1056.
|
திருப்புன்கூர்ச்
சிவலோகன் சேவடிகண் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே
யருத்தியினா லொருப்பட்டங் காதனூர் தனினின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்தவ்வூர்
மருங்கணைந்தார்.
16 |
1056. (இ-ள்.)
வெளிப்படை. திருப்புன்கூரில்
எழுந்தருளியிருக்கும் சிவலோகநாதருடைய
செம்மையாகி
திருவடிகளை மிகவும் நினைந்து விருப்பத்தோடும் தாம் வேண்டிய
திருப்பணிகளைச் செய்வதற்கே ஆசையினால் மனவொருமைப்
பட்டாராய், அங்கு ஆதனூரினின்றும் புறப்பட்டு வருத்த முறும்
காதலினால் அந்தத் தலத்தின் பக்கத்தை வந்து அணைந்தனர். 16
1056.
(வி-ரை.) திருப்புன்கூர்- புன்குமரம் தலமரமாதலின்
இப்பெயர் பெற்றது. தலவிசேடம் பார்க்க.
சிவலோகன்
- இத்தலத்துச் சுவாமி பெயர் சிவலோகநாதர்
என்பது.
விருப்பினுடன்
- தாம் செய்யும் திருப்பணிகளை மிகவும்
விரும்பிச் செய்தல் வேண்டும் என்ற மனநிலை குறித்தது.
அருத்தியினால்
ஒருப்பட்டு - அத்திருத்தலத்திற்
றிருப்பணிகள் செய்வதற் கென்றே மனவொருமைப்பாடு பெற்று,
இது ஆதனூரினின்றும் புறப்படும் போது அவரது ஆர்வமிகுந்த
மனநிலை குறித்தது.
வருத்தமுறும்
காதல் - ஆதனூரினின்றும் வழிக்கொண்டு
திருப்புன்கூருக்கு வரும்போதும், அங்கு வந்தணைந்தபோதும்
உள்ள அவரது மனநிலை குறித்தது. தம்பணிகள் வேண்டுவன -
வேண்டுவனவாகிய பணிகளுள் தமக்குரியவை. இவை முன் மூன்று
பாட்டானும் கூறப்பட்டன. வேண்டுவன என்பது அத்திருத்தலத்திற்
பொருந்துவன என்ற பொருளில் வந்தது.
அருத்தி
- விருப்பத்தின் செறிவு. "(உருத்தொரியாக்காலத்தே
உள்புகுந்தென் னுளமன்னி...ஆண்டு கொண்ட...தித்திக்கும்
சிவபதத்தை-) அருத்தியினால் நாயடியேன்
அணிகொடில்லை
கண்டேனே" (கண்டபத்து - 3) என்ற திருவாசகப் பொருளை ஓர்க. சேவடிகள்
மிக நினைந்து என்ற கருத்துமிது.
வருத்தமுறும்
காதல் - அருத்தி மிக்கபோது அது காதலாய்
விளையும்; காதலிக்கப்பட்ட அப்பொருள் கைகூட நீட்டிக்கும்
காலமெல்லாம் வருத்தம் வரும். "யான் மிக வருந்து கின்றே
னேயர்கோ னார்தா முற்ற, வூனவெஞ்சூலை நீக்கி யுடனிருப்
பதனுக் கென்றார்" (ஏயர்கோன் - புரா - 401) என்றது காண்க. இது
ஆராத காதல். 16
|