1023.







புலரும் பொழுதின் முன்னெழுந்து, புனித நீரின்
                             மூழ்கிப்,போய்,
மலருஞ் செவ்வித் தம்பெருமான் முடிமேல், வானீ
                               ராறுமதி
யுலவு மருங்கு முருகுயிர்க்க, நகைக்கும் பதத்தி
                               னுடன்பறித்த
வலகின் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை
                        களிலமைப்பார், 7

     1023. (இ-ள்.) வெளிப்படை. விடிவதனுக்கு முன் எழுந்து
தூய நீரில் முழுகிப் போய்த், தமது பெருமானுடைய திருமுடியின்
மேலே கங்கையும் மதியும் உலவுகின்ற பக்கத்தில் அலர்கின்ற
பருவத்தில் வாசனை வீசத்தக்கதாக மலரக் கூடிய பக்குவம்
நோக்கிப் பறித்த, அளவில்லாத பூக்களை வெவ்வேறாகத்
திருப்பூங்கூடைகளிற் சேர்ப்பாராய், 7

     1023. (வி-ரை.) புலரும்பொழுதின் - புலர்தல் - இரவு
விடிதல். பொழுதின் - பொழுதினுக்கு. பொழுதுமுன் என்பது
பாடமாயின் பொழுதில் இரவி எழுவதன் முன் என்க. முன்பொழுது
என மாற்றி வைகறை என்பாருமுண்டு.

     புனித நீரின் மூழ்கி - "வைகறை யுணர்ந்து போந்து
புனன்மூழ்கி" (559) என்றவிடத் துரைத்தவை பார்க்க. "புலரி
யெழுந்து புனன்மூழ்கிப் புனித வெண்ணீற்றினு முழுகி" என்ற
கழறிற்றிவார் புராண (8) முங் காண்க.

     போய் - நந்தனவனத்துக்கும், பூமரம் - பூச்செடி -
பூக்கொடிகள் இருக்கும் புறவுகளுக்கும் போய். மலரும் செவ்வி
- மலர்கின்ற பக்குவத்தில். முடிமேல் - செவ்வி (யில்) -
முருகுயிர்க்க என்க.

     நகைக்கும் பதத்தில் - இது பறிக்கும்போதுள்ள பூவின்
பதம் குறித்தது. நகைத்தல் - வாய்திறத்தல். பதம் - பக்குவம். இனி,
நகைக்கும் - சிவபெருமான் றிருமேனியில் அணியப்படும் பேறு
தமக்குக் கிடைத்தமைபற்றி மலர்கள் மகிழ்ச்சிக்குறியாக நகைக்கும்
என்ற தற்குறிப்பேற்றக் குறிப்பும், மூடியிருந்த இதழ்கள் வாய்விட்டு
அலர்தல் வாய்திறந்து சிரித்தல்போலும் என்ற உவமக்குறிப்பும்
காண்க.

     வெவ்வேறு திருப்பூங் கூடைகளில் என்றது மலர்களை
இனம்பற்றியும் வன்மை மென்மை முதலிய தன்மைபற்றியும்
பறிக்கும்போழுதே வேறுவேறு
கூடைகளில் அமைத்தல் குறித்தது.
இவ்வாறு செய்யாவிடில் அவற்றைத் தேர்ந்து தொடுத்தலில்
தாமதமும் சிதைவும் நேரிடுமென்க.

     இப்பாட்டினால் மலர் எடுக்கும் காலமும், மலர் எடுப்பதன்
முன் இன்றியமையாது செய்துகொள்ளத்தக்க நியமங்களும், மலர்கள்
பறிக்கும் பக்குவமும், பறித்த மலர்களைச் சேர்க்கும் நியமமும்
கூறப்பட்டன. 7