1030.




அரவ மணிந்த வரையாரை யருச்சித் தவர்தங்
                               கழனிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின்                               றிறம்போற்றிக்,
கரவி லவர்பால் வருவாரைக் கருத்தி லுருத்தி
                                ங்கொண்டு
பரவு மன்பர் பசுபதியார் பணிந்த பெருமை
                             பகர்வுற்றேன். 
14

     (இ-ள்.) வெளிப்படை. பாம்பை அணிந்த அரையினையுடைய
சிவபெருமானாரை அருச்சித்து அதன்பயனாக அவருடைய
திருவடியின் கீழே பொருந்தும் புகலூர் முருகநாயனாருடைய
உண்மைத் திருத்தொண்டின் திறத்தினைத்துதித்து, இனிக்,
கரவில்லாதவரிடத்து வருவாராகிய சிவபெருமானைமனத்துட்கொண்டு
திருவுருத்திரத்தினால் துதித்த அன்பராகிய பசுபதியார் சிவனைப்
பணிந்த பெருமையினைச்சொல்லப்புகுகின்றேன்.

     (வி-ரை.) அரை அரவு அணிந்தாரை - சிவபெருமான்
அரவத்தை அரை ஞாணாகவும் அற்றத்தை மறைக்கும்மறைப்பாகவும்
பூண்பர் என்பது மரபு. "பைவாய் பாம்பரையார்த்த பரமனை"
(அரசுகள் - திருவங்கமாலை), "அற்றமறைப்பது முன்பணியே"
(ஆளுடைய பிள்ளையார் - பழம்பஞ்சுரம் - திருவியமகம் -
கழுமலம் - 1), "அரையார்த் திட்டதும் பாம்பு" (நம்பிகள் -
கோத்திட்டை - 1) முதலியன காண்க.

     அருச்சித்துக் - கழற்கீழ் - விரவு என்று கூட்டுக.
அருச்சித்ததனால் எனக் காரணங்கூறியபடி. "முன்செய்த
பூசையதனாற் புக்கருளி" (1029) என்றது பார்க்க.

     அருச்சித்த முறைகள் முன்னுரைக்கப்பட்டன.

     மெய்ம்மைத் தொண்டு - "மெய்ம்மைத் தவம்" (1022)
என்றது காண்க. "தன்னெஞ்சறிவது பொய்யற்க" (குறள்) என்றபடி
நெஞ்சறிந்தவகையில் ஒன்றானும் பிறழாதவண்ணம் செய்த
திருத்தொண்டு. தொண்டின்திறம் - தொண்டினை முழுதும்
போற்றுதல் இயலாது; அதன் திறம் - தன்மை - ஒரு சிறிது
மட்டும் போற்றப்பட்டதென்பது குறிப்பு.

     காவு இல்லவர்பால் வருவார் - "கரவார்பால் விரவாடும்
பெருமானை" என்றும், "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை"
என்றும் அப்பர் சுவாமிகள் அருளியவை காண்க.

     கருத்திற்கொண்டு உருத்திரம் பரவும் என்க.
உருத்திரத்தினாற் பரவும். (அன்பராகிய) பசுபதியார என்க.இதனால்
இனி அடுத்துவரும் புராணத்திற்குரிய நாயனாரதுபெயரும் அவர்
செய்த திருத்தொண்டும் கூறியவாறு.

     பணிந்த பெருமை - தொண்டுசெய்த பெருமையுடைய
வரலாற்றினை.

     இதனால் ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த
சரிதத்தை வடித்தெடுத்து முடித்துக்காட்டி, இனிவரும் சரிதத்தையும்
குறிப்பித்துத் தோற்றுவாய் செய்கின்றார்.

     பரவுற்றேன் - என்பதும் பாடம். 14