1051.
|
இப்படித்தா
கியகடைஞ ரிருப்பின்வரைப்
பினின்வாழ்வார்;
மெய்ப்பரிவு சிவன்கழற்கே விளைத்தவுணர்
வொடும்வந்தார்;
அப்பதியி லூர்ப்புலைமை யான்றதொழிற் றாயத்தார்;
ஒப்பிலவர் நந்தனா ரெனவொருவ ருளரானார். 11
|
(இ-ள்.)
மெய்ப்பரிவு....வந்தார் - உண்மையன்பினைச்
சிவபெருமான் திருவடிக்கே விளைவித்ததனாலுளதாகிய முன்
உணர்ச்சியொடும் இவ்வுலகில் வந்தவதரித்தாராய்; நந்தனார் என
ஒருவர் - நந்தனார் என்ற பெயருடைய ஒருவர்; இப்படித்தாகிய....
வாழ்வார் - இவ்வாறாக உள்ள புலையர் சேரியில் வாழ்வாராயினர்;
அப்பதியில்...தாயத்தார் - அவ்வூரில் ஊர்ப்புலைமையால் அமைந்த
தொழில் தாய உரிமையுடையவர்; ஒப்பிலவர் - தமக்கு வேறெவரு
மிணையில்லாதவர்; உளரானார் - உள்ளவராயினார்.
(வி-ரை.)
இப்படித்து - மேலே கூறியபடியாகிய இந்தத்
தன்மையுடையது. கடைஞர் இருப்பு - புலையர்களின்
குடியிருப்பு.
வரைப்பு - வட்டம்; வளாகம்.
வந்தாராய் -
வாழ்வார் - தாயத்தார் - நந்தனார் என ஒருவர்
- உளர் - என்க.
மெய்ப்பரிவு...வந்தார்
- மெய்ப்பரிவு - உண்மையன்பு.
"உள்ளத்திற் றெளிகின்ற வன்பின் மெய்ம்மையுரு" (திருஞான - புரா
- 1023) என்றது காண்க. அன்பின் உண்மையாவது அதனின்றும்
பிரிந்து வேறொன்றின்பாலும் செல்லாமை.
கழற்கே
விளைத்த - அன்பினைக் கழலினிடத்தே செலுத்தி
விளைவித்ததன் பயனாகப்பெற்ற. ஏகாரம் - பிரிநிலை. "மறந்துமய
னினைவின்றி" (1052) என்பது காண்க.
உணர்வொடும்
வந்தார் - முன் உணர்ச்சியுடனே வருதல்
என்ன தன்மையால் விளங்குவதாயிற்று என்பதனை மேல்வரும்
பாட்டில் உரைக்கின்றார்.
விளைத்த
உணர்வொடும் வந்தார்- "ஒருமைக்கட் டான்
கற்ற கல்வி யொருவற், கெழுமையு மேமாப் புடைத்து" என்றும்,
"என்னொருவன் சாந்துணையுங் கல்லாதவாறு" என்றும் (குறள்)
கூறியவாறு, ஒரு பிறவியிற் கற்ற கல்வி, ஒருவனுக்குப், பின்னர்ப்
பல பிறவிகளிலும் உடன்வந்து பயன்படும் என்பதறியப்படும்.
அதுபோலவே ஓருயிர்செய்த புண்ணிய பாவங்களும் அவ்வுயிருடன்
பின் பிறவிகளிற் கூடவே வந்து அதனால் அனுபவிக்கப்படும்
என்பதும் உண்மை. உயிர் பற்பல பிறவிகளிலும் வெவ்வேறு உடம்பு
எடுத்துவரும். ஆயின், அது தனது முன்னைக் கல்வியையும்,
ஞானத்தையும், புண்ணிய பாவங்களையும், விடாது உடன் கொண்டே
வரும். இதுபற்றியே, ஒருகுலத்தில் ஒரு குடியில் ஒருவன்
அதனுள்வேறு எவருக்குமில்லாத ஞானத்துடன் மேம்படுதலும்,
அல்லது அவ்வாறே வேறுவகையால் மாறுபாடாயிருத்தலும்
காண்கின்றோம். இவ்வாறு வரும் விளைத்தவுணர்வின்
றிறத்தைச்
"சந்தமறைக ளுட்படமுன் றலைவர் மொழிந்த வாகமங்கண், முந்தை
யறிவின் றொடர்ச்சியினால் முகைத்த மலரின் வாசம்போற், சிந்தை
மலர வுடன்மலருஞ் செவ்வி யுணர்வு" (சண்டீசர் - புரா - 13),
"ஈசர்கழல் முறைபுரிந்த முன்னுணர்வு மூள" (திருஞான - புரா - 61)
என்ற இடங்களிற் காண்க. "முன்புசெய் தவத்தி னீட்டம்" (751)
என்றதும், அங்குரைத்தனவும் பார்க்க. வந்தார் -
இவ்வுலகிற்
பிறந்தருளினார்.
ஊர்ப்புலமை
ஆன்ற தொழில் தாயம் - முன்னாளில்
கிராமத்தண்டல், கிராமத் தோட்டி முதலிய பொதுச்சமூக ஊழியம்
செய்வோர் அதனை வழிவழியாகச் செய்து வருவர். அத்தொழிலிற்
றாய உரிமையும் உடையவர். "தள்ளாத தங்க டொழிலுரிமைத்
தாயத்தின்" (612) என்றது காண்க. அதற்காக, அவர்களுக்கு மானிய
பூமிகளும் வேறு உரிமையான வரவுகளும் உண்டு. "ஊரில்விடும்
பறைத்துடவை உணவுரிமை" (1053) எனப் பின்னர்க் கூறுவது
காண்க.
ஒப்புஇல்
அவர் - இணையில்லாதவர். புலையர் சேரியாகிய
மிகத்தாழ்ந்த இடத்தினின்ற புலையர் மரபினின்று. மிக உயர்ந்த
நிலையில், பிறந்ததுமுதல் சிவனடிப்பற்றில் உறைத்து விளங்கிய
இவரது திறம் இணையற்றதுதான்! உளர் ஆனார் -
உள்ளவராயினர்.
உளர் - முற்பிறப்பில்
சிவனைநோக்கி நோற்காதார் பலரும்
இப்பிறப்பில் என்னுடையரேனும் இல்லாரேயாவர்; முற்பிறப்பில்
நோற்றார் இங்கு என்னில்லா ரேனும் உள்ளாரேயாவர் என்பது
நூற்றுணிபு. "இலர்பல ராகிய காரண நோற்பார், சிலர்; பலர்
நோலா தவர்" என்ற திருக்குறட் கருத்தினை இங்கு வைத்துக்
காண்க."நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற, குலமிக
ராகக் குலமதுண் டாக" (புறநீர்மை - திருவாலவாய்) என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரங் கூறியபடி உலகத்தார் காணும்
நலமும் குலமும் இலராயினும் சிவன் கழற்கே அன்புசெய்து
முன்விளைத்த வுணர்வுடைமையால் இவர் எல்லாமுள்ளவராயினார்
என்க. 11
|