1054. போர்வைத்தோல் விசிவாரென் றினையனவும்,
                                 புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கு நிலவகையில்
சேர்வுற்ற தந்திரியுந், தேவர்பிரா னர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ சனையுமிவை
                           யளித்துள்ளார். 14

     (இ-ள்.)வெளிப்படை. போர்வைத் தோலும்; விசிவாரும்,
மற்றும் இவ்வாறாகிய பிற சாதனங்களும், இசை பேசுகின்ற
நேர்மையுடைய வீணைக்கும் யாழுக்கும் அவ்வற்றுக்கேற்ற வகையிற்
பொருத்தமுற்ற தந்திரியும், அன்புடனே தேவர் பெருமானுடைய
அருச்சனைகளுக்குரிய கோரோசனை முதலிய பொருள்களும் ஆகிய
இவற்றை அளித்துள்ளார். 14
  

     1054. (வி-ரை.) போர்வைத்தோல் - முகத்தை இறுக மூட
உதவும் தோல். விசிவார் - போர்வைத்தோலை அக்கருவியில்
இறுகப்பிணிக்க உதவும் வார். விசித்தல் - இறுகக் கட்டுதல். வார்
- வார்ந்து - கிழித்து - எடுக்கப்படுவது.

     இசைபுகலும் நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் என்க.
இசைபுகலுதலாவது மிடற்றுப் பாடல்போலச் சொல்லமைதியினை
நேராகப் பேசும் வீணையும் யாழும். இவை வெவ்வேறு வகைப்பட்ட
நரம்பு இசைக்கருவிகள். யாழ் பலவகைப்படும்.

     நிலைவகையிற் சேர்வுற்ற தந்திரி- நீடு நிலை பெறும்
படியும், ஒத்து இயலும்படியும் உள்ள நரம்புகள். தந்திரி -
இசைக்கருவியின் நரம்புகள். இவை இறந்த பிராணிகளின்
நரம்புகளை எடுத்துப் பண்படுத்தியும் முறுக்கியும் உண்டாக்கப்
படுவன. தந்திரி இந்நாளில் உலோகங்களின் கம்பிகளாலும்
ஆக்கப்படுகின்றன.

     அர்ச்சனைகட்குக் கோரோசனையும் ஆர்வத்துடன்
அளித்துள்ளார்
என்க. கோரோசனை- பசுவின் வயிற்றினின்றும்
எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள ஒரு வாசனைப் பண்டம். இது
இறைவனது திருமெய்ப்பூச்சுச் சந்தனக் குழம்புக் கலவைக்கும்
உதவுவது. அர்ச்சனை - சிவன் வழிபாடு.

     இவை - தோலும், வாரும், தந்திரியும், கோரோசனையும்
என்ற இவை. ஆர்வத்தினுடன்- சிவார்ச்சனைக் குதவுவதில்
முற்பிறப்பின் உணர்வினால் நந்தனாருள்ளத்துப் பெருகிய ஆசை
குறித்தது. இப்பொருள்கள் புலையர்க்குத் தமது குலத்தொழிலிற்
கிடைப்பன. இவற்றை விற்றுத் தமது வயிற்றுப் பிழைப்புக்கு உதவும்
பொருள்களாகவே காணும் ஏனையோர் போலாது, நந்தனார், தம்
சிவத்திருத்தொண்டுக்குரிய பொருள்களாகக் கண்டு அவ்வாறே
பயன்படுத்தினர். தம்மைக்கண்டு உருகிப் பசுக்கள், கறவாமே
பொழிந்த, பாலினைக்கண்டு, "செம்மை நெறியே யுறுமனத்திற்
றிருமஞ் சனமாங் குறிப்பு உணர்ந்து", சிவார்ச்சனைக்குப்
பயன்படுத்திய சண்டீச நாயனார் சரித வரலாறு இங்குச் சிந்திக்கத்
தக்கது. திருநீலகண்ட நாயனார் தம் தொழிலில் வந்த மட்கலங்களின்
ஊதியத்தைத் தம் அமுதுக்கு ஆக்கித், தாம், தொழில் செய்து
கொண்ட திருவோடுகளை அடியார்களுக்கு அளித்த திறமும்
இங்குக் கருதத்தக்கது. 14