1061.



அன்றிரவு கண்டுயிலார்; புலர்ந்ததற்பி "னங்கெய்த
ஒன்றியணை தருதன்மை யுறுகுலத்தோ டிசைவில்லை"
என்"றிதுவு மெம்பெருமா னே"வலெனப்
                            போக்கொழிவார்;
நன்றுமெழுங் காதன்மிக "நாளைப்போ
                             வே"னென்பார்; 21

     1061. (இ-ள்.) வெளிப்படை. அன்றிரவில் உறங்காதவராயினர்;
விடிந்த பின்பு, "அத் திருத்தலத்தில் சேரும் தன்மை எனது
குலத்தினோடு பொருந்துவதில்லை" என்று எண்ணியவர்,
"இவ்வெண்ணமும் எமது பெருமானுடைய ஏவலே" என்று
அங்குப்போகும் முயற்சியை ஒழித்திடுவார்; அதன்பின்பு நன்மையாக
எழுகின்ற ஆசை மேன்மேல் அதிகரிக்க "நாளைப்போவேன்"
என்பார்; 21

     1061. (வி-ரை.) அன்றிரவு - தில்லைமன்று இறைஞ்சும்
காதல் உணர்வு உதித்த அன்று.

     புலர்ந்ததற்பின் - எனப் - போக்கு ஒழிவார-
தில்லைக்குப் போதல் வேண்டுமென்னும் காதல் இரவில்
தடுக்கமுடியாதபடி மனத்துள் வந்து எழுந்தது. விடிந்ததும் அதனைச்
சித்தம் சிந்தித்தது; அச்செயல் தமது குலத்தோ டிசைவில்லை என்று
புத்தி போதித்து அப்போக்கினை ஒழிக்கச்செய்தது; அவ்வாறு
ஒழிக்கச் செய்ததுவும் எம்பெருமானது ஏவல் என்றே எண்ணினார்.
"வேண்டத்தக்க தறிவோய்நீ ... வேண்டும் பரிசொன் றுண்டென்னி
லதுவு முன்றன் விருப்பன்றே", "மறப்பித்தி ... பெயர்த்துமப்போதே
நாடுவித்தி" என்பனவாதி திருவாக்குக்கள்இங்குச் சிந்திக்கத்தக்கன.
இரவில் எண்ணாது துணிந்த பல கருமங்கள், பகலில் எண்ணும்
போது துணியாது ஒழிக்கப்படுதல் உலக நிலையில் பலவாற்றானும்
காணும் அனுபவமாம்.

     இதுவும் எம்பெருமான் ஏவல் - இதுவும் - திருமன்று
சென்று இறைஞ்ச வந்த காதலும் அவன் ஏவலே; அது
குலத்தோடிசைவில்லை என்று உதித்த உணர்வும் அவன்
ஏவலேயாம். உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

     போக்கு - போதல் வேண்டுமென்ற காதலினை. ஒழிதல் -
நீங்குதல்.

     நன்றும் எழும் காதல்மிக - தில்லை இறைஞ்சுவதாகிய
நன்றாகிய மேன் மேல் எழுகின்ற ஆசை அதிகரிக்க - முதலில்
உதித்த பெருங்காதலைப் பொழுது விடிந்த பின் சித்தம் சிந்தித்து
ஒழித்தது. அதன் பின்னரும் அக்காதல் மீக்கூர்தலினால் அவ்வாறு
போக்கு ஒழித்த சித்தத்தை மாற்றி "நாளைப்போவேன்" என்று
மனத்தினைத் துணியச்செய்தது. மனம் - சித்தம் என்ற
உட்கரணங்களின் முறையே எழும் தொழிற்பாடுகளின் தீவிரம்
உணர்த்தப்பட்டது. நன்றும் எழும் - சித்தத
தின் சிந்தனையை
அடக்க நந்தனார் துணிவு கொண்டதன் காரணமாவது
தடுக்கலாகாத அக்காதல் நன்மையின் எழுந்தது என்ற உணர்ச்சியே
எனக் குறித்தபடியாம்.

     "நாளைப்போவேன்" என்பார் - இது சித்தத்தின் செயலைக் காதல் மிகுதிப் பாட்டினால் மீதூர்ந்து தாழ்த்தியபோது நந்தனாரின்
துணிவு.

     காதலினால் - என்பதும் பாடம். 21