774.
|
"கொழுவிய
தசைக ளெல்லாங் கோலினிற் றெரிந்து
கோத், தங்
கழலுறு பதத்திற் காய்ச்சிப், பல்லினா லதுக்கி,
நாவிற்
பழகிய வினிமை பார்த்துப், படைத்தவிவ் விறைச்சி,
சால
அழகிது; நாய னீரே! யமுதுசெய் தருளும்"
என்றார்.
125 |
774.
(இ-ள்.) வெளிப்படை. "கொழுப்பினையுடைய
தசைகளை
யெல்லாம் தெரிந்து அரிந்து எடுத்துக் கோலினிற்கோத்து அங்கு
நெருப்பில்உற்றபதம் பொருந்தக் காய்ச்சியபின், பல்லினால் அதுக்கி,
முன் பழகியநாவினால் இனிய சுவை ஆராய்ந்து பார்த்துப் படைத்த
இவ்விறைச்சி மிகவும் அழகியது; நாயனீரே! தேவரீர் இதனை
அமுதுசெய்தருளும்" என்றார். 125
774.
(வி-ரை.) கொழுவிய
- கொழுப்போடு கூடிய
இன்புறுதசைகள் வெவ்வேறம்பினி லீர்ந்து கொண்டு (766).
கொழுந்தசை (767) என்றவை காண்க. "கறிவிரவு நெய்சோறு"
(ஆளுடைய நம்பிகள் தேவராம்) என்றதுபோலக் கொழுப்புடன்
கலந்திருத்தலால் இவையே ஊனினது மிக இனிய பகுதிகள்.
கொழுவிய
...... இவ்விறைச்சி - திண்ணனார் அவற்றைத்
தேர்ந்து எடுத்துச் சமைத்த செயலினையும் அவற்றின்
இனிமையினையும் தமது தேவருக்கு எடுத்துச்சொல்லிப் புகட்டும்
அன்பின்றிறத்தை உணர்த்த இவ்வாறு கூறினார். இவை
766 - 767-ல் உரைக்கப்பட்டன. அமுதுபடைக்கச் செய்த
செயல்களை யெல்லாம் தெரிந்து - கோத்து - காய்ச்சி - அதுக்கி -
பார்த்து - படைத்த என்று இவ்வனவும் தனித்தனி கூறியது
இச்செயல்கள் ஒவ்வொன்றும் இவை தேவர்க்கு இனிய
அமுதுபடைக்கவேண்டும் என்ற ஒருமைப்பட்ட உணர்ச்சியுடனே
திண்ணனார் முன்னர் எண்ணிச் செய்தனர் என்பதைக் குறித்ததாம்.
சிவபூசைக்கு வேண்டிய நீர் - பூ - அமுது முதலிய யாவையும்
அவ்வாறே அவ்வவற்றில் அழுந்திய ஒருமைப்பட்ட மனத்துடன்
எண்ணியெண்ணி அமைத்தல் வேண்டும் என்ற சிவாகம
விதிகளையும் இங்கு வைத்துக் காண்க. முன்னி (559), நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு (560) என உரைத்தவற்றை இங்கு
நினைவுகூர்க.
பழகிய
நாவில் இனிமை பார்த்து என்று கூட்டுக. முன்
பழக்கமுடைய நாவினால் இனிய சுவையுடைய ஊனினை அறிந்து.
இரசம் என்ற புலனுக்கு உரிய பொறி நாவேயாம். ஆதலின் இனிமை
பார்த்து என்றலே அமையுமாயினும் பல நாட் சுவைத்துச் சுவைத்துப்
பார்த்துண்ட பழக்கமுள்ள நாவினது முன் அனுபவத்தின் றுணை
கொண்டு இதன் சுவையினை அறிந்தாராதலின் இது தவறுபடாது
நிச்சயிக்கப்பட்ட இனிமையுடையது என வற்புறுத்தற் பொருட்டு
நாவில் என்று கூறியதுடன் அதற்குப் பழகிய
என்ற
அடைமொழியும்
தந்தோதினார்.
சால
அழகிது - மிக இனியது. முன்னர் மச்சிது
என்றதன்கருத்தும் இது . குழவிகட்கு உணவு ஊட்டும் தாய்மார்,
அவ்வுணவின் சிறப்பும், அமைப்பும், படைப்பும் தனித்தனி எடுத்துக்கூறி
ஊட்டும் அன்பினியல்பு இங்கு வைத்துக்காண்க.
நாயனீரே!
- தலைவரே!. அமுது செய்தருளும் -
அமுது
செய்யக் கடவீர். இம்மொழிகள் சொல்லியது, பார்ப்பான்
முன்பறைந்து ஊட்டினான் என்று நாணன் உபதேசித்த அதனைத்
திண்ணனார் கடைப்பிடித்து அவ்வாறே செய்த செயல் என்க.
இறைவரை அமுதூட்டுவிக்கும்
ஆகம மந்திரங்களும், "இது
என்ன அமுது; இதனைக் தேவரீர் உண்டருளும்" என்ற இக்கருத்தே
பற்றியன வாதலும் காண்க. 758-ல் உரைத்தவை பார்க்க.
பூசைக்குரிய பொருள்களைச்
சேர்த்தவகையை மேல்
770 - 771-ல் தொடர்ந்து கூறியதுபோலப் பூசைவினையை
இவ்விரண்டு பாட்டுக்களிற்றொடர்ந்து கூறினார். 125
|