1035. |
கரையில்
கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு
பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழு
நிரைநெ டுங்கய னீரிடை நெருப்பெழுந் தனைய
விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுண்
மேவி,
5 |
1035. (இ-ள்.)
கரையில்...கறங்கிட - புட்களின் ஒலிகள்
எல்லையில்லாத கம்பலையாகச் சத்திக்க; மருங்கு - அம்மருங்கிலே:
பிரசம்....அறைந்திட - மெல்லிய தேன் வண்டுகள்பாட;
கருவரால்....மேவி - கரிய வரால் மீன்கள் பிறழ்கின்ற, வரிசைபெற
நீண்ட கயல்கள் செல்கின்ற நீரினுள் நெருப்பெழுந்ததுபோல
வாசனையுடன் அலர்ந்த செந்தாமரைகளையுடைய மென்
பொய்கையினுள்ளே போய், 5
1035. (வி-ரை.)
புள் ஒலி கரையில் கம்பலை கறங்கிட -
புட்களின் சத்தங்கள் எல்லையற்ற ஆரவாரமாகச் சத்திக்க. புள-
நீர்ப் பறவைகளும், தடத்தின் ஓரங்களிலும் இடையிலும் உள்ள
மரங்களில் சேரும் எண்ணிறந்த சிறு பறவைகளும் ஆம். இவை
காலை மாலைகளில் பெருங் கூட்டமாகக் கூடி ஒலி செய்யுமாதலின்
பலவொலிகள் விரவுதலால் கரையில் கம்பலை
என்றார். கம்பலை
- ஆரவாரம். கம்பலையாகக் கறங்கிட என்க. "கிளரொளி மணிவண்
டறைபொழிற் பழனங் கெழுவுகம் பலைசெய் கீழ்க்கோட்டூர்"(1),
"கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவு கம்பலை
செய்" (4) என்ற கருவூர்த்தேவர் திருவிசைப்பாவினுள் வருங்
கருத்துக்களை இங்கு வைத்துக் காண்க. கம்பு அலை
என்று
பிரித்துக், கம்பு - சங்குகள், அலை
- அலைதற் கிடமாகிய,
கரையில் என்று கூறுவாரும், கரையில் ஓசை மிக என்று
கூறுவாருமாயினர் முன்னுரைகாரர்கள். கரையில் கம்பலை என
இயல்புபுணர்ச்சியாய் அல்வழிச்சந்தியின் வருதலின் அவை
உரையாகா வென்க. பூவைகளும் கிள்ளைகளும் இவைபோன்ற
பிறவும் பாடுதல் முன் உரைக்கப்பட்டன.
மருங்கு
- அவ்வொலி மிகுதியின் பக்கத்தே அதற்கு மாறாக
அல்லது அதனுடன் இணைவனவாக. புள்ஒலி - சுரும்பு அறைதல்
- என்ற இரண்டும் பண்களைமிழற்றின என்பார் ஒலி என்றும்
அறைதல் என்றும் கூறினார். புட்கள் பலவாயும், சுரும்பை நோக்க
உருவாற் பெரியனவாயும், பல பக்கங்களினின்றும் பறந்து
சேர்வனவாயும் கூடுதலால் கரையில் கம்பலை ஒலி
என்றார்.
அவ்வொலியை நோக்கச் சுரும்புகள் மிகச் சிறியனவாயும் மலரும்
மலர்களைச் சூழ்ந்தே பாடுவனவாயும் கூடுதலால் அவற்றை
மென்கரும்பு அறைய என்றார். புள்ளும் சுரும்பும்
ஆகிய இந்த
இரண்டின் ஒலிகளையும் முன் காட்டிய திருவிசைப்பாவில்
உரைத்ததும் காண்க. இவ்வாறு கூடிய ஒலியலைகளின்
சத்தமிகுதிப்பாட்டால் வரால் பிறழ்ந்தன என்று கூறியபடியாம்.
"கெண்டையுங் கயலு முகளுநீர்ப் பழனங்கெழுவு கம்பலை செய்"
என்றது கீழ்க்கோட்டூர்த் திருவிசைப்பா.
வரால்கள்
பிறழுமியல்புடையன; கயல்கள் வரிசை
வரிசையாய்ச் செல்வன; ஆதலின் பிறழும்
என்றும், நிரை என்றும்
கூறினார்.
நீரிடை
நெருப்பு எழுந்து அனைய- செங்கமலம் என்க.
ஊழிக்காலத்தில் நீரினின்றும் நெருப்பு எழும் என்பது மரபு. வடவை
எனப்படும் பெண் குதிரை முகத்தையுடையதொரு தீ கடலின்
அகட்டினுள் உள்ளதென்றும், அதுவே ஊழியில் பெருகிக் கடலைச்
சுருக்கிச் சுவறச் செய்து பெருந் தீயாகி உலகை எரித்து விழுங்கும்
என்றும் கூறுவர். அக்கினிதீர்த்தத்தினுள் நெருப்பு எழுந்த சரிதம்
திருவாதவூரர்புராணத்தினுட் கேட்கின்றோம். இங்குப் பொய்கையின்
நீரிற் செந்தாமரை
பூத்த தோற்றத்தை நீரில் நெருப்பு எழுந்தது
போன்றதென அவ்வுண்மையினைப் புலப்படுத்துமாறு கூறிய நயமும்
சுவையும் காண்க. "கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
பார்க்கின்றார் கொண்டுபோவார்" (ஆளுடைய பிள்ளையார் -
திருவாரூர் - காந்தாரம் - 2) என்றபடி இறுதிக்காலம் விரைகின்றது;
"அடியாரானீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை..
..பூப்புனைந்து தொழுமின்" என்று மக்களை எச்சரிப்பது போன்று
நீரிடை நெருப்பெழுந்தனையதாம் என்று நின்ற குறிப்பும் காண்க.
மெய்பற்றி எழுந்த உவமம். எழுந்தால் அனைய எனற்பாலது
எழுந்தனைய எனத் திரிந்து நின்றது. "சேலா
கியபொய்கைச்
செழு நீர்க் கமலங்கள், மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே"
(6 - குறிஞ்சி) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க. "
மீத்துடை நெடுங்கயம், தீப்பட மலர்ந்த, காந்த ளொண்பூ
வடர்த லோம்பி" (பெரும்பாண், 289 - 290) என்றதும் காண்க.
மேல்வரும் பாட்டில்
கழுத்தளவாகிய நீரினுட்புக்குக் கை
உச்சிமேற் குவித்து நின்று உருத்திரம் கணிக்கும்
பசுபதியாரையும் இவ்வுவமம் குறிப்பாலுணர்த்துவது காண்க.
அவ்வாறு நீரினுள் நின்று கணிக்கும் நீர்மை (தன்மை)யினின்று
எரியுருவாகிய இறைவனருகே இருக்கும் நிலை எழுந்தது என்ற
சரிதக்குறிப்பும் காண்க. பொய்கை- தெய்வத்
தீர்த்தம்; மானிட
ராக்காத நீர்நிலை என்பர் நச்சினார்க்கினியர். புண்ணியப்
பொய்கையை யடைந்து கணித்தனர் என்பதாம்.
பொய்கையுள்
மேவி - புக்கு - நின்று - குவித்து- அன்பினில்
-உருத்திரம் - குறிப்பொடு - பயின்றார் என இந்த இரண்டு
பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.
பெருவரால்
- நிரை நெடுங்கய நீரிடை - என்பனவும்
பாடங்கள். 5
|