1026.






ஆங்கப் பணிக ளானவற்றுக் கமைத்த காலங்
                               களிலமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ் சாத்தி வாய்ந்த
                               வர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார்; பரமர் பதிகப் பற்றான
வோங்கிச் சிறந்த வஞ்செழுத்து மோவா நாவி
                              னுணர்வினார்.
10

     1026. (இ-ள்.) வெளிப்படை. ஆங்கு அந்தப்
பூத்திருப்பணிகளை அவற்றுக்கு விதிக்கப்பட்ட காலங்களில்
அமைத்துச், சுமந்துகொண்டு சென்று, அன்போடு சாத்திப், பொருந்திய
அருச்சனைகளை விதிப்படி புரிந்து அன்பு செய்தார்; சிவபெருமானது
திருப்பதிகப் பற்றாகிய உயர்ந்து சிறந்த திருவைந்தெழுத்தையும்
விடாமல் நாவிற்கொண்டவுணர்வை யுடையவராயினார். 10
       

     1026. (வி-ரை.) அப்பணிகள் - அலங்காரத்துக்குரிய அந்த
மாலை வகைகள். அமைத்த காலங்கள் - அவ்வவற்றுக் குரியனவாய்
விதிக்கப்பட்ட காலங்கள. இவற்றை வைகறை, எற்பாடு, நண்பகல்,
மாலை, யாமம் என்ற சிறுபொழுது ஐந்து என்பது தமிழ் மரபு.எற்பாடு
-உதயகாலம்; வைகறை - உதயத்துக்கு முன் ஐந்து நாழிகை.
சிறுபொழுது ஆறு என்பாரு முண்டு.

     அமைத்த காலம் - உரியனவாய் விதிக்கப்பட்ட காலம்.
அமைத்து - மாலை வகைகளில் ஏற்றவற்றைக் கட்டி, அமைத்தல்
- கட்டுதல். முன்பாட்டில் சமைத்து
என்றதும் அது. தாங்கிக்கொடு
வந்து - வெவ்வேறு திருப்பூங்கூடைகளில் 9 அமைத்த பூக்கள்
வெவ்வேறு மாலைகளாகச் சமைக்கப்பட்டபடியால் ஒரு ஆள்
தாங்கிச் செல்லும் சுமையாமாதலின் தாங்கி என்றார். "போதொடு
நீர்சுமந்தேத்திப் புகுவார்", "பூவோடு நீர்சுமக்கு நின்னடியார்"
முதலிய திருவாக்குக்களின் குறிப்புங் காண்க. அன்றியும்
இறைவனுக்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமங்களைக் கீழ்த்தொங்க
வைக்கலாகாது என்றும், தோளிலும், மேலே தூக்கிப் பிடித்த
தண்டு நுனியிலும் தாங்கிச் செல்லவேண்டுமென்றும், உள்ள
விதியினால் மேலே தாங்கிக்கொடு வந்தார் என்பதுமாம்."கோலப்பூங்
கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு" (560) என்றதும், பிறவும்
காண்க.

     அன்பினொடும் சாத்தி - மலர் பறித்தல் - தொடுத்தல் -
சாத்துதல் முதலிய செயல்கள் யாவும் மனத்துள் நிறைந்த அன்போடு
செய்யப்படுதல் வேண்டும். "நெஞ்சில் வாலிய நேசங் கொண்டு" (560),
"ஊன மின்றி நிறையன்பால் உருகும் மனத்தார்" (1021), "ஆளான
மெய்ம்மைத் தவத்தால்" (1022) என்றவை காண்க.

     முருகனார், அன்போடு இறைவனுக்கு மாலைகள் சாத்தி
மகிழ்ந்து குறிப்பறிந்து கண்டுருகிய இத்திறத்தை ஆளுடைய
பிள்ளையார் இத்தலத் தேவாரத்தில் சிறப்பித்துப் பாராட்டியருளியது
காண்க.

"தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலங்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே"     3
"பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய விரிபுகலூரர்"                    4
"மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய்
                                  முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே"          5
"தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழினரம்
                                    பெடுத்துத்

துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூர்"       7

என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங்களும், பிறவும் காண்க.

     வாய்ந்த அருச்சனைகள் - அருச்சனை என்பது இங்கு
நீராட்டுதல், சந்தனமாதிய மெய்ப்பூச்சிடுதல், பூச்சூட்டுதல், விளக்கும்
புகையும் ஏந்துதல், துதித்தல், மலர்களா லருச்சித்தல் முதலிய
பூசனை வகை எல்லாம் குறித்தது. அவையும் காலந்தோறும்
வெவ்வேறு செய்யத்தக்கன. அவற்றையும் விதித்தபடி செய்தனர்
என்பதாம். முன்னர்க்காட்டிய புகலூர் வர்த்தமானீச்சரத் தேவாரம்
3வது திருப்பாட்டுக் காண்க. முருகனார் வர்த்தமானீச்சரமுடைய
ஆளுடை நாயகரைத் தமது ஆன்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு
வழிபட்டுவந்தனர். மேல் 1028ம் திருப்பாட்டிலும் இதனை விளக்குதல்
காண்க. வாய்ந்த - சிவபூசைக்குரிய அங்கங்கள் எல்லாம்
பொருந்தப் பெற்ற. பாங்கில் - விதித்த முறையில். பரிதல் -
அன்பினால் மன முருகுதல்.

     பரமர் பதிகப்பற்றான ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்து -
சிவ
நாமம் தெய்வநான் மறைகளின் உள்ளுறையாக விளங்குவது
போலத் தமிழ்மறையாகிய தேவாரத் திருப்பதிகத்தினும் உள்ளுறைப்
பொருளாய் விளங்குவது. அஞ்செழுத்து - 138ல் உரைத்தனவும்,
பிறவும் பார்க்க. "பதிகச் செழுந்தேன்" (1019), "அண்டர் பெருமான்
றிருப்பாட்டி னமுதம்" (1020) என முன் கூறியவையும், "பதிகம் திகழ்
தருபஞ்சாக் கரம்பயில் நாவினன்" என வழிநூலுட் கூறியவற்றையும்
கருதுக.

     ஓவா நாவின் உணர்வினார் - நாவானுரைத்தலும்
மனஉணர்ச்சியிற் கணித்தலும் என்கின்ற இரண்டு வகையானும்
சீபஞ்சாக்கரத்தை எப்போதும் பயின்று வத்துள்ளார் என்க.
பூத்திருப்பணி செய்வோர் வாய்கட்டிப் பணிசெய்யவேண்டும்
நியதியுடையாராதலின் வாக்கினால் மந்திரம் ஓதிப் பணிசெய்தல்
இயலாதென்பது முன் உரைக்கப்பட்டது. 559-ம் "அன்பு நாரா
வஞ்செழுத்து நெஞ்சுதொடுக்க வலர்தொடுத்தே" (ஏயர் - புரா-226)
என்றதும் பிறவும் பார்க்க. 10