1045.
|
வயல்வளமுஞ்
செயல்படுபைந் துடவையிடை
வருவளமும்
வியலிடமெங் கணுநிறைய மிக்கபெருந் திருவினவாம்
புயலடையு மாடங்கள் பொலிவெய்த மலிவுடைத்தா
யயலிடைவே றடிநெருங்கக் குடிநெருங்கி
யுளதவ்வூர். 5 |
(இ-ள்.)
வெளிப்படை. வயலின் வரும் வளங்களும்,
கைவினைச் செயல்களினால் விளக்கப்படுகின்ற பசிய தோட்ட
நிலங்களினின்றும் வரும் வளங்களும் மிக அகன்ற இடமெங்கணும்
நிறைய, அவற்றால் மிகுந்த பெரிய செல்வங்களையுடையனவாகி,
மேகந்தவழுமளவும் உயர்ந்த அளவில்லாத மாடங்கள் விளங்கப்,
பக்க இடங்களில் நெருங்கி மேலும் குடிகள் பெருகும் படியாகக்
குடிகளின் நெருக்கத்தினையுடையது அந்த ஆதனூர்.
(வி-ரை.)
வயல் வளம் - துடவையிடை வரு வளம்-
இவை நன்செய் புன்செய் என்ற இருபகுப்பினுள் வருவன.
செயல்படு - வயலுக்கும் உழுவர்களின் செயல் வேண்டப்படினும்
சேறுசெய்தல், நடுதல், களை கட்டல் என்ற பெருஞ்செயல்களின்
காலங்களிலேயன்றி ஏனைக்காலங்களில் ஆற்று நீர், ஏரி
நீர்
ஆதரவுசெய்து உழவர் செயலின்றித் தானாகப் பாய்ந்து பயிரை
வளர்த்து வர வுள்ளது வயல்வளம். துடவை வளம், அவ்வாறன்றித்
தொடக்க முதல் விளைவுமுற்றி அறுக்கும் வரையில் ஒவ்வோர்
நாளும் நீர் பாய்ச்சுதல், களைகட்டல், பறவை கடிதல், பயிர் காத்தல்
முதலிய பலவகையாலும் உழவர் செயல்கள் வேண்டப்படுவன. இது
குறிக்கவே, வயல்வளம் என்று வாளா கூறிய
ஆசிரியர்
செயல்படுபைந் துடவை வளம் என்றார்.
இடை
வருவளம் - புன்செய்த் தோட்டங்களில் பல
பயிர்களும் உடன் விரவும்படி விளைக்கப்படும். ஆதலின் அவற்றில்
விளைவு நன்செய்யிற்போல ஒரு காலத்தில் சேரவராமல்
இடையிடையே வருவனவும் உண்டு. இடை வருவளம் என்றது
இதனைக் குறித்தது. துடவை - சோலைகள் என்பாரும்
உண்டு.
செயல்படு
துடவை -
உழுது பயிரிடப்படுவனவும்,
மலைச்சரிவுகளிற்போல உழாது விதைக்கப்படுவனவும் எனத்
துடவைகள் இருவகைப்படும். "தொடுப் பெறிந் துழுத துளர்படு
துடவை" (பெரும்பாண் - 201), "தொய்யாது வித்திய துளர்படு
துடவை" (மலைபடு - 122) என்பன காண்க. அவற்றுள் இங்குக்
குறித்தவை உழுது விதைக்கப்படுவன என்பது குறிப்பு, நன்செய்
வயல்களினிடையே புன்செய்த் தானியங்களிலும் சிலவற்றைப்
பெறவும், மற்றும் பயன்கள் கருதியும் சில பகுதிகளை மேட்டு
நிலங்களாக வைத்துக் காத்தல் இந்நாளிலும் காவிரி நாட்டிற்
காணலாம். இவை வயல்களினிடையிடை தோன்றுவன என்ற
குறிப்பும் இடைவருவளம் என்றதனாற் புலப்படும்.
வியல்
இடம் எங்கணும் நிறைய - வியல் - அகலம்.
"வியலென் கிளவியகலப் பொருட்டே" (தொல் - சொல் - உரி -68).
மாடங்கள்இடமகல முடையனவாய் அமைக்கப்பட்ட அவ்விடம்
முழுமையும்.
மிக்க
பெரும் திருவின ஆம் - மிக்கஎன்பது,வகையாலும்,
பெரு என்பது தொகையாலும் நிறைவு குறித்தன.
திரு - உழவினால்
வருஞ்செல்வங்கள் எவ்வகைச் செல்வங்களும் உழவினால் விளைவன
என்பது துணிபு. "சுழன்றுமேர்ப் பின்னதுலகம்" - (குறள்)
திருவின
- திருவையுடையன. திரு - வினவு -
ஆம் - என்று பிரித்து
உழவர்களின் ஊக்கத்தைக்கண்டு அவர்கள்பால் அடைதல் வேண்டி
வழி வினவிச் சென்று, திரு, அடையும் என்றும் உரைக்க நிற்பதும்
காண்க. "ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா, வூக்க முடையா
னுழை" என்பது குறள்.
புயலடையும்
மாடங்கள் - மாடங்கள் மேகமண்டலம்
அளவும் உயர்ந்தன என்பதாம். தங்குதற்குவந்து மேகங்கள்
அடைகின்ற மாடங்கள் என்றலுமாம். 834-ல் உரைத்தவை பார்க்க.
அயல்
இடை வேறு அடிநெருங்கக் குடி நெருங்குதல்-
என்றது அயலில் அடியிடம் நெருங்கும்படி மற்றும் குடியிருப்பு
இடங்கள் வகுத்து ஊரினை அகலப்படுத்திச் செல்லுமாறு
அவ்வூரினுள் குடி நெருக்கமுடையதாதல். இவ்வாறு அகலப்படுத்திக்
குடிபுகும் இடங்கள் புதூர் என்ற பெயரால் அங்கங்கும்
உள்ளன
காண்க. (Extensions என்பர் நவீனர்). அடி என்பது உடம்பினை
அடி நிழல் பிரியாது தொடர்தல் போல நெருங்கிய தொடர்புடைமை
என்ற பொருள் குறித்தது. இதற்கு, இவ்வாறன்றிப் பக்கங்களில் ஓரடி
இடைவிட்டு என்றும், அருகிடங்களில் தனித்தனி இடையில் ஓரடி
நெருங்கியிருக்கும்படி என்றும், பக்கங்களில், தனித்தனி அடிக்கொரு
குடியாக என்றும், (அம்மாடங்களின்) வேறாக அயலிடங்களில்
அடியளவுக்கும் இடமின்றி என்றும், பற்பலவாறு முன்னுரைகாரர்கள்
உரைத்துப் போந்தனர். 5
|