1034.
|
ஆய வந்தண
ரருமறை யுருத்திரங் கொண்டு
மாய னாரறி யாமலர்ச் சேவடி வழுத்துந்
தூய வன்பொடு தொடர்பினி லிடையறாச் சுருதி
நேய நெஞ்சின ராகியத் தொழிற்றலை நின்றார்.
4 |
(இ-ள்.)
மாயனார்....சேவடி - மகாவிட்டுணுவும் அறியாத
மலர்போன்ற திருப்பாதங்களை; ஆப...கொண்டு - அந்த அந்தணர்
அருமறையின் விளங்கும் உருத்திரமந்திரத்தினைக் கொண்டு;
வழுத்தும்...நெஞ்சினராகி - துதிக்கும் தொடர்பால் இடையறாத
தூய அன்புடனே சுருதியில் பதிந்த நேயம் நிறைந்த
மனத்தையுடையவராகி (அதனையே ஓதித் துதிக்கின்ற) அந்தத்
தொழிலிற் சிறந்து நின்றனர்.
(வி-ரை.) அந்தணர் - எவ்வுயிர்க்கும்
செந்தண்மை
பூண்டுவாழும் மறைமுனிவர்.
அருமறை
- உருத்திரம்- அரிய வேதங்களின் ஒருகூறாயும்,
அதன் நடுவுள் இருப்பதாயும், அதன் இதயமாயும் அதன் பயனாயும்
விளங்கும் திருவுருத்திரம் என்ற பகுதி. அது நமக சமகங்கள் என்று
கூறும் மந்திரங்களை உடையது. மறைக்கு அருமை என்ற
அடைமொழி தந்த ஆசிரியர் அதன் உள்ளுறையாய் விளங்கும்
மந்திரத்திற்கு அடைமொழியின்றி வாளா உருத்திரம்
என்று
கூறினார்,அதன் சிறப்பு உணர்த்துதற்கு. "திருவளர் தாமரை" என்ற
திருக்கோவையாரில் "கோங்கு" என்றதற்கு அடைகொடாது
கூறியதனால் அதன் தனிச் சிறப்புணர்த் தப்பட்டதென்று பேராசிரியர்
உரைத்த கருத்தை இங்கு நினைவு கூர்க.
அருமறை-
வேதங்கள் இறைவனது வாக்காதலானும்,
"வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்து, ளோதத் தகுமற
மெல்லாமுள" (பாயிரம் - 51) என்ற திரு மந்திரத்தினுட் கூறுதலானும்
அருமறை என்று சிறப்பித்தார். அருமை
- இறைவனருளானன்றிக்
கருவி நூலறிவுகொண்டு மெய்ப்பொருளறியவாராமை.
அருமறை
"வேதம் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம்
என்று நான்காகவும், அதர்வணமொழித்து மூன்றாகவும் கொள்வது
மரபு. அதர்வணம் ஏனை மூன்றினின்று திரட்டப்பட்டமையின்
அவற்றுளடங்குமாதலான் வேதம் மூன்றென்றுங் கூறுவர்.
இதுபற்றியே வேதத்திற்குத் திரயீ என்ற
பெயர் போந்தது. திரயீ
மூர்த்தயே நம என்ற சிவாஷ்டோத்தர சதநாமமும்
இக்கருத்துப்பற்றியது. அதர்வணம் ஏனை மூன்றினின்றும் பிரித்து
எடுத்துத் தொகுக்கப்பட்டுத் தனிமுதலாய் நிற்றலின் வேறு
வைத்தெண்ணி வேதம் நான்கென்று கூறுதலும் ஆன்றோர் வழக்கு.
அக்காரணம் பற்றி இருதிறத்தார் கூற்றும் தம்முண் முரணுமையறிக"
என்று திருத்தருமபுர ஆதீனத்து முத்தி நிச்சயச் சிற்றுரையில்
வெள்ளியம்பல வாணமுனிவர் எடுத்துரைத்தனர்.
அருமறை
உருத்திரம் - கண்ணிருப்பதனால் உடல்பெருமை
பெறுதல்போவ உருத்திரத்தை இதயத்திற் கொள்ளுவதனால் மறை
பெருமையுற்றது. உடலும் உயிரும்போல மறையும் உருத்திரமுமாவன
எனினும் பொருந்தும், வேத புருடனுக்கு இந்த உருத்திரம் கண்ணும்,
இதனுள் இருக்கும் பஞ்சாக்கரம் கண்மணியுமாம். என்று சதுர்வேத
தாத்பரிய சங்கிரகம் எடுத்துக்கூறும்.வேதம் நான்கும் வேதாங்கம்
ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம்
நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதங்களே
மேலானவை; அவற்றுள்ளும் உருத்திரை காதசனி மேலானது;
அதனுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்ற
இரண்டெழுத்தே மேலானது என்பது சிவதத்துவ விவேகத்திற்
கண்டது. இக்கருத்துக்களை எடுத்து விதந்து ஸ்ரீ ஆறுமுக நாவலர்
அவர்கள் இப்புராண சூசனத்துள் எடுத்துக் காட்டினர்.
வேதம் மூன்று
என்ற முறையில் அவற்றுள் நடுவணது
எசுர்வேதம்; அதன் ஏழுகாண்டங்களுள் நான்காவதனுள்
நடுவணதாகிய பதினோராவது அநுவாகத்தின் நடுவணதாகிய
ஆறாவது சூக்தத்தில் விளங்குவது திருவுருத்திர மந்திரம்; அதன்
நடுவுள் விளங்குவது சீபஞ்சாக்கரமும் அதன் நடுவுளிருப்பது சிவ
என்ற திருநாமமுமாம். "சிவ சிவ வென்றிடத் தீவினை மாளும்",
என்று பலவாற்றாலும் திருமந்திரத்தினுள் துதித்தனர் திருமூலதேவர்.
அதனையே வேத நடுவுள் விளங்கும் "அட்சரத்துவயம்" -
இரண்டெழுத்துக்கள் - என்று பிற ஆசிரியரும் போற்றுவாராயினர்.
வேதபுருடன் சிவனை இதயத்தில் வைத்துப் போற்றுகின்றான்
என்பதும் இருக்கருத்துப் பற்றியது.
தமிழ்மறைபற்றிய
குறிப்புக்கள் : வேதங்கள் நான்கென்றும்
மூன்றென்றும் விரிக்கப்படுவதுபோலவே தமிழ்வேதமும் ஆசாரியன்
மார்களருளிய தேவாரங்களும் திருவாசகம் கோவையும்சேர்த்து
நான்கென்றும், தேவாரங்கள் மூவரருளியவாற்றால் மூன்றென்றும்
விரிக்கப்படும். இத்தேவாரங்கள் மூன்றனுள் இடையில் விளங்குவது
அப்பர் அருளிய தேவாரம். அதன் மூன்று திருமுறைகளில்
இடையில் நிற்பது திருக்குறுந்தொகையாகிய (ஐந்தாம்) திருமுறை.
அத்திரு முறையினுள் நடுவுள் இருப்பது 51 - வது திருப்பதிகமாகிய
திருப்பாலைத்துறைத் திருப்பதிகம். அதன் பதினொரு
திருப்பாசுரங்களுள் நடுவணதாகிய 6 - ம் திருப்பாட்டில் "சிவாய"
என்னும் பாசமொருவிய சீ பஞ்சாக்கரம் விளங்குவதும் காண்க.
(இஃது ஓர் அன்பர் அன்புடன் தந்த குறிப்பு.)
"அரனே முதற்கடவுள்"
என்ற சிவஞானபோத முதற் சூத்திரப்
பொருளையே உருத்திரன் - பரமன் என்ற வகையால் எடுத்துக்
கூறுவது திரு உருத்திர மந்திரமாகும். இதனுள் உயிர்ப்பொருள்
உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்துக்கூறி அவை
யாவையினுள்ளும் கலந்து விளங்கும் சிவனுக்கு "நம" என்று
வணக்கம் கூறும். இக்கருத்துப் பற்றியே தமிழ் வேதமாகிய நின்ற
திருத்தாண்டகமும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி" என்பது
முதலாக உயிர்ப்பெருள் உயிரில் பொருள் என்னும்
எல்லாவற்றுள்ளும் சிவன் கலந்து நிற்குந் தன்மையை எடுத்துத்
துதித்தருளிற்று. (ருத் - துன்பம்: திரன்
- நீக்குபவன்)
திருவுருத்திரத்தை
விதிப்படி மெய்யன்போடு ஓதிச் சிவனைத்
துதிப்போர் சிவபுரியிற் சேர்வார் என்னும் நூற்றுணிபு இச்சரிதத்தால்
விளங்கும். " அறிஞர் வளமுற்ற, வேதத்தை யோதியே வீடு
பெற்றார்களே" என்ற திருமந்திரமும் காண்க.
உருத்திரங்கொண்டு
- வழுத்தும் - நெஞ்சினராக- அத்தொழில்
- தலைநின்றார் என்று கூட்டி முடிக்க.
ஆய
- அந்தப்பசுபதியார் என்க. முன் பாட்டிற்கூறிய அந்த
எனமுன்னறிசுட்டு.
உருத்திரங்கொண்டு
மாயனார் அறியாச் சேவடி-
விட்டுணு திருப்பாற் கடலில் தமது மார்பில் சிவபெருமானை வைத்து
நெடுங்காலம் தியானித்தனர் என்பது சரிதம். வேதம் விட்டுணுவின்
வடிவமாகில் அது இதயத்தில் சிவனை வைத்துள்ளது
என
மேற்கூறிய உண்மையும் இதனை விளக்கும். இதுபற்றியே
"நாராயண பரோத்
த்யாதா" (தியானிப்பவன்)
என்று
நாராயணனையும், "த்யேயன்" (தியானிக்கப்படுபவன்)
என்று
சிவனையும் வேதங்கள் கூறும். "பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வா னுள்ளத்தான்"
(திருவாரூர் - காந்தாரம். 10), "மிக்க
வேதத்துளான் விரிநீருடுத்த மண்ணகத்தான் றிருமாலகத்தான்"
(தனித்திரு விருத்தம் - 6 ) என்று அப்பர் சுவாமிகள் திருவாக்காகிய
தமிழ்மறையும் கூறும். "கர்ம கர்த்ருவ்ய பிதேசாச்ச" (சிவன்)
தியானிக்கப்படும் பொருளாகவும், (விட்டுணு) தியானிப்போனாகவுங்
கூறப்படலானும்" என்ற பிரமசூத்திரமுங்காண்க.
வழுத்தும்
நெஞ்சினராகி அத்தொழில் - வழுத்தும்-
மானதம் - மந்தம் - உரை என்று மந்திரங்கணிக்கும் முறை
மூன்றனுள் உரையினால் வழுத்தினார் என்க. நெஞ்சு -
மனத்தின்றொழிலும், தொழில் - மெய்யின்
றொழிலும், குறித்தலின்
முக்கரணங்களும் ஒன்றுபட்டன என்பதாயிற்று. (வாசகம் - காயிகம்
- உபாஞ்சு என்பர்)
தொடர்பினில்
இடையறாத் தூய அன்பொடு என்க,"சிந்தை
யிடையறா அன்பும்" (திருஞான - புரா - 270) என்ற திருவாக்கும்,
அதனைப்பற்றியே "இடையறாப் பேரன்பு" என்ற காஞ்சிப்புராணமும்
காண்க. இடையறாமையாவது "இடரினுந்தளரினும்"
எஞ்ஞான்றும்
விடாது தைலதாரை போலத் தொடர்பாய் ஒழுகுதல். தொடர்பினில்
இடையறா என்பதனைச் சுருதிக்கு அடைமொழியாக்கி உரிய
சந்தசில் இடைநீங்காத என்று உரைகொள்வாருமுண்டு.
நேயம்
- விருப்பம். அத்தொழில் -
வழுத்துதலாகிய
தொழில். செயல். அன்பும் விருப்பமும் மட்டுமேயன்றி அவற்றாற்
றூண்டப்பட்ட செயலும் நிகழ்ந்தது.
தலைநிற்றல்
- உறைப்புடன் சிறந்து ஒழுகுதல்.
நெஞ்சினராகிய தொழில் - என்பதும் பாடம்.
4
|