1032.
|
வான ளிப்பன
மறையவர் வேள்வியின் வளர்தீத்
தேன ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை;
ஆன ளிப்பன வஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர்
தான ளிப்பன தருமமு நீதியுஞ் சால்பும். 2 |
(இ-ள்.)
வான்....தீ - மறையவர்களது வேள்வியின் வளரும்
தீயானது மழையை அளிப்பன; தேன்...சோலை - நறுமலர்கள்
நிறைந்த சோலைகள் தேனை அளிப்பன; ஆன்....ஆடுவார்க்கு -
ஆனினங்கள் அளிப்பனவாகிய ஐந்தினையும் மகிழ்ந்து ஆடுகின்ற
சிவபெருமானுக்கு; அவ்வூர்...சால்பும் - அவ்வூர் தருமமும் நீதியும்
சால்பும் என்ற இவற்றை அளிப்பன.
(வி-ரை.)
தீயானவை வானினை அளிப்பன; சோலை தேனை
அளிப்பன; அவ்வூர் தருமமும் நீதியும் சால்பும் ஆடுவார்க்கு
அளிப்பன என்க.
வான்அளிப்பன
- வேள்வியின்வளர்தீ - வேள்வி செய்தல்
மழைக்குக் காரணமா மென்பது. வேள்வி - சிவவேள்விகள்.
வான்
- வானிடத்து நின்று பெய்யும் மழைக்கும் பெயராய் வழங்கும்.
ஆகுபெயர். "வான்சிறப்பு" என்பது காண்க. "அங்கவை பொழிந்த
நீரும் ஆகுதிப் புகைப்பா னாறும்" (834) என்ற விடத் துரைத்தவை
பார்க்க. "மண்ணி்ற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும், விண்ணிற்
புயல்காட்டும் வீழி மிழலையே" (குறிஞ்சி - 5) என்ற
ஆளுடையபிள்ளையார் தேவாரமும் "வேள்வி நற்பயன்
வீழ்புனலாவது" (திருஞா - புரா - 823) என்றதும் காண்க. உலக
நிலைபேற்றுக்குரிய மழையை வேள்வித்தீ தரும் என்றதொரு
சிறப்புண்மையும் காணவைத்த நயம்காண்க. வேள்வியின்
சிறந்தபயன் உலகம் காக்கும் மழைதருதலே என்பதாம்.
சோலை
தேன் அளிப்பன- மழையின் பயனாய்
நீர்பெருக, அச்சிறப்பினால் எங்கும் மலர்ச்சோலைகள் செழிக்க,
அச்செழிப்பினால் அவை நிறையப்பூக்க, அந்தப் பூக்கள் தேன்
தந்தன என்க. மலர்களினின்றும் கிடைக்கும் பொருள் தேன்
என்றதும் குறிப்பார் மலர்ச்சோலை என உடம்பொடு
புணர்த்தியோதினார். மலர்ச் சோலையினின்றும் பெறும்பயன்
பலவற்றுள்ளும் தேன் சிறந்தது என்பதும் குறிப்பு.
ஆன்
அளிப்பன அஞ்சு - ஆனைந்து. "ஆன்பெற்ற
அஞ்சு" (916) என்ற விடத்துரைத்தவை பார்க்க.
அளிப்பன
- அளிப்பனவாகிய - குறிப்புவினைப் பெயரெச்சம்.
இப்பாட்டில் ஏனை மூன்றிடங்களிலும் வரும் அளிப்பன
என்பன
வினைமுற்றுக்கள். இவ்வாறு வினைமுற்றாகவும் வினைப்பெயராகவும்
வரும் வெவ்வேறு முடிபுகள் கொள்ள வைத்துச் சொற்பொருட்
பின்வருநிலை யணிபடக் கூறுதல் ஆசிரியரின் கவிநயங்களுள்
ஒன்று. 553 - ல் உரைத்தவையும் பிறவும் பார்க்க.
இவ்வாறன்றி
அளிப்பன என்பதனை இங்கும் வினை
முற்றாகவே கொண்டு ஆனினங்கள் ஆடுவார்க்கு ஐந்தும்
கொடுப்பன என்றுரைப்பதுமாம்.
உகந்து
ஆடுவார்க்கு- இறைவன் வேண்டுதல்
வேண்டாமையில்லானாதலின் உகந்து ஆடுதல்என்ற
தென்னையோ?
எனின், இன்ன பொருளுக்கு இது குணம் என்று நியதிப்படுத்தி
வைத்ததுபோல, ஆனைந்தினால் ஆட்டும் ஆன்மாக்களுக்கு
மலக்கறைபோதல் என்ற தன்மை வைத்தார் என்றதேயாம்.
ஆனைந்தில் அத்தன்மையில் நிகழ்பவன் என்க. "அருக்கனிற் சோதி
யமைத்தோன் றிருத்தகு, மதியிற் றண்மை வைத்தோன்; றிண்டிறற்,
றீயின்வெம்மை செய்தோன்; பொய்தீர், வானிற் கலப்பு வைத்தோன்;
மேதகு, காலி னூக்கங் கண்டோ; னிழறிதழ், நீரிலின்சுவை
நிகழ்ந்தோன்; வெளிப்பட, மண்ணிற் றிண்மை வைத்தோன் என்றென், றெனைப்பல கோடி
யெனைப்பல பிறவு, மனைத்தனைத் தவ்வயி
னடைத்தோன்" (அண்டப்பகுதி 20 - 28) என்ற திருவாசகம்
முதலியவை காண்க. "விருப்பொன் றில்லான் பூண்டனன் வேண்டல்
செய்யும் பூசனை" (சிவஞானசித்தி. 2 - 27) (ஒன்றினும்
விருப்பிலனாகியும் உயிர்கள் மாட்டுக் கருணை பூண்டு விருப்பம்
செய்யும்) என்றதும் காண்க.
தருமமும்
நீதியும் சால்பும் - தருமம்- சிவதருமமும் உலக
தருமமுமென இரு வகைப்படும். இறைவனூல்பற்றிய ஒழுக்கம் சிவதருமம் எனவும், உலகியல் நூல்
பற்றிய ஒழுக்கம் உலக தருமம்
எனவும் படும். அறிவித்தவா றொழுகும் ஒழுக்கமே தருமமாம்.
விதித்தன செய்தல் விலக்கியன ஒழிதல் என்று இதனை உலக நூல்
வகைபற்றி உரைத்தார் பரிமேலழகர். நீதி-
நியதி. இது
விதிவிலக்குக்களை அறிந்து அதற்குத்தக ஒழுகுதல் வேண்டுமென்பதும், அவ்வாறு ஒழுகினோரும்
ஒழுகத்
தவறினோரும் அவரவருக்கு உரிய பயன் பெறுவர் என்பதுமாம்.
சால்பு - உயர்ந்த ஒழுக்கத்திற் சிறத்தல். நீதியும்
சால்பும் உலக
நூல்களால் உணர்த்தப்பட்டன. சால்பு - "சால்பின்
மேன்மை" (440) பார்க்க.
ஆழ்வார்க்கு
அவ்வூர்தான் அளிப்பன என்றது அவ்வூரில்
குழுமிய குலத்தின் ஓங்கிய குறைவிலா நிறைகுடிகள் இறைவன்
அருளிய நூல்களின்வழியே ஒழுகினார்கள் என்பதாம். இறைவர்
தமக்கென ஒன்றும் வேண்டாதவர்; உயர் நல்லொழுக்கத்தினின்
றொழுகி ஞானத்தாற் றம்மையடைச் செய்தலே அவரது கருணை
என்ப. ஆதலின் அவர் சொல்வழி ஒழுகி அவரை அவ்வூர்
வழிபடும் என்பது கருத்து. இதனை அவர்க்குக் கொடுப்பதாக
உபசரித்தார். ஊர் - ஊரில் உள்ள குடிகள்.
ஆகுபெயர். ஊர் -
ஊரில் உள்ளாரைக் குறித்த தொகுதி யொருமையாதலின் அளிப்பன
என்ற பன்மைவினை கொண்டது. அளிப்பன என்பதை
அளிக்கப்படுவன எனச் செயப்பாட்டுவினையாகக் கொண்டு ஊரால்
அளிக்கப்படுவன என்றுரைப்பினுமாம்.
குலத்தின்....குழுமி
என முன்பாட்டிற் கூறியதனைத்
தொடர்ந்து அவ்வாறு குழுமிய குலக்குடிகளுட் சிறப்புடைய
வேதியர்கள் தாம் செய்யத்தக்க வேள்விகளைச் செய்தனர்; அதன்
பயனை வெளிப்படையாய்க் காண உலகம் மழையினாற் சிறந்தது
என்று முதலிற் கூறினார். ஏனை எல்லாக் குடிகளும் அவ்வாறே
தங்கள் தங்கள் நெறிகளிற் சரித்து அறத்தின்வழி நீதியின் ஒழுகும்
சால்புடையராயினர் என்பர் அவ்வூர் என்று
தொகுத்துக் கூறினர்.
தருமம்
இறைவனது வடிவம்; நீதியும் அதன் வழித்தாய
சால்பும் அவனது தொக்க உருவம். "தனிப்பெருந் தருமம்" (107)
"அறவாழி யந்தணன்" முதலியவையும், "இன்னவுரு வின்னநிற
மென்றுணர்வ தேலரிது நீதிபலவும், தன்ன துருவாமென மிகுத்ததவ
நீதியொடு தானமர்விடம்" (சாதாரி - திருவைகா - 4) என்று
ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க. இவற்றால்
அவ்வூரினுள்ளார் இறைவனாணை வழிநின்று அவன்றன்மை
பெறுதற்கணியராய் ஒழுகினர் என்பது குறிப்பார், ஆடுவார்க்குத்
தருமமும் நீதியும் சால்பும் அவ்வூர் அளிப்பன என்றார்.
"தர்மம் சர" என்பது வேதம்.
தேன்
அளிப்பன - தேன் - வேள்விக்குரிய பொருள்களுள்
ஒன்று. அன்றியும் அது இறைவனை ஆட்டும் திருமஞ்சனப்
பொருள்களுள்ளும் ஒன்று. மக்களின் உணவுப் பொருள்களுள்ளும்
அது சிறந்தது என்பது "செந்தினை யிடியுந் தேனும் அருந்துவார்
தேனிற் றோய்த்து, வெந்தவூ னயில்வார் வேரி விளங்கனிக்
கவளங்கொள்வார்" (684) என்பன முதலியவற்றிற் காண்க.
வேள்வியின்
வளர்தீ....ஆனைந்தாடுவார் என்றதனால்
அவ்வூர் இறைவன் வழிபாட்டில் நிற்பது என்பதும், தருமமும்
நீதியும் சால்பும் என்றவற்றால் அவ்வூர் உலகியல் நீதி
ஒழுக்கத்தின் நிற்பது என்பதும் கூறினார். அவ்வாறு வாழும் தரும
நீதியொழுக்கமும் இறைவன் வழிபாட்டினையே உட்கொண்ட
தென்பதனை ஆடுவார்க்குத் தருமமும் நீதியும்
சால்வும்
அளிப்பன என்றதனால் தேற்றமாகக் கூறினார். உலக வாழ்க்கை
இறைவன் சார்பினை உட்கொண்டு வாழப்படாதபோது
பயனற்றதென்பது அறிவிக்கப்பட்டமை காண்க. இது மறையவர்
புராணமாதலின் அவர்கள் செய்யத்தக்க வேள்விச்சிறப்புடன்
தொடங்கிய நயமும் காண்க. "நீரிடை நெருப்பெழுந் தனைய" (1035)
என்ற உவமையின் உட்குறிப்பும் அது. 492 - 832 - 867 - 904
முதலியவற்றிலும், பிறாண்டும் உரைத்தவை பார்க்க.
ஆனுகந்து
ஆடுவார் என்றதனாற் பசுக்களின் சிறப்பும்
உணரப்படும். பசுக்களுக்குப் பதியாவார் இறைவன் என்பதும்,
அவரது அடிமைத்திறம் புரியும் அப்பெயர்கொண்ட பெரியவரது
சரிதம் இதுவாகும் என்பதும் ஆகிய குறிப்புப்படக் கூறிய சிறப்பும்
காண்க. 2
|