1024.





கோட்டு மலரு, நிலமலருங், குளிர்நீர் மலருங்,
                            கொழுங்கொடியின்
றோட்டு மலரு மாமலருஞ், சுருதி மலருந் திருவாயிற்
காட்டு முறுவ னிலவலரக் கனக வரையிற்
                                பன்னகநாண்
பூட்டு மொருவர் திருமுடிமேற் புனைய லாகு
                            மலர்தெரிந்து,   8

     1024. (இ-ள்.) வெளிப்படை. கோட்டுப்பூக்களும்,
நிலப்பூக்களும், குளிர்ந்த நீர்ப்பூக்களும், கொழுத்த கொடிகளிற்
பூக்கும் இதழ்களையுடைய பூக்களும் ஆகும் (இந்நான்கு) மலர்களும்,
வேதங்கள் வெளிப்படும் திருவாயிற் காட்டும் சிறுமுறுவலின்
ஒளியலரும்படி மேருமலையிற் பாம்பாகிய நாணினைப் பூட்டிய
ஒருவராகிய சிவபெருமானது திருமுடியில் புனையக்கூடிய
மலர்களாகத் தெரிந்தெடுத்து, 8

     1024. (வி-ரை.) புனையலாகும் - கோட்டுப்பூ, நிலப்பூ,
கொடிப்பூ, நீர்ப்பூ எனப் பூக்களை நான்குவகையாகப் பிரித்தனர் நம்
முன்னோர். அவற்றுள் இன்ன இன்ன தெய்வங்களுக்கு இவையிவை
சாத்துதற்குரியன என்பதும் நூல்களால் விதிக்கப்பட்டுள்ளன. அவ்
விதிகளின்படி சிவபெருமானுக்குச் சாத்துதற்கு உரியன இவை என்று
தெரிந்து பறித்துக்கொணர்ந்தனர். அவை ஆத்தி முதலியனவாகக்
கீழ் விரித்தவை காண்க.

     தெரிந்து - மலர்களின் இனம், அவை அலரும் நேரம்,
பறிக்கும் நேரம், நாள், புழுக்கடி சிதைவு முதலிய இல்லாத தன்மை
முதலியவற்றைத் தேர்ந்து. முழுதும் கண்ணாற் பார்த்துத்
தெரிந்துகொள்ள வியலாத புலரிக்காலமாதலின் கையின் பழக்கத்தாற்
றெரிந்
து என்று கொள்க. 559 பார்க்க.

     மலர் - பெரும்பான்மைபற்றி மலர்களைக் கூறினாரேனும் இனம்பற்றிப் புனையலாகும் இலைகள் வேர் முதலியவையும்
கொள்ளப்படும்.

     கோட்டுமலர் - கோடு - கொம்பு. மரங்களிற் பூக்கும்
மலர்கள். கொன்றை - மந்தாரம் - வேங்கை - சண்பகம் முதலியன.
இதனுள் கூவிளம் (வில்வம்) அடங்கும்.

     நிலமலர் - செடிகளிற்பூக்கும் மலர்கள். நந்தியாவட்டம் -
வெள்ளெருக்கு - அலரி - கரந்தை - தும்பை முதலியன.

     கொடியின் தோட்டுமலர் - கொடிகளிற்பூக்கும்மலர்கள்.
தோடு- இதழ். தோட்டுமலர் - இதழ்களையுடைய பூ. மல்லிகை -
முல்லை - சாதி முதலியன.

     நீர்மலர் - நீரிற்பூக்கும் மலர்கள். தாமரை - நீலம்-செங்கழுநீர் முதலியன. ஆம்மலரும் - ஆம் ஆகும். மேற்சொல்லிய நான்கு
வகைகளையும், உம்மை முற்றும்மை. மேல் உள்ள உம்மைகள்
நான்கும் எண்ணும்மைகள்.

     இவை பற்றி 240ல் உரைத்தவையும் பார்க்க. ஆ மலரும்
சுருதி
என்று கூட்டி, ஆ - பசுக்கள் என்று கொண்டு,பசுக்களாகிய
உயிர்கள் கட்டவிழ்ந்து விகசிக்கச் செய்யவல்ல வேதாகமங்கள்
என்றுரைப்பினுமாம். மலர்தல் - கட்டு நீங்கி விரிதல். "அங்க மாறு
முடனிறைந்த, சந்த மறைகளுட்படமுன் றலைவர் மொழிந்த
வாகமங்கள், முந்தை யறிவின் றொடர்ச்சியினான் முகைத்த
மலரின்வாசம்போற், சிந்தை மலர உடன் மலருஞ் செவ்வி யுணர்வு"
(சண்டீசர் - புரா - 13); "புலன் கொளுவ மனமுகிழ்த்த, சுருணீக்கி
மலர்விக்குங் கலைபயிலத் தொடங்குவித்தார்" (திருநா - புரா - 20)
என்ற கருத்துக்கள் காண்க. இப்பொருளில் மலரும் - மலர்விக்கும்
எனப் பிறவினைப் பொருளில் வந்தது.

     சுருதிமலரும் - இங்கு மலர்தல் வெளிப்படுதல் என்ற
பொருளில்வந்தது. "திருவாய் மலர்ந்தருளுதல்" என்ற வழக்கும்
காண்க.

     இப்பாட்டில் மலரும் என்று பலமுறை அணிபெற
அடுக்கிக்கூறியது சொற்பின் வருநிலை என்ற அணி. இவ்வாறு
அடுக்கிக்கூறுதல் ஆசிரியரின் தனிச்சிறப்பு. 553 முதலியவை
பார்க்க.

     நிலவு அலர்தலாவது - புன்முறுவல் பூத்தல். புன்சிரிப்பின்
ஒளியை நிலவு என்று உருவகம் செய்தார். அதுதான் முப்புரத்தார்க்கு
நிக்கிரகமாகிய அருளாதலாலும், அதில் வாழ்ந்த அன்பர் மூவர்க்கு
அனுக்கிரகமாகிய அருளாதலாலும்
இவ்வாறு நிலவு என்றார்.
முறுவல்நிலவு அலா நாண் பூட்டும் என்க. முறுவல் அலரும்படி
வில்லில் நாண் பூட்டியது என்றது, நாண் பூட்டியமட்டில் அமைந்து
நிற்க, அது செய்யவேண்டிய காரியத்தை முறுவல் முடித்தது என்ற
சரிதத்தை அணிபெறக் கூறியபடியாம்.

     கனகவரை - பொன்மலை - மகாமேரு. பன்னகநாண்
பூட்டும் - திரிபுரமெரித்த காலத்தில் ஆதிசேடனை மேருவில்லிற்கு
நாணாகக்கொண்ட புராணசரிதம் குறித்தது.

     தெரிந்து - கொண்டுவந்து - இருந்து - சமைத்துச் சாத்துவார்
- அமைத்துச் - சென்று - சாத்திப் - புரிந்து - பரிந்துள்ளார் - என
வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடித்துக் கொள்க. 8