1059.
|
வடங்கொண்ட
பொன்னிதழி மணிமுடியார்
திருவருளாற்
றடங்கொண்ட குளத்தளவு சமைத்ததற்பின்,
றம்பெருமான்
இடங்கொண்ட கோயில்புறம் வலங்கொண்டு,
பணிந்தெழுந்து,
நடங்கொண்டு, விடைகொண்டு, தம்பதியி
னண்ணினார். 19 |
(இ-ள்.)
வெளிப்படை. தொடர்பாக மலரும் பொன்னிறமுடைய
கொன்றை மலரைச்சூடிய அழகிய திருமுடியினையுடைய
சிவபெருமானது திருவருளினாலே, இடமகன்ற குளத்துக்குத் தக்க
அளவுப்படி தோண்டிய பின்பு, தம் பெருமான் எழுந்தருளிய
திருக்கோயிலைப் புறத்தே வலமாகச் சூழ்ந்து வந்து, பணிந்து,
எழுந்து, ஆனந்தக் கூத்தாடி, விடைபெற்றுக்கொண்டு தமது ஊரில்
சேர்ந்தனர்.
(வி-ரை.)
வடம்கொண்ட - வடம்போல மலர்கின்ற
தன்மையால் இது சரக்கொன்றை எனப்படும். வடம்
- மாலை -
மாலையாகக் கட்டப்பட்ட (இதழிமாலை) என்றுரைத்தலுமாம். பொன்
இதழி - பொன் போன்ற இதழ்களை உடைய மலர். "விரைசேர்
பொன் னிதழிதர" (மேகரா - குறி - வீழிமிழலை) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரம் காண்க.
திருஅருளாற்
சமைத்ததற்பின் - நந்தனார் குளம் அளவு
படச் சமைத்ததற்குத் திருவருள் துணைபுரிந்தது என்பதாம்.
திருவருள் துணைசெய்தாலன்றித் திருத்தொண்டினை நினைத்தலும்,
முயலுதலும், செய்தலுங் கூடாதென்பது உண்மை. "அவனருளாலே
அவன்றாள் வணங்ங்கி", "வேண்டி நீயா தருள் செய்தா யானு
மதுவே வேண்டினல்லால்" (திருவாசகம்) முதலிய திருவாக்குக்கள்
காண்க.
தடங்கொண்ட
குளத்து அளவு - பள்ளமாயிருந்த இடத்தை
இடமகன்றதொரு குளத்தின் அளவாக. முன்னரே குளமாயிருந்து
தூர்ந்துபோய் வெறும்பள்ளமாயிருந்ததனை முன்னர் இருந்த
குளத்தின் அளவுபடும்படி தோண்டி எடுத்தனர் என்றுரைப்பினுமாம்.
இவ்வாறே தில்லையில் தசதீர்த்தங்களுள் ஒன்றாகிய, மூன்றாவது
சூல தீர்த்தம் தூர்ந்து மறைந்து போயினதை வியாக்கிரபாதர்
உளக்கண்ணாற்கண்டு புதுப்பித்ததும் அதனால் அது புலிமடு என
வழங்கப்படுவதுமாகிய வரலாறும் காண்க. தண்டியடிகள் நாயனார்
திருவாரூர்க் குளத்தினது இடத்தாற் குறைபாடுடைமை கண்டு குளம்
பெருகக் கல்லி எடுத்த திருப்பணியும், அதற்குத் திருவருள்
துணைசெய்த வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலன. இடம்
கொண்ட கோயில் புறம் வலங்கொண்டு - இடம் - வலம்-
சொல்லணி. இடம் கொள்ளுதல், இடமாக வீற்றிருத்தல்.
புறம்
வலங்கொள்ளுதல் - கோயிற்புறத்தே வலமாகச் சுற்றிவருதல்.
நடங்கொண்டு விடை கொண்டு தம்பதியில் நண்ணினார் -
அத்திருத்தலத்தை அகலாததொரு வேட்கை உள்ளே எழவும்,
பிரியாவிடைகொண்டு சென்ற மனத்தின் உண்டாகிய தாமதமும்,
அதனால் புறத்தே செயலின் தாமதமும் குறிக்க அமைந்த இந்த
அடியின் ஓசையமைதி கருதத்தக்கது. இவ்வாறே "பூவார்தண்
புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்" (ஏயர்கோன் - புரா -
260) என்ற
செய்யுளடியின் ஓசையமைதியினையும் அதுபற்றி எனது
சேக்கிழார் 151 - 152 பக்கங்களினுரைத்தவையும் பார்க்க.
தம்பதியை- என்பதும் பாடம். 19
|