1060.



இத்தன்மை யீசர்மகிழ் பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்ததிருத் தொண்டுசெய்து விரவுவார் மிக்கெழுந்த
சித்தமொடுந் திருத்தில்லைத் திருமன்று சென்றிறைஞ்ச
உய்த்தபெருங் காதலுணர் வொழியாது வந்துதிப்ப,  20

     1060. (இ-ள்.) வெளிப்படை. ஈசர் மகிழ்ந்தெழுந்தருளி
யிருக்கும் தலங்கள் பலவற்றையும் இத்தன்மையிற் போய், வணங்கி,
உண்மையான திருத்தொண்டினைச்செய்து வாழ்பவர், அன்பு
மேன்மேல் எழுந்த சித்தத்துடனே, திருத்தில்லைத்
திருவம்பலத்தினைச்சென்று வணங்குவதற்கு உய்த்த பெருத்த
ஆசையுடைய உணர்ச்சியானது நீங்காமல் வந்து உதிக்க, 20
    

     1060. (வி-ரை.) பதிபலவும் இத்தன்மை இறைஞ்சி என்க.
பதி பல - "அருகுளவாஞ் சிவாலயங்கள்" என்றபடி அணிமையில்
உள்ள திருநின்றியூர், திருநீடுர், திருப்புள்ளிருக்குவேளூர் முதலாயின.
இத்தன்மையில்
இறைஞ்சுதலாவது 1053, 1054, 1055-ல் பொதுவாக
உரைத்தபடியும், சிறப்பாகத் திருப்புன்கூரில் இறைஞ்சியபடியுமாம்.

     மெய்த்த - உண்மையில் நின்ற. சிவனே ஆண்டவன் என்றும், உயிர் அடிமையே என்றும் கரவில்லாது உண்மையில் உணர்ந்த.
உண்மைப்பொருளை அடையச்செய்த என்றலுமாம். "உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாள ரறிவு தன்னை" என்ற
திருச்செங்காட்டங்குடித் திருத்தாண்டகம் காண்க.

     மிக்கெழுந்த சித்தம் - இவ்வாறு பல பதிகளிலும் சென்று
தொண்டு செய்தலில் மிகவும் எழுந்ததாகிய சித்தம். சித்தம்-
அந்தக்கரணங்களுள் சிந்திக்கும் தொழில் செய்வது.

     திருமன்று - திருவம்பலம் - திருச்சிற்றம்பலம்-
பொன்னம்பலம்.

     உய்த்த பெரும் காதல் - மனத்தாற் கொண்டு செலுத்திய
பெரிய ஆசை. உய்த்தல் - செலுத்துதல். பெருங்காதல் - பேராசை
என்றலுமாம். "எமக்கிதுவோ பேராசை? யென்றுந் தவிரா,
தெமக்கொருநாள் காட்டுதியோ வெந்தாய்! - அமைக்கவே,
போந்தெரிபாய்ந் தன்னபுரி புன்சடையாய்! பொங்கிரவில்,
ஏந்தெரிபாய்ந் தாடுமிடம்" என்ற அற்புதத் திருவந்தாதி (70) யின் கருத்தினையும் காண்க.

     காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப - ஆசையோடு
கூடிய உணர்ச்சி உள்ளிருந்து நீங்காது வந்து தோன்ற. ஒழியாது
உதித்தல்-
தடுக்கலாகாதபடி இடைவிடாது உள்ளிருந்து கிளம்புதல்.
20