1046.



மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயன்மருங்கு
                          பெருங்குலையிற்
சுற்றம்விரும் பியகிழமைத் தொழிலுழவர்
                           கிளைதுவன்றிப்,
பற்றியபைங் கொடிச்சுரைமேற் படர்ந்தபழங்
                             கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல நிலைத்துளதோர்
                          புலைப்பாடி. 4

     (இ-ள்.) வெளிப்படை. அந்தவூரின் மற்று வெளிப்புறத்தில்
மருத நிலத்தினைச் சார்ந்த வயல்களின் பக்கத்து உள்ள வரம்புகளின்
ஓரத்திலே, சுற்றந் தழுவுதலை விரும்பிய உரிமைத் தொழிலாளராகிய
உழவின் மக்களின் கிளைகள் நெருங்கிப், பற்றிய பசிய சுரைக்கொடி
மேலே படர்ந்த பழைய கூரையினையுடைய புல்லால் வேயப்பட்ட
சிற்றில்கள் பல நிலையாக நெருங்கியுள்ளது ஒரு புலைப்பாடி.

     (வி-ரை.) அவ்வூர் மற்றுப் புறம்பணை என்க. மற்று -
முன்சொன்ன குடியிருப்பு இடங்களில் வேறாக என்ற பொருளில்
வந்தது. புறம்பணை - ஊர்ப்புறத்துள்ள மருதநிலப் பகுதி.

     வயன்மருங்கு பெருங்குலையில் - வயலை அடுத்த
கரைப்பக்கம். குலை - கரைகளை அடுத்த வெளிநிலம். பெருவரப்பு.

     பெருங்குலையிற் சுற்றம் எனக்கூட்டிக், குலைகளிற் காய்கள்
நெருங்குவது போலப் பெருங்கூட்டமாய் நெருங்கிய சுற்றம்
என்றலுமாம்.

     கிழமைத்தொழில் உழவர் - (நிலக்கிழவர்க்கு) வேளாளர்க்கு
உரிமையால் உழவுத் தொழில் முயற்சி செய்யும் சாதியார். சுற்றம் -
சுற்றத்தார் - சுற்றம் விரும்பிய - சுற்றந்தழுவுதலை விரும்பிய.

     பற்றிய....சிற்றில் பல - இது புலைப்பாடியிற் கூட்டமாய்
நிறைந்த புலையர்கள் வாழும் சிறு குடிசைகளை, உள்ளவாறே
காட்டுவதோர் அரிய சித்திரமாகும். பற்றிய - சுரை - பற்றிய
-
என்பது சுரைக்கொடிகளில் இலைகளினடியிற் றண்டினின்றும்
கைபோலநீண்டு வளர்ந்த பகுதியினாற் கூரை, வேலி முதலியவற்றைப்
பற்றிக் கொண்டு கொடி மேலே படர்வதற்கு ஏதுவாகும் தன்மை
குறித்தது.

     சுரை மேற்படர்ந்த பழங்கூரை - இது புலைப்பாடி முதலிய
சேரிகளில் வாழ்வோர் தம் குடிசைகளின் கூரைக்கு ஆதரவு
பற்றியும், உணவுக்குக் காய்கள் பெறுதல் பற்றியும் சுரைக்
கொடிகளைக் கூரைமேற் படரவிடும் இயல்பு குறித்தது. புலையர்
முதலியோர் உண்ணும் புலால் முதலியவற்றோடு சமைத்து
உண்ணுதற்குச் சுரை ஏற்ற தகுதியுடைமையாலும், அதனைஅவர்களது
நிலக்கிழவர் முதலியோர் விரும்பாமையாலும் பெரும்பாலும்
சுரையைப் புலையர் வளர்ப்பது இயல்பு. புல்லால் வேய்ந்த
குரம்பையைப் பழுதுபடாவண்ணம் இக்கொடிகள் பற்றிப்
பாதுகாப்பதற்கும் உதவுவன.

     புற்குரம்பை - வைக்கோற் புல்லால் வேய்ந்த கூரையுடைய
சிறு குடிசை. இவ்வுழவர் தமக்குக் கிடைக்கும் உரிமையாகிய
புல்லினைக்கொண்டு தமது குடிசைகளை வேய்வர். கூரை
பழுதுபடாது பல ஆண்டுகள் நிலவும் பொருட்டு அதன்மேற் சுரைக்
கொடியையும் படர விடுவர்.

     சிற்றில் பல - பல சிறுகுடில்கள். நிலைத்துளது - அவர்கள்
வாழ்வது சிற்றில்களேயாயினும் அவை நிலைபெற்று வழிவழி அங்கு
வாழ்ந்து வரும் தன்மை குறித்தது. நிறைந்துளது என்பது பாடமாயின்,
நெருங்கியுள்ளது என்க.

     புலைப்பாடி - புலையர் வாழும் புறநகரிருக்கை, பாடி
-சேரி -முதலியன புறநகர்க் குடியிருப்பு இடங்களைக் குறிப்பன.
சக்கரப்பாடி - வியாசர்பாடி முதலிய வழக்குக்கள் காண்க. புலையர்
- இறந்த பிராணிகளின் புலால் பற்றிய தொழில் செய்து அதனை
உண்ணும் தொழிலாற் போந்த சாதிப்பெயர். இத்திருப்பாட்டின்
தன்மைநவிற்சியணியினது சிறந்தநிலை கண்டு களித்தற்பாலது.1 6


     1. இதுபற்றி எனது சேக்கிழார் 128-129 பக்கங்கள் பார்க்க.