1058.



சிவலோக முடையவர்தந் திருவாயில் முன்னின்று
பவலோகங் கடப்பவர்தம் பணிவிட்டுப் பணிந்தெழுந்து
சுவலோடு வாரலையப் போவார்பின் பொருசூழல்
அவலோடு மடுத்ததுகண் டாதரித்துக்
                           குளந்தொட்டார். 18

     (இ-ள்.) வெளிப்படை. சிவலோகநாதருடைய கோயில்
திருவாயின் முன் நின்றுகொண்டு உலகிற் பிறவியைக் கடக்கும்
சிவநெறி நின்றவராகிய நந்தனார், (இறைவனை வழிபடும்)
திருப்பணியை முடித்துக் கொண்டு, பணிந்து எழுந்து, முதுகில்
வார்கள் அலையும்படி செல்பவர், அத்திருக்கோயிலினை அடுத்துப்
பின்புறமாக ஒரு இடம் பள்ளமாக அமைந்திருத்தலைக் கண்டு,
விருப்பத்துடன் அதனைக் குளமாகத் தோண்டினார்.

     (வி-ரை.) சிவலோகமுடையவர் - திருப்புன்கூர்ச் சிவலோக
நாதர். சிவலோகத்துக்கு நாயாகராகிய இறைவர் என்றலுமாம்.

     பவலோகங் கடப்பவர் - உலகப் பதம் கடப்பவர் (நந்தனார்)
என்க. பிறவியில் வாராத நிலையடைய முயற்சிப்பவர். சிவநெறியில்
நிற்பவர். பவம் - பிறப்பு - பிறப்பாகிய உலகம் என்றலுமாம்.
முன்னைப் பிறவியிற் சிவன் கழற்கே விளைத்த உணர்வு (1051)
உடையாராய் வந்த நந்தனார், இனிப் பிறவாத நெறியில் நின்று
சிவத்தொண்டு செய்தனர் (1052) என்பது முன் உரைக்கப்பட்டது.
"இப்பிறவி யாட்கொண் டினிப்பிறவா மேகாத்து" (திருவம் - 12)
என்ற திருவாசகமும் காண்க.

     தம்பணி விட்டு - தம்பணி - சிவலோக நாதரை நேரே
கும்பிடுமாறு புலப்படக் கண்டவுடன் திருவாயிற் புறநின்று ஆடுதலும்
பாடுதலுமாகிய பணி. 1055 பார்க்க. இப்பணிகளைக் "கண்ணாரக்
கண்டுமென் கையாரக் கூப்பியு, மெண்ணார வெண்ணத்தா
லெண்ணியும்" (அற்புதத் திருவந்தாதி) என்றபடி ஆரச் செய்து
முடித்து, அதன்பின் யணிந்து, எழுந்து என்க. இதற்கு இவ்வாறன்றித்,
தோற்கருவியைக் கீழே வைத்து என்றும், சுதந்தரமிழந்து என்றும்
உரை கூறுவாரும் உண்டு.

     சுவலோடு வாரலையப் போவார் - திருவாயிற்
புறநின்றபடியே நேரேகும்பிடும்படி இறைவன் தமக்குத்தந்த
பேரருளின்றிறத்தை நினைத்து அன்பினால் உருகுமவர், அந்த
ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி, மீளமாட்டா தேறிப்,
பேய்கொண்டார் போல அசைந்து செல்கின்றாராதலின்,தமது
தோளிற்றாங்கிய இசைக்கருவியின் வார்கள் ஒழுங்கிலே தங்கி
நில்லாதபடி அலையச், சென்றனர் என்பதாம்.

     ஒருசூழல் அவலோடு பின்பு அடுத்தது கண்டு- என்க.
அவல் - பள்ளம். சூழல் - வட்டமாகிய இடம். சோலை
என்பாருமுண்டு. பின்பு- கோயிலுக்குப் பின்புறம், திருக்கோயிலில்
இறைவனைத் தரிசித்து, மீளா நிலைமையில் மீண்டு, தம் ஊருக்குப்
போகின்றவர் கோயிலை அடுத்துப் பின்புறம் உள்ள ஒரு இடம்
பள்ளமாய்க் குளம் தோண்டத் தகுதியுள்ளதாயிருந்தது கண்டு
அதனைக் குளமாகத் தோண்டலாமென்று விருப்பம் கொண்டு
தோண்டினார்.

     ஆதரித்துக் குளம் தொட்டார் - ஆதரம் - சிவன்பாற்
பெருகிய அன்பு - விருப்பம். எல்லா வுயிர்களுக்கும் பயன்படும்
நீர்நிலை தோண்டுதல் பசுதர்மமாகிய உலகநிலை அறங்களுள்
ஒன்று. "காவளர்த்துங் குளந்தொட்டும்...யாவருக்குந் தவிராத வீகை
வினைத் துறை" (திருநா - புரா - 36) என்றது காண்க. அது வேறு.
இங்கு இந்தச் சூழல் அவ்வாறன்றிக், கோயிலினை அடுத்து
உள்ளதாதலின் திருக்கோயிற் குளமாக நின்று அடியார்களுக்குப்
பயன்படுமாதலின் சிவன் பணியாகிய பதிதருமமாம் என்று
கொண்டவராய்ச், சிவத்தொண்டில் நின்ற நந்தனார், குளம்
தொட்டனர் என்க. 1052, 1053, 1055-ல் உரைத்தபடி தமது மரபின்
வரம்பு கடவாது நின்று சிவன் பணி செய்தனராதலின் கோயிலின்
புறத்து அடுத்து இருந்த குளம் தோண்டுகின்ற இதனைச் சிவன்
பணியாக எண்ணிச் செய்தனர் என்பதாம்.

     தொடுதல்- தோண்டுதல். இத்திருக்குளம் கோயிலை அடுத்து
மேல்புறம் அழகாக விளங்குவதனை இன்றும் காணலாம். படம்
பார்க்க.

     பவலோகங் கடந்தவர்- என்பதும் பாடம். 18