1048.
|
வன்சிறுதோன்
மிசையுழத்தி மகவுறக்கு நிழன்மருதுந்,
தன்சினைமென் பெடையொடுங்குந் தடங்குழிசிப்
புதைநீழன்
மென்சினைய வஞ்சிகளும், விசிப்பறைதூங் கியமாவும், புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப்
புடைத்தெங்கு முடைத்தெங்கும். 8
|
(இ-ள்.)
வெளிப்படை. வலிய சிறுதோலின்மேல் உழத்தியர்
மகவைத் தூங்க வைக்கும் நிழலுடைய மருதமரங்களையும்,
தனது
முட்டைகளை அடைகாக்கும் பெட்டைக் கோழிகள் ஒடுங்குதற்
கிடமாகிய பெரிய பானைகள் புதைக்கப்பட்ட நிழல்தரும் மெல்லிய
கொம்புகளையுடைய வஞ்சி மரங்களையும், வார் கட்டிய
பறைகளைத் தொங்கவைத்த மாமரங்களையும், சிறிய
தலையினையுடய நாய்க்குட்டிகள் தங்குதற் கிடமாகிய தென்னை
மரங்களையும் அப்புலைப்பாடி தன்னிடத்தே எங்கும் உடையதாகும்.
(வி-ரை.)
மருதும், வஞ்சியும், மாவும், தெங்கும் அங்குள்ள
மரங்கள்; இவை மருதநிலப் பொருள்கள்; நீர்வளமிக்க இடங்களில்
உளவாவன. இதனால் அந்நிலத்து வளமும், நீரின் வளமும், அவை
மக்கட்கூட்டத்துக்கும் அவர்கள் வளர்க்கும் பிராணிகளுக்கும்
பயன்படும் பண்பும் கூறப்பட்டது காண்க.
மகவுறக்கும்
நிழல் மருது, குழிசிப்புதை நீழல்
வஞ்சி,
பறைதூங்கியமா, நாய்ப்புனிற்று
முழைத்தெங்கு என்று
உடம்பொடு புணர்த்தி யோதினது அவ்வவற்றானும் உளவாகும்
பயன்களை எடுத்துக்காட்டும் பொருட்டாம்.
வன்சிறுதோல்-
உழத்தியர் தமது மக்களை உறங்கவைக்கும்
பாயல் தோலேயாகும். இறந்தமாடு, எருமை ஆடு முதலியவற்றின்
தோல்களை உரித்துப் பண்படுத்திச் செருப்பு, பறி முதலியனவாக
ஆக்க உதவுவது புலையர் மரபுத்தொழில். அவற்றுள் வலிய சிறிய
தோல்களைத் தம் மகவுகளை உறங்கவைக்கப் புலைச்சியர் பயன்
படுத்திக்கொள்வர். வலிமை - மருத நிலத்துக்
கியல்பாயுள்ள
ஈரம் தாக்காமைக்கும், சிறுமை - மகவுக்குரிய
அளவுக்கும் தகுதி
ஆம்.
மென்
பெடை - மென்மை - முட்டையிட்டு அடைகாக்குந்
தருணமாதல் குறித்தது. பெடை - இடநோக்கிப்
பெட்டைக்
கோழியைக் குறித்தது.
பெடை
ஒடுங்கும் தடம் குழிசி - காற்று மழை வெயில்ஈரம்
முதலியவற்றால் சிதைவுறாது முட்டைகளை நன்கு அடைகாக்கும்
பொருட்டு உதவுவதற்கு அகன்ற வாயினையுடைய பானைகளை
மரநீழலிற் புதைத்து வைத்தல் வழக்கு.
மென்சினைய வஞ்சி
- வஞ்சிமரங்கள் நீர்ப்பெருக்குள்ள
இடங்களில் கரை ஓரங்களில் வளர்வதனால் அவற்றின் கொம்புகள்
செழித்த மெல்லியனவாய் இலைச் செறிவின்றி நீண்ட தன்மை
குறிக்கப்பட்டது. கிளை நீண்டிருத்தலால் நிழல் என்னாது நீழல்
என்றார்.
விசிப்பறை
தூக்கிய மா - விசிப்பறை - வார்களினால்
விசித்துக் கட்டப்பட்ட தோற்கருவியாகிய பறை. உழவு காத்தலும்,
பறைசாற்றுதலும் தமது சாதித் தொழிலாகப் புலையர் உடையர்.
அதற்காக இவர்களுக்கு விளை நிலங்களில் மானிய வரும்படி
உரிமை உண்டு. "ஊரில்விடும் பறைத்துடவை உணவு உரிமை"
(1053). பறை சாற்றும் வேலையில்லாத போது தமது பறைகளை
எலி, கறையான் முதலியவை ஊறு செய்யா வண்ணம் தமது
சிற்றில்களின் பக்கம் உள்ள மாமரங்களின் கொம்புகளில்
தூக்கிவைப்பது வழக்கு.
புன்தலை...புடைத்
தெங்கு - பறைச்சேரி வளைவில்
சில பழந் தென்னை மரங்கள் உண்டு; அவற்றினடியில் உள்ள
பாந்துகளில் நாய்கள் குட்டிகளை ஈன்று காப்பது இயல்பு.
இவ்வாறன்றி நாய்க்குட்டிகளிருந்த பள்ளத்தினருகில் உள்ள
தென்னை மரங்கள் என்றுரைப்பாருமுண்டு. அப்புலைப்பாடி
எங்கும்...உடைத்து என எழுவாய் முன் "மற்றவ்வூர்" என்ற
பாட்டினின்றும் வருவித்துரைத்துக் கொள்க. 8
|