1052.



பிறந்துணர்வு தொடங்கியபின் பிறைக்கண்ணிப்
                              பெருந்தகைபாற் சிறந்தபெருங் காதலினாற் செம்மைபுரி சிந்தையராய்
மறந்துமய னினைவின்றி வருபிறப்பின் வழிவந்த
அறம்புரிகொள் கையராயே யடித்தொண்டி
                           னெறிநின்றார்.  12

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வுலகில் வந்து பிறந்து தம்முடைய
உணர்வு தெரியத் தொடங்கிய பின்னர், அந்நாள் முதலாகப்,
பிறையாகிய கண்ணிமாலையைச் சூடிய பெருந்தகையாம்
சிவபெருமானிடத்துச் சிறப்புடைய பெரிய ஆசையினாலே
செம்மையினை விரும்பும் மனத்தையுடையவராகி, மறந்தாயினும்
வேறு நினைவில்லாதவராகித், தாம் பிறந்த மரபினுக்குரிய
சிவதருமங்களைச் செய்யும் கொள்கையையுடைய வராகியே சிவனடித்
தொண்டின் வழியிலே நிலைபெற்று நின்றனர்.

     (வி-ரை.) உணர்வு தொடங்கிய பின் - செம்மைபுரி
சிந்தையராய் -
ஒருவனுக்கு உணர்வு தெரியத்தொடங்குமுன்
நன்மையை அறிந்து கடைப்பிடித்து ஒழுகல் இயலாமையின் உணர்வு
தொடங்கிய பின்
என்றார். "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங்
காதல், சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்" (அற்புதத் திருவந்தாதி -
1)என்ற அம்மையார் திருவாக்கினை இங்கு நினைவுகூர்க. உணர்வு
தொடங்கிப் பலகாலமாகியும் சிவநெறியில் உணர்வினைச்
செலுத்தமாட்டாது சாமளவும் அவநெறியே சென்று வீழ்வார் உலகிற்
பலராதலின், இவ்வாறு உணர்வு தொடங்கிய நாள் முதல்
செம்மைபுரிதல் இந்நாயனார்போன்ற எந்தம் பெருமக்களுக்கே
கூடுவதாம் என்க.

      செம்மை புரிசிந்தை - செம்மை-சிவமாந்தன்மை."செம்மையாய சிவபத மளித்த செல்வமே", "செம்மைநல மறியாத சிதடர்" (திருவா -
அச்), "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்
கரையன்" (திருத்தொண்டத் தொகை - 4), "செம்மை யாகிய கருத்தராய்ச் சிவகதி தேர்வார்" (திருவிளை - புரா - வாதவூ- உப -
பட - 10) முதலியவை காண்க. "செம்மையே திருநாளைப்போவார்"
என்ற முதனூல் ஆட்சி போற்றப்பட்டு இப்பாட்டினால் விரிவுரை செய்யப்பட்டது. 172

     புரிதல் - விரும்புதல். செம்மையினையே விரும்பிய அதனால்,
அயல் நினைவுகள் அறவே நீங்கத், திருவடித் தொண்டினையே
செய்துவந்தனர் என்பதாம்.

     பிறைக் கண்ணி - பிறையாகிய கண்ணிமாலை. உருவகம்.
"மாதர் பிறைக் கண்ணி யானை" முதலியவை காண்க.

     பெருந்தகை - பெருந்தகைமையாவது அடைந்தோர்களது
பிழைபொறுத்து, அவLர்களுடைய சிறுமை நோக்காது,
ஆட்கொண்டருளுதல், பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தை"
(திருத்தாண்டகம் - திருச்செங்காட்டங்குடி).

     மறந்தும் அயல் நினைவின்றி - அயல -சிவபெருமானுக்கு
அயலாகிய - வேறாகிய. அயல் - பிறதெய்வங்களை என்பாருமுண்டு.
"உனைநான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" என்ற நம்பிகள்
தேவாரக்கருத்து இங்கு வைத்துக் காணத்தக்கது.

     வருபிறப்பின்வழி வந்த அறம்புரி கொள்கையராயே-
தாம் பிறந்த மரபுக்குரிய நிலையில் என்ன சிவதருமங்களைச்
செய்தல் நூல் விதிகளுக்கு இணங்குமோ அவற்றைச் செய்வோம்
என்ற கொள்கையில் நின்றே. இக்கொள்கையைச் செயல் முறையில்
எவ்வாறு கொண்டு செலுத்தினார் என்பது மேல்வரும் மூன்று
பாட்டுக்களால் விரித்துக் கூறப்பட்டது.

     சிவன் பணியும் அடியார் பணியும் செய்தல் வேண்டுமாயின் தாம்தாம் பிறந்த மரபுக்குரிய நூல்விதி வழக்குக்களை விட்டு
நீங்குதல் வேண்டுமென்று சிலர் (பலர்?) கருதுகின்றார்கள். பிறந்த
குடியொழுக்கில் நின்றே அதற்கு ஏற்றவகையால் சிவதருமங்களும்
திருத்தொண்டும் செய்தலும் கூடும் என்பது நந்தனார் கொண்ட
கொள்கை.

     வீடுபெற முயல்வோர்கள் சாமுசித்தர் என்றும், வைநயிகர்
என்றும் இரு வகைப்படுவர். இவர்களுள் பண்டைநற் றவத்தாற்
றோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டராகிய முதலாவது
பகுப்பில் சார்ந்தவர் நந்தனார். ஆயின் நந்தனார் தமது குலமரபு
நிலைகடவாது நின்றே அதற்குத்தக்க தொண்டு செய்தவர். இதனை
மேல்வரும் மூன்று பாட்டுக்களானும், "இவ்வகையாற் றந்
தொழிலினியன்றவெலாம்" (1055) என்றதனாலும் உணர்க.
இவ்வாறன்றிக் குலமரபுக்குத் தக்கவாறு விதிக்கப்பட்ட வரம்பினைக்
கடந்த சாமுசித்த நிலையினின்று வீடு பேற்றின் முயன்ற கண்ணப்ப
நாயனார் முதலிய பெரியோர் சரிதங்களையும் இங்கு ஒப்புநோக்கிக்
கண்டு உண்மை தெளிந்து கொள்க.

     கொள்கையினராய் - வழிநின்றார் - என்பனவும்
பாடங்கள்.12