விரி

551.
மல்லனீர் ஞாலந் தன்னுண் மழவிடை யுடையா
                                 னன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை யுற்றிடத் துதவு நீரா
ரெல்லையில் புகழின் மிக்க வெறிபத்தர் பெருமை
                                 யெம்மாற்
சொல்லலாம் படித்தன் றேனு மாசையாற் சொல்ல
                                  லுற்றாம். 1

     இலைமலிந்த சருக்கம் :- திருத்தொண்டத்தொகையில்
‘இலைமலிந்த' என்று தொடங்கும் திருப்பாட்டிற் கூறிய எறிபத்தர் -
ஏனாதிநாதர் - கண்ணப்பர் - கலயர் - கஞ்சாறர் - தாயர் -
ஆனாயர் என்ற அடியார்களது சரிதங் கூறும் பகுதி. இம்முறையே
இச்சருக்கத்து முதலில் ஆசிரியர் எறிபத்த நாயனார் புராணங்
கூறத்தொடங்குகின்றார்.

     எறிபத்த நாயனார் புராணம் :- அவ்வெழுவருள்ளே
எறிபத்த நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி.

     தொகை :- இலைவடிவினதாய்ப் புகழ்மலிந்த மழுவாயுதத்தை
எந்திய நம்பியாகிய எறிபத்த நாயனார்க்கு நான் அடியேனாவேன்.

     இலைமலிந்த - வேலுக்கு அடைமொழி. இலைவேல் எனக்
கூட்டுக. வேல் - ஆயுதப் பொதுப்பெயர். ஈண்டு மழுவைக்
குறித்தது. நம்பி - புருடரிற் சிறந்தோன்.

     எறிபத்தர் - காரணங் குறித்து வந்த பெயரென்பர்.
அடியார்க்கு உறும் இடரைப் பரசு எறிந்து தீர்க்கும் வகையால்
இறைவனிடத்துப் பத்திசெய்பவர் என்பது பொருள். தமது
இயற்பெயரும் மரபும் முதலிய பிறவரலாறுகளால் விளங்காது பத்திச்
செயலால் மட்டில் விளங்கிய பெருந்தொண்டர் என்க. அவர் ஏந்திய
படையும் அது கொண்டு தொண்டு செய்து பேறு பெற்றமையும்
பெயரும் தொகை நூலிற் கூறியபடி.

     வகை :- ஊர்மதில் மூன்று - பறந்து செல்லுமியல்புடைய,
மதில் சூழ்ந்த மூன்று நகரங்கள்; திரிபுரங்கள். ஊர்மதில் -
வினைத்தொகை. இருப்புமதில் - வெள்ளிமதில் - பொன்மதில்
என்பவற்றாற் சூழப்பட்டவை இம்மூன்று புரங்கள் என்பர். மதில்
ஊர் மூன்று என மாற்றி உரைத்தலுமாம். அட்ட உத்தமர் -
சிவபெருமான். இங்குக் கருவூர்த் திருவானிலையில் எழுந்தருளிய
பசுபதீசரைக் குறித்தது. அட்டது அருள் என்பது.

     மாதவத்தோன்- சிவகாமியாண்டார். பூப்பறித்துச் சாத்துதல்
மாதவமெனப்பட்டது. "தவமுயல்வோர் மலர்பறிப்ப" என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க. சரியையாதிகள்
தவமெனப்படும்.

     தார்மலர் - திருப்பள்ளித்தாமம். தாருக்கு ஆகும் மலர்.
கொய்யா வருபவன் - கொய்துகொண்டு வருபவருடைய.
ஆறாம்வேற்றுமை உருபுதொக்கது. கொய்யா - கொய்து. செய்யா
எனும் வாய்பாட்டு வினையெச்சம். தண்டின் மலர் - தண்டின்
மேலிருந்த மலர் நிறைந்த பூக்கூடையை. பறித்த - பறித்துச்
சிந்தியதனால். ஊர்மலை - யானை. பாகர் உடல்
துணியாக்குமவன்
- எண் உம்மைகள் தொக்கன. பரசினால்
யானையையும் பாகரையும் உடல் துணித்தவர். மதில்சூழ் கருவூர்
- மதிலாற் சூழப்பட்ட கருவூர் சோழர்களது இராசதானிகளில்
ஒன்றாதலின் மதிலைச் சிறப்பித்தார். மதில் அரணாம். அரச
அங்கங்களில் ஒன்று. "மாமதில் மஞ்சு சூழும்" (553) என விரிநூல்
இதனை விரித்தது காண்க. எறிபத்தனே ஊர்மலையையும் அதன்
பாகர்களையும் உடல் துணியாக்குமவன் என முடிக்க. ஏகாரம்
தேற்றம். துணித்ததற்குக் காரணம் மலர் பறித்தலே என்பார் பறித்த
ஊர்மலை
என்று குறித்தார். மலர் - மலர்க்கூட்டை - இலக்கணை.

     ஊரும், தொண்டின் றிறமும், சரித வரலாறும் வகைநூல்
பேசிற்று. இவற்றை விரிநூல் விரித்தபடி புராணத்துட் காண்க.

     விரி :- 551. (இ-ள்.) வெளிப்படை. செழித்த நீர் சூழ்ந்த
நிலவுலகத்திலே, இளமையாகிய எருத்தினையுடைய சிவபெருமானது
அன்பர்கட்கு இடையூறுற்ற விடத்து விரைந்து வந்து
அவ்விடையூற்றினை நீக்குதற்கேற்ற செய்கையை உதவும்
தன்மையுடையாராகி எல்லையில்லாத புகழிலே மிகுந்த எறிபத்த
நாயனாரது பெருமை எம்முடைய சொல்லில் அடங்கும்
தரமுடையதன்று. ஆயினும் ஆசையினாலே சொல்லத்
தொடங்குகின்றேன்.

     (வி-ரை.) ஒவ்வோர் புராணத் திறுதியிலும் அவ்வந்
நாயனாரது சரிதத்தை உபசங்கார முறையிலே முடித்துக்காட்டி,
மேல்வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்வது ஆசிரியர் மரபு;
அமர்நீதியார் புராணத்தோடு அச்சருக்கம் முடிவு பெற்றதாகலின்
மேல்வரும் சரிதத்துக்கு ஆங்குத் தோற்றுவாய் செய்ய
இயைபில்லை. எனவே, இனிக் கூறப்புகுந்த சரிதத்திற்கு இங்குத்
தொடக்கத்திற்றோற்றுவாய் செய்தது இப்பாட்டு. இப்புராணத்தை
இங்குச் சுருக்கி உற்றிடத்துதவும் என்று காட்டிய அழகு குறிக்க.

     நீர் ஞாலம்- தண்ணீராற் சூழப்பெற்ற உலகம்.

     மழவிடை - என்றும் இளமையோடிருப்பது.
தருமசொரூபமாகிய விடையாதலின் அது மூப்பதில்லை என்க.
"மழவிடையார்க்கு வழிவழியாளாய்" - திருப்பல்லாண்டு.

     உற்றிடத்து ஒல்லை வந்து உற்ற செய்கை உதவும் - என
மாற்றுக. உற்றிடம் - இடையூறு உற்ற அந்த இடத்தே; அப்போது.
இடம் - காலமும் இடமும் குறித்தது. இடையூறு என்ற எழுவாய்
தொக்கி நின்றது. அன்பர்க்கு வரும் இடையூற்றை வெளிப்படச்
சொல்லா நியதியுடையாராதலின் ஆசிரியர் அதனைத்தொக வைத்துக்
கூறினார். உறுவதனைப் பின்னரும், அது வருமுன்னே அதனைத்
தீர்க்க உற்ற உதவியை முன்னரும் வைத்த மரபுங் காண்க.
இக்கருத்துப் பற்றியே "அன்பர்க்கு அடாதன அடுத்தபோது"
என்றதுங் காண்க. ஒல்லை - அன்பர்களது இடையூறுகளைத்
தவித்தலில் நாயனார்க்கிருந்த தீவிரம் குறித்தது. "உற்ற வர்க்குத
வும்பெரு மானை யூர்வ தொன்றுடை யானும்பர் கோனை" எனவரும்
நம்பிகள் தேவாரமுங் கருதுக.

     உற்ற செய்கை - செய்கையை - தீர்த்தற்குப் பொருந்திய
செயலை. இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கது. செய்கையை
உதவும்
என்று கூட்டுக. உற்ற செய்கை - பொருந்திய
தொண்டினுக்கு உதவும் என உரைப்பாருமுண்டு.

     நீரார் - நீர்மையை யுடையார்.

     எல்லையில் புகழ் - அளவுபடாத புகழ். புகழின்மிக்க
என்றது அத்தகைய புகழ் பலவற்றாலும் மிக்கவராதலை.
சொல்லலாம் படித்தன்று
என்றதற்குக் காரணங் கூறியவாறு. ஓர்
அடியார்க்காக அஞ்சா நெஞ்சுடன் யானையை யெறிந்து ஆளுடைத்
தொண்டர் செய்த ஆண்மையும் (606), இன்னுமோர் அன்பர்க்காக
வாளினைத் தம் கழுத்திற் பூட்டி அரிந்திடலுற்ற நேர்மையும் (596)
முதலிய பல புகழ்களும் அடங்க எல்லையில் புகழ் என்றார். இது
கொண்டன்றே "இலைமலிந்த வேல் நம்பி" என்று தேற்றம்பெறக்
கூறியது திருத்தொண்டத்தொகை.

     ஆசையால் - அதனைச் சொல்லவேண்டும் என்னும்
விருப்பத்தால். ஆசை மிக்க போது இது இயலுமோ? இயலாதோ
என்று பாராது இயலாதாயினும் அதில் முயலச் செய்யும். "ஆசை
வெட்கமறியாது" என்பது பழமொழி. ஆயின் இவ்வாசை விலக்கி
ஒதுக்கித் தள்ளத்தக்க பிற ஆசைகள் போலாது ஆன்றோர்கள்
விரும்பி மேற்கொள்ளத் தக்கதாகலின் ஆசையாற் சொல்லலுற்றேன்
என்றார் ஆசிரியர். "நின் பழவடியார் கூட்டம் அத்தா! காண
ஆசைப் பட்டேன் கண்டாயம்மானே" என்பது திருவாசகம்.
இவ்வாசைதானும் உலகத்தை வழிப்படுத்தும் அருள் நோக்கத்துடன்
எழுந்தமையும், "இவ்வுலகத்து மாக்கள் சிந்தையுட் சார்ந்துநின்ற
பொங்கிய இருளைப்" போக்கும் என்று பாயிரத்துரைத்தமையும்,
பிறவும் உன்னுக.

     என்னால் - சொல்லலுற்றேன் - என்பனவும் பாடங்கள். 1