1044.
|
பாளைவிரி
மணங்கமழும் பைங்காய்வன்
குலைத்தெங்கின்
றாளதிர மிசைமுட்டித் தடங்கிடங்கி னெழப்பாய்ந்த
வாளைபுதை யச்சொரிந்த பழமிதப்ப வண்பலவி
னீளமுதிர் கனிகிழிதே னீத்தத்தி லெழுந்துகளும்.
4 |
(இ-ள்.)
வெளிப்படை. இளம் பாளைகள் விரிந்து
மணங்கமழ்கின்றனவும், பசிய காய்களையுடைய வலிய குலைகளைக்
கொண்டனவுமாகிய தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் மரம்
அசையுமாறு முட்டிப் பெரிய நீர்ப்பள்ளங்களினின்றும்
மேலெழும்பிப் பாய்ந்த வாளை மீன்கள், தாம் கீழே புதையச்சொரிந்த
அத்தென்னைகளின் நெற்றுக்கள் மிதக்கும்படி வண்மையுடைய
பலாமரங்களின் நீண்ட முதிர்ந்த கனிகள் கிழிந்து பெருகிய தேனின்
பெருக்கிலே (அவ்வாளை மீன்கள்) எழுந்து குதிக்கும்.
(வி-ரை.)
பாளை விரி மணம் - இளம்பாளைகள் விரிதலால்
உளதாகும் மணம். இளம்பாளைகள் தென்னையின்
பூங்கொத்துக்களாகும்.
பைங்காய்
வன்குலை - பசிய காய்கள் நிறையக்காய்த்த
வலியகுலை. குலைக்கு வலிமையாவது காய்கள் நாளுக்குநாள்
கனக்கப்பெருத்து நிறையினும் பற்று விடாது தாங்கும் வல்லமை.
தெங்கின்....முட்டி
- தெங்கின் தாளில் (அவை) அதிரும்படி
மேல் முட்டி என்க. முட்டுதல் - தாக்குதல்.
கிடங்கின்
எழப்பாய்த்த - கிடங்கினின்றும் உயர மேலே
எழும்புமாறு துள்ளிப்பாய்ந்த. கிடங்கு -
நீரையுடைய பள்ளங்கள்.
தடங்கள் என்றலுமாம். முட்டிப் - பாய்ந்த - வாளை என்க.
புதைய
- புதையும்படி. சொரிந்த பழம்-
உதிர்த்த
தெங்கங்கனி. நெற்று.
பசிய காய்கள்
குலைகளில் வலிமையுடன்
பற்றிக்கொண்டிருப்பதும், பழுத்த முற்றின நெற்றுக்கள் சிறிது
அதிர்ச்சி உண்டாயினும் பற்றுவிட்டு உதிர்வதும் தென்னையின் தாவர
இயல்பு. "காக்கை யேறப் பனம்பழம் வீழ" என்ற முதுமொழியும்
காண்க.
முட்டிப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழம் -
கரையில் வளர்ந்த தென்னை அதிரும்படி மேல்முட்டிக் கிடங்கினின்றும் வாளை குதித்துப்
பாய்ந்தது; அதிர்ச்சியுண்டாகும்படி
தனது தாளிற்பாய்ந்த வாளையின் தீச்செயலுக்குச் சினந்து அதனைத்
தண்டிப்பது போன்று அத்தென்னை தன் பழங்களை அதன்மேற்
சொரிந்தது; அந்நெற்றுக்கள் வாளையைத்தாக்கி அதனோடு வீழ்ந்து
கீழே வயலின் சேற்றிற் புதைந்தன; அவற்றினடியில் அமுக்குண்டு
வாளையும் சேற்றினுட் புதைக்கப்பட்டது என்க.
வண்பலவின்....நீத்தம்
- தென்னை நெற்றுக்கள் அவ்வாறு
விசையின் வீழும் போது பக்கத்திலிருந்த பலாவின் அடியிற்
பழுத்திருந்த நீண்ட முதிர்ந்த கனியின் மோதி வீழ்ந்தன; அதனால்
பலாப்பழம் கிழிந்து சாற்றினைப் பொழிந்தது; அப்பழச்சாறு பெருகி
ஓடிற்று என்பதாம். பலாவினடியிற் பழுத்த கனி தானாக வெடித்துச்
சாறுபாய்ந்தது என்றலுமாம்.
பழம்
மிதப்பக் கிழிந்த நீத்தத்தில் - எழுந்து உகளும்
- முன் வாளை புதைய வீழ்ந்து வயற்சேற்றினுட் புதைந்திருந்த
தென்னம்பழம், பலாப்பழச் சாறு பாயச் சிறிது சிறிதாகச்
சேற்றினதுபற்று இளகப்பெற்று, அச்சாறு நிறையவே, இலகுவான
பொருளாதலின் மிதக்கலாயிற்று, தன்னைச்சேற்றினுட் புதைத்து
மேலழுத்தி நின்ற நெற்று மிதக்கவே, புதைபட்ட வாளை
அந்நீத்தத்தின் உதவியால் எழுந்து மேற்கிளம்பிக் குதிக்கும் என்பது.
உகளுதல் - கிளம்பிக் குதித்தல். சிறையினின்றும் விடுபட்ட
மகிழ்ச்சிக் குறியாகக் குதிக்கும் என்னும் தற்குறிப்புமாம்.
தாள்
அதிர முட்டிப் பாய்ந்த வாளை புதையச் சொரிந்த
- என்றதனால் தன்னை அதிர முட்டியதாற் சினந்த தென்னை,
அவ்வாளை மீண்டும் கிளம்பி முட்டாவண்ணம் அதனைத்
தண்டித்தலும் ஒதுக்குதலும் ஒருங்கே செய்யும் வகையால், தனது
பழத்தினால் அதனைச் சாடிச் சேற்றினுள் அமிழ்த்திவைத்தது
என்றும், அவ்வாறு தண்டித்தலினும் அது ஊறுண்டு சாவாவண்ணம்
அருள்கொண்டு (Justice tempered with mercy என்று நவீனர்
கூறுமாறு) அது தங்குமிடமாகிய சேற்றினுள் தானே அதனை
அடைத்து வைத்தது (internment or imprisonment) என்றும்
உள்ளுறையாகிய தற்குறிப்பேற்ற அணிநலமும் காணத்தக்கது.
வண்
பலவின் - நீத்தம் - இனி, (அதனைத் தொடர்ந்து)
இவ்வாறு தண்டிக்கப்பட்டு வருந்துவோரிடத்து இரக்கமுற்றுக்
கைதூக்கிவிடும் வள்ளன்மையுடையார் போலப், பலவின் கனி தனது
சாற்றினைப் பெருகச் சொரிந்து பாயவிட்டுச் சேற்றினை இளகச்
செய்தலால் நெற்றுமிதப்பவும், கீழே அமிழ்த்தப்பட்ட வாளை எழுந்து
உகளவும் துணைபுரிந்தது என்னும் தற்குறிப்பேற்ற அணிநயமும்
காண்க.
இவ்வாறு கண்டனையும்
தண்டைனையும் கருணையும் ஒருங்கே
தாவரங்களிலும் காணவைத்த கவிநயம் நந்தனாரது
திருவுள்ளக்கிடையினையும், ஆசிரியரது திருவுள்ளக்கிடையினையும்
ஒருங்கே விளக்கும் வகையில் அமைந்து விளங்குவது இத் தெய்வ
மணக்கும் திருப்பாட்டு.
இளம்பூவுங் குரும்பையும்
கொண்ட பூம்பாளையும், பசிய
காய்கொண்ட வலியகுலையும், முதிர்ந்த கனிகள் கொண்ட
முதுபாளையும் என இவ்வாறு பல பக்குவப்பட்ட பலன்களையும்
ஒருங்கே தாங்கிநிற்கும் தென்னையினைத் தன்மையணி நலம்படக்
காட்டியதிறமும், இவ்வாறே பெரியோர் பல பக்குவமுடையார்க்கும்
அவ்வவர் தரத்துக் கேற்றவா றுதவும் பண்புடையாராவர் என்ற
குறிப்பும் காண்க.
இப்பாட்டில்
உயர்வுநவிற்சி முதலிய அணிநலங்களும்
உட்குறிப்பும் ஒருங்கு விளங்குவனவாம்.
நீர்வளத்தினால்,
கரைகளில் தென்னைகள் செழித்துவளரும்
நிலையும், அவற்றின் காய்கள் மிகுதியினாற் பறிப்பாரின்றி முற்றித்
தாமாக உதிரும் நிலையும், வாளைகள் குதித்து மேலெழும் இயல்பும்,
பலாப்பழங்கள் செழித்து வெடித்துச் சாறுபொழியும் தன்மையும்
ஒன்றுசேரக் காட்டி, நாட்டுவளங் கூறிய சுவையும் காண்க.
மேலோங்கிச்
செல்லும் வளங்களை, முதலில் கீழே சேற்றில்
வாழ்வாரே கொள்ளவைத்து, எஞ்சிய பலன்களையே பிறர்
கைக்கொள்ளவைத்த குறிப்பும், மேல்வரும் பாட்டின் கருத்துக்குத்
தோற்றுவாய் செய்ததும் காண்க.
"தாழையிள நீர்முதிய
காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி,
வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெய்யும் வைகாவிலே"
(சாதாரிப்பண் - 1) என்ற ஆளுடைய பிள்ளையாரது
தேவாரக்கருத்து இங்கு நினைவு கூர்தற்பாலது. "காய்மாண்ட
தெங்கின்பழம் வீழ" என்ற சிந்தாமணிப் பாட்டை இங்கு
ஒப்புநோக்கி இதன் உயர்வு கண்டுகொள்க. 4
|