1036. தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
வுள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேற் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு
                               பயின்றார் 
6

     1036. (இ-ள்.) வெளிப்படை. தெளிந்த குளிர்ந்த தடத்தின்
நீர் கழுத்தளவு உள்ளமட்டில் நெருங்க உள்ளே பொருந்தப்
புகுந்துநின்று, வழிகின்ற வெள்ளிய அலைகளையுடைய கங்கை நீர்
ததும்பிய கடையினையுடைய சிவபெருமான் உகந்து கொள்ளும்
அன்புடன் திருவுருத்திரத்தினை (அவரது அடிமைத் திறத்தை
மனத்துட் கொண்ட) குறிப்புடனே பயின்றார். 6
    

     1036. (வி-ரை.) தெள்ளுதண்புனல் - தெள்ளுதல்-
தெளிதல். தெளிந்தபுனல். தெளிவுடைமை நல்ல புனலுக்குரிய இயல்பு.
தெளிவிக்கும் புனல் என்று பிறவினையாகக் கொண்டுரைப்பினு
மமையும். இது கயத்தின் உயர்வு குறித்தது. இந்நாண்மாக்களைப்
போலக் கயத்தினை அசுத்தப்படுத்தாமல் மக்கள் தூய்மையாய்
வைத்திருந்தனர் என்பதும் புலப்படும். தாமரையும் வரால் கயல்
முதலியனவும் இருத்தலும் அதன் றூய்மைக் குதவிசெய்வன என்க.

     புனல் - கழுத்து அளவு - ஆய் இடைச் செறிய - உள்உறப் புக்கு - நின்று - இது பசுபதியார் புனலுள் நின்று
செபித்தநிலை. கரிமா முதலிய யோகசித்தியால் அன்றி,இவ்வாறு
கழுத்தளவு நீரினுள் நிற்பது இயலாது. மனித உடல் நீரினும்
கனங் குறைந்ததாதலின் இடுப்பின் அளவுக்குமேல் நீரினுள் நிற்பது
இயல்பிற் கூடாததாம். உடலினும் கனமுடைய நீர் கீழும் நாற்புறமும்
செறிந்து உடலை மேலே தூக்கிவிடுமாயினும் அவ்வாறு
மேற்கிளம்பாமல் நீரின் செறிவினையும் வென்று நின்றார் என்பது
குறிக்கப் புனல் ஆய் இடைச் செறிய என்று கூறி இச்செயலின்
அருமைப் பாட்டினை எடுத்துக் காட்டினார். சிலர் நீர்த்தம்பன
சாதனையால் நீர்மேல் மிதந்து கட்டைபோற் கிடப்பதும் பேசுவதும்
செய்வர். ஆனால் கழுத்தளவு ஆழத்துள் நின்று அன்பொடு
தொடர்ந்து மனத்தையும் ஒருமைப்பட நிறுத்தி அல்லும்பகலும்
உருத்திரம் பயிலுதல் செய்தற்கரிய பெருஞ் செயலாம்.

     கை உச்சிமேல் குவித்து - என்றதனால் "கைகாள் கூப்பித்
தொழீர்" என்றபடி இறைவனை வணங்குதற்குக் கைகள் இங்குப்
பயன்பட்டன என்றும், உடலை நீரினுள் நிறுத்துதல் முதலிய
வேறொன்றற்கும் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியபடி.
கை - குவித்து என்றதனால் இரண்டு கைகளும் என்க.

     தள்ளு - திரை - நீர் - ததும்பிய- இறைவனது
சடையினுள்ளே குடிகொண்டிருந்தும் கீழே ஓடிவருவதற்குக் காரணங்
குறிப்பார்போன்று அலைகளாற் றள்ளப்பட்ட நீர் கரையின்மேல்
ததும்பியது என்றார்.

     சடையார் கொள்ளும் அன்பு - சடையார் உகந்துகொள்வது
அன்பு ஒன்றுமேயாம் என்பது நூற்றுணிபு "அன்ப ராயிருப் பாரை
யறிவரே," "உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற், கள்ள முள்ள
வழிக்கசி வானலன்", "அன்பு நுகர்ந் தருளுதற்குச் சித்தமகிழ்
வயிரவராய்த் திருமலை நின் றணைகின்றார்" (சிறுத் - புரா - 25)
முதலிய திருவாக்குக்கள் காண்க.

     குறிப்பொடு பயின்றார் - குறிப்பு- தலைவராகிய
பதிப்பொருளுக்குப் பசுக்களாகிய உயிர்கள் யாவையும் எஞ்ஞான்றும்
அடிமைகளே என்பதும், அவ்வடிமைத்திறத்தினிற் செல்லவொட்டாது
இடைவிலக்கும் பாசங்களின் நீங்கி அடிமைசெயப் பெறுதல்

வேண்டுமென்பதும் முதலிய குறிக்கோள். இதனையே முன்
அடிமைத் திறம்புரி (1033) என்றார்.

     பயிலுதல் இடைவிடாது பலகாலமும் சொல்லுதல். பசுபதியார் செயல் போலவும், வேதத்துள் உருத்திரமும் அதனுட் சிவமும்
போலவும் இந்த இரண்டு பாட்டுக்களும் ஒரு தொடர்புபெற்று
இப்புராணத்து நடுவினுள் அமைந்து விளங்கும் தெய்வச் சிறப்பும்
குறிக்கொள்க. 6