1055.
|
இவ்வகையாற்
றந்தொழிலி னியன்றவெலா
மெவ்விடத்துஞ்
செய்வனவுங், கோயில்களிற் றிருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு மிகுதியினா லாடுதலும்,
அவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வா ரந்நாளில், 15 |
1055. (இ-ள்.)
வெளிப்படை. இவ்வகையாலே தமது
தொழிலில்இயன்ற அளவு எல்லாவற்றையும் எவ்விடத்திலேயும்
செய்வனவும் திருக்கோயிலின் திருவாயிற் புறத்தே நின்று,
உண்மை பொருந்திய பேரன்பின் மிகுதிப்பாட்டினாலே,
ஆடுவதும், பாடுவதுமாக நிகழ்ந்துவரும் அந்நாளில். 15
1055.
(வி-ரை.) தம்தொழிலில்
இயன்ற எலாம் - தமது
குலத்தொழிலின் (புலைத்தொழிலின் ) வருவாயினாற் கிட்டும்
பொருள்களாற் செய்யத்தக்க சிவத் திருத்தொண்டுகளை யெல்லாம்.
எல்லாம் - செய்வனவும் என்க. முற்றும்மை
தொக்கது.
இவ்வகையால்
செய்வனவும், ஆடுதலும், பாடுதலும்
ஆய்நிகழ்வார் என்க.
ஆய்நிகழ்வார்
- இச்செயல்கள் நிகழ்ச்சியிற் பொருந்த
வாழ்வார் என்பது.
மெய்விரவு...பாடுதலும்
- மிக்க அன்பு. பேரன்பு எனப்படும்.
அது மிகுதிப்பட்டு உண்மையுடன் பொருந்தியபோது தம்வச மிழந்து
ஆடுதலும், பாடுதலும், பிறவும் நிகழும். "ஆடு கின்றிலை கூத்துடை
யான்கழற் கன்பிலை யென்புருகிப், பாடு கின்றிலை பதைப்பதுஞ்
செய்கிலை" (திருவாசகம்), "தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி"
(திருவாரூர் - தாண்டகம்), "குன்றென வளர்ந்த தோள்கள்
கொட்டினார் கூத்து மாடி" (823), "கும்பிட்டுத் தட்டமிட்டுக்
கூத்தாடித் திரியே" (சித்தி - 12) முதலிய அன்பினிலக்கணங் கூறும்
அளவைகளைச் சிந்திக்க.
அவ்வியல்பு-
மெய்விரவு பேரன்பு மிகுதியான அந்த இயல்பு.
மேலே சொல்லிய அந்த என அகரம் முன்னறி சுட்டு.
எவ்விடத்தும்
செய்வன - மேலே கூறிய பொருள்களைச்
சிவனுக்காக ஆக்குதல். இவை கோயிலின் புறத்திருந்து
எவ்விடத்தும் செய்யத்தக்கன. மேல்வரும் ஈடுபாடாகிய ஆடல்
பாடல்கள் திருக்கோயிலின் திருவாயிலின்
புறத்தே எதிர்நின்று
செய்யத்தக்கன. 15
|