறிய ஆசிரியர், பின்னதனை பண்ணின் கிளவி
மணிவாய்
என்று சிறப்பித்துக் கூறினார். பண்கள்
திருப்பதிகங்களுக்குச் சிறப்பாயுரியனவாதலும் காண்க.

     சோலை - நனைமென் சினை- என்பன "போது சூழும்
தடஞ்சோலை" (1017) என்ற முதற்பாட்டின் கருத்தையே தொடர்ந்து
கூறியனவாம். மேல்வரும் பாட்டில் "வண்டுபாட" என இக்கருத்தையே
தொடர்ந்து செல்லும் பொருளியைபும் கண்டு மகிழ்க.

     மதுகரங்கள் நனைமென் சினையின் மருங்கு அலைய -
என்ற கருத்தைப்பற்றி 948 - ல் உரைத்தவை பார்க்க. சாரிகையின்
மணிவாய்
பதிகச் செழுந்தேன் பொழிவ
என்ற கருத்தைப்பற்றி
93 - ல் பார்க்க.

     திருநாவுக்கரசுகளும், ஆளுடைய பிள்ளையாரும்,
சிறுத்தொண்டர் திருநீல நக்கர் முதலிய திருத்தொண்டர் கூட்டமும்
பலகாலம் இத்திருத்தலத்தில் ஒருங்கு கூடி முருகநாயனாரது
திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர் என்பதும், அரசுகள் மேலும்
பலகாலம் இங்குத் தனித்து வாழ்ந்து அளவிறந்த திருப்பதிகங்களை
(திருநா - புரா - 413 - 414 - 415) அருளிச்செய்து இங்கே
இறைவன்றிருவடியடைந்தனர் என்பதும், அவ்வவர் சரிதங்களால்
அறியப்படும். (திருஞான - புரா - 488 - 525; திருநா - புரா - 231
- 245; மேற்படி 412 - 427 பார்க்க.) அவ்விரு பெருமக்களுமருளிய
தேவாரத் திருப்பதிகங்களை அளவிறந்த மக்கள் அந்நாளிற்
பயின்றிருத்தல் வேண்டும். "பிள்ளையா ரமர்ந்த, துங்க மாமடந்
தன்னிடைத் தொண்டர்தங்குழாங்கள்,
எங்கு மோதிய திருப்பதி
கத்திசை யெடுத்த, பொங்கு பேரொலி" (திருஞான - புரா - 679),
"திருப்பதிகச் செழுந்தமிழின் றிறம்போற்றி" (திருநா - புரா - 244)
முதலியவற்றால் அந்நாள்களில் திருக்கூட்டத்திலிருந்த அடியார்கள்
திருப்பதிகங்களைப் பயின்று ஓதினர் என்பதறிகின்றோம்.

      திருப்பதிகங்களை மக்கள் பயின்றதனால் அதுகேட்டுப்
பூவைகளும் பயின்றன என்க. மக்கள் அப்புட்களைப் பதிகங்களிற்
பயிற்றலுமுண்டு. இச்சிறப்புப் பற்றியே "பதிகந் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்" என்று வகைநூல் முருகனாரை அறிவித்தது.
அத்துணைகொண்டு, ஆசிரியரும் அக்கருத்தேபற்றி இப்பாட்டிலும்,
மேல்வரும் பாட்டிலும், 1026 லும் திருப்பதிகங்களைச் சிறப்பித்தனர்.
சாரிகை (பூவை) பாடுவன என்பதுபற்றி "பறக்குமெங் கிள்ளைகாள்!
பாடுமெம் பூவைகாள்!" (கொல்லி - திருவாரூர் - 2 ஆளுடைய
நம்பிகள்), "பூவை நல்லாய்!...........விகிர்தனுக்கென் மெய்ப்பயலை
விளம்பாயே" (ஆளுடையபிள்ளையார் - பழந்தக்கரா - தோணிபுரம்
- 9) முதலிய திருவாக்குக்கள் காண்க. பண்ணின் கிளவி
மணிவாய் -
"பொற்பமைந்த வாயலகிற் பூவை" என்ற தேவாரக்
கருத்துக்காண்க.