1039.
|
நீடு மன்பினி
லுருத்திர மோதிய நிலையால்
ஆடு சேவடி யருகுற வணைந்தன; ரவர்க்குப்
பாடு பெற்றசீ ருருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமு நிகழ்ந்தது குவலயம் போற்ற. 9 |
(இ-ள்.)
வெளிப்படை. நீடும் அன்புடனே திருவுருத்திரத்தை
ஓதிய நிலைமையினாலே இறைவரது ஆடுகின்ற திருவடியின் அருகு
பொருந்த அணைந்தனர். (ஆதலின்) அவருக்குப் பெருமைபெற்ற
சிறந்த உருத்திரபசுபதியார் என்று கூடும்
பெயரும் உலகம்போற்ற
நிகழ்ந்தது.
(வி-ரை.)
இந்நாயனாருக்கு உருத்திரபசுபதியார் என்ற பெயர்
வழங்குதலின் காரணத்தை அறிவிப்பது இத்திருப்பாட்டு. முதனூலாகிய திருத்தொண்டத் தொகையினுள்
இப்பெயரால் இவர்
போற்றப்பட்டமையால் இதன் காரணத்தை விரிநூல் விரித்துக்
கூறவேண்டிய நியதிபற்றி இவ்வாறு எடுத்துக்காட்டியபடியாம்.
இக்கருத்துப்பற்றியே "எஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன்"
என்ற முதனூற்கருத்தை "வன்கழுத் தரிவாள் பூட்டி, யரிதலா
லரிவாட்டாய ராயினார் தூய நாமம்" (924) என்று விரித்ததும், பிறவும்
காண்க.
நீடும்
அன்பு- "தூய அன்பு" (1034), "கொள்ளும் அன்பு"(1036),
"காதலன்பர்" (1038) என்றவை காண்க. நீடுதல் -
பெருகுதல். "ஈறே
முதலதனினீறலா வொன்றுபல, வாறே தொழும்பாகு மங்கு"
(சிவஞானபோதம் - சூத்) என்றபடி முத்திநிலையிலும் உயிர்
இறைவனுக்கு அடிமையாய் நிற்கு மாதலின், சிவபுரி எல்லையிற்
சேர்ந்த பசுபதியார், அங்கும், நீடிய அன்பினால்
அடிமைத்திறம்
புரிந்து (1033) இறைவனது சேவடியின் அருகுற அணைந்திருந்தனர்
என்றலுமாம் "கோடி கோடி குறட்சிறு பூதங்கள், பாடி யாடும்" (16)
என்றதும், " நன்மை சேர்கண நாதராயவர்செயு நயப்புறு தொழில்
பூண்டார்" (வெள் - சரு - 49) என்றதும் முதலியவை பார்க்க.
ஆடுசேவடி
- தூக்கிய திருவடி. அதுவே உயிர்களை
மலச்சேற்றினின்றும் எடுத்து அருள்தருவதாதலின்
வ்வருளினைப்பெற்ற பசுபதியார் அதன் அருகு அணைந்தனர்.
அருகுற
அணைதல் - அருகுற அணைதல் அரிதின்
முயன்றடையும் பெரும் பேறென்பதனை "தேடியிமை யோர் பரவுந்
தில்லைச்சிற் றம்பலவர், ஆடிவரும் போதருகே நிற்கவுமே
யாட்டாரே" என்று அகப்பொருளில் வைத்துப் புருடோத்தம நம்பிகள்
திருவிசைப்பாவினுள் அருளியதுகாண்க.
அவர்க்குக்
கூடும் நாமமும் நிகழ்ந்தது - கூடுநாமம் -
உருத்திரம் என்னும் சொல். தமது பசுபதியார் என்னும் பெயரின்
முன்னே கூடப்பெற்ற நாமம். பெருமை கூடிய என்ற குறிப்பும்
காண்க. உருத்திரபசுபதியார் ஆம் என்றதும்
இதனை விளக்கிற்று.
ஆம் - ஆகின்ற. முன் பசுபதியார் என்றது
இப்போது உருத்திர
பசுபதியார் என ஆகின்ற என்க. பாடு பெற்றசீர் - பாடு
-
பெருமை. பாடு - தவம், உடல் வருத்தல். என்று
கொண்டு
பசுபதியார் செய்த கடுந்தவத்தின் (1036) பயனாகப்பெற்ற என்றலும்
ஆம்.
குவலயம்போற்ற
நிகழ்ந்தது - உலகத்துள்ளார்
அத்திருப்பெயரைப் போற்றும்படி வழங்கியது. போற்றுதல்
-
திருத்தொண்டத்தொகையாலும், அது கொண்டு உலகராலும்
துதிக்கப்படுதல். 9
|