1031.
|
நிலத்தி
னோங்கிய நிவந்தெழும் பெரும்புன னீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தி னோங்கிய குsறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர். 1 |
1031. (இ-ள்.)
வெளிப்படை. உயர்ந்து பரந்தெழுகின்ற
நீத்தமானது மலர்த்தடங்களிலும் பெரிய வயல்களிலும் புகுகின்ற
நல்ல நிலத்தில் காவிரி நாட்டிலே, குலத்தின்
ஓங்கியனவாயும்,
குறைவில்லாத நிறைவையுடையன வாயும் உள்ள குடிகள்
நெருங்கியிருத்தலால், ஊர்களுள் மேம்படுகின்ற நன்மை
யினையுடையது பெரிய திருத்தலையூராம்.
(வி-ரை.)
நிலத்தின் ஓங்கிய நாட்டு என்க. ஓங்குதல்
- பெருமையிற் சிறத்தல். உலகில் எல்லா நாடுகளுள்ளும் சிறந்த நாடு
என்பதாம். நிலத்தின் ஓங்கிய பொன்னி என்று
கூட்டிக்
காவிரிக்குச் சிறப்பாக்கி உரைப்பினும் அமையும். இப்பொருளில்
காவிரி ஏனைய ஆறுகளினும் சிறந்தது என்பதாம். இதுபற்றித்
திருநாட்டுச் சிறப்பிற் கூறியவை பார்க்க. நாட்டுச் சிறப்பாகப் பொருள் கொள்ளும்போது,
காவிரி பெருகித் தடங்களிலும் வயல்களிலும்
புகுதலால் என்று காரணங்காட்டினார் என்க.
நிவந்து
எழும் பெரும்புனல் நீத்தம் - நிவந்து எழும்
என்றதனால் காவிரி பெருகும்போது அகன்று மிகப் பரந்து
கிளம்பும் தன்மையும், பெரும்புனல் என்றதனால்
அது மேலோங்கி
உயரும் தன்மையும், நீத்தம் என்றதனால் வேகமாய்ச் செல்லும்
தன்மையும் குறிக்கப்பட்டன. அகலமும் ஆழமுமிருப்பினும்
வேகமாய்ச் செல்லாத கோதாவரிபோன்ற ஆறுகளும் உண்டு.
நீத்தம்,
மலர்த்தடங்களிலும், பணைவயல்களிலும் புகும்
என்று உருபு விரித்துரைக்க. முன்னுரைகாரர்கள் தாமரைகளை
யுடைய வயல்களிற் புகும் என்றுரைத்தனர்.
புகுபொன்னி
- வெள்ளம் வரும்போது மக்களின்
பெருமுயற்சியின்றித் தானாகவே, அங்கங்குள்ள தடம் முதலிய
நீர்நிலைகளினும், வயல்களினும் சென்று நிறைகின்ற காவிரியின்
இயல்பு குறித்தது. "வயலுட்புக" (60) என்றது பார்க்க.
பொன்னி
நல் நாட்டுத் - திருத்தலையூர் - நலத்தது
என்று கூட்டிமுடிக்க. நாட்டுத் தலத்தின் மேம்படு என்று கூட்டி
உரைத்தலுமாம். நன்மை என்றது இயற்கையடைமொழி.
பொன்னி
வருகின்ற வழியில் அதனாற் பயன்பெறாமலும்
நோய்க்கிருப்பிடமாகவும் உள்ள நலமில்லா நாடுகளும் சிலவுள
ஆதலின், அவற்றினின்றும் பிரித்து, அதன் பயன்பெற்ற
நன்மையுடைய என்று கொண்டு பிறிதினியைபு நீக்கிய
விசேடணமாக வுரைப்பினும் அமையும்.
குலத்தின்....குடி
- குலத்தின் ஓங்குதல் - "இருவர்ச்
சுட்டிய பல்வேறு தொல்குடி" என்றபடி தாய் தந்தை என்ற இருவர்
மரபும் தூயவாய் வழிவழி நீண்ட காலமாய் வருதல்.
குறைவிலா
நிறைகுடி - குறைவிலாக்குடி - நிறைகுடி என்று
தனித்தனி கூட்டியுரைப்பது மொன்று. இந்நிறைவாவது
செல்வம்,
மக்கள் முதலிய உடல்பற்றிய உலகநிலைப் பொருள்களாலும், கல்வி
ஞானம் முதலிய உயிர்பற்றிய அறிவு நிலைப் பொருள்களாலும்
குறைவில்லாதிருத்தலும், சிந்தையின் நிறைவாகிய செல்வம்
பெற்றிருத்தலுமாம். இதனையே நலம் எனறார்.
இதனால் இவ்வூர்
சிறப்புப் பெற்றது என்று குறிக்கத் தலத்தின் மேம்படும்
என்றார்.
தலம் - ஊர். சாதி யொருமை, நிலம் மேம்படும்
வளத்தினைக்
காவிரி தன்னுட்கொண்டு இருத்தல்போலக், குடிகள் குலம்
மேம்படுதற்குரிய குணங்களைத் தம்முட் கொண்டு விளங்கும்
என இங்கே விசேடவுரை காண்பாருமுண்டு.
தலையூர்-
தலத்தின் மேம்பட்ட காரணத்தால் தலையூர்
என்று பெயராயிற் றென்பது குறிப்பு. இவ்வாறு ஊர்ப்பெயர்களைச்
சிறப்பித்துக் கூறுவது ஆசிரியரது மரபு. 866 - ல் உரைத்தவையும்,
தலவிசேடமும் பார்க்க.
பொன்னி நீத்தம்
தடம், வயல் புகலாற் குறைவில்லாததாயிற்று;
குறைவில்லையாகக் குடிகுழுமியன; குடிகுழுமத் தலம் நலத்தின்
மேம்பட்டது; மேம்படவே தலையூராயிற்று என்றிவ்வாறு
தொடர்ந்துகொள்ள நிற்பது காண்க.
திருவுருத்திரம்
திருவைந் தெழுத்தை உள்ளுறையாகக்கொண்டு
மறையின் பயனாய் விளங்குதலின் இப்புராணத்தை ஐஞ்சீர்க்
கலித்துறையாற் கூறும் சிறப்பும் காண்க.
தடம்புனை
- மேம்படுதகையது- என்பனவும் பாடங்கள். 1
|