1062.
|
"நாளைப்போ
வே"னென்று நாள்கள்செலத் தரியாது,
பூளைப்பூ வாம்பிறவிப் பிணிப்பொழியப்
போவாராய்ப்,
பாளைப்பூங் கமுகுடுத்த பழம்பதியி னின்றும்போய்,
வாளைப்போத் தெழும்பழனஞ் சூழ்தில்லை
மருங்கணைவார்; 22 |
1062. (இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு "நாளைப்போவேன்"
என்று பல நாள்களும் கழிய, மனம் தரியாது, பூளையின் பூப்போன்ற
பிறவியாகிய கட்டு நீங்கப், போவதற்குத் துணிந்தாராகிப்,
பாளைகளிற் பூக்கள் நிறைந்த கமுகுகள் சூழ்ந்த அந்தப்
பழம்பதியினின்றும் போய்,ஆண் வாளை மீன்கள் எழுந்து பாய்வதற்
கிடமாகிய வயல்கள் சூழ்ந்த திருத்தில்லையின் பக்கத்தில்
அணைவாராகி, 22
1062.
(வி-ரை.) நாள்கள்
செலத் தரியாது- மேற்சொல்லியவாறு
தில்லையிறைஞ்சும் துணிவும், குலத்தோடிசைவில்லை என்று அதன்
ஒழிவும், பின்னரும் துணிவும் ஆக இவ்வாறு நந்தனாரது மனத்தே
எழுந்த நிலைகள் பல நாள்கள் நிகழ்ந்தன என்பதனை உய்த்துணர
வைத்தார்.
தரியாது
- நற்கருமஞ் செய்தலில் காலந் தாழ்த்தால்
வருந்துவது பெரியோரது இயல்பு அதன்காரணம் பிறவியின்
அநித்தமாந் தன்மையேயாம் என்று குறிக்கப் பூளைப்பூவாம்
பிறவி என மேற்கூறுவது காண்க.
பூளைப்பூ
ஆம் பிறவி - பூளைப்பூப் போன்ற நொய்தாம்
தன்மையுடைத்தாகும் பிறவி. பூளை - நொய்தாகிய
பூவுடைய
செடிவகை. அற்பமாகக் கழிவதால் பிறவிக்குப் பூளைப்பூவை
உவமித்தார். "மாருதமறைந்த பூளையாமென."
பிணிப்பு
- கட்டு. விரிவுடைய உயிரைக் குறுகக் கட்டுவதனால்
- பிணிப்பதனால் - பிறவிப்பிணிப்பு என்றார்.
பிணி - நோய் -
என்ற சொல்லும் இப்பொருள் கொண்டது.
பிறவிப்பிணிப்பு
ஒழியப் போவாராய் - "தில்லையைக்
காண முத்தி" என்னு முண்மைபற்றி இவ்வாறு கூறினார்.
"பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டுவலங் கொண்டு
(திருநா - புரா - 179) என்றதும், பிறவும் காண்க.
போவாராய் -
மருங்கணைவார் - பணிந்தெழுந்து - கண்டு -
நினைத்தே - அணைந்திலர் - நின்றார் - என மேல்வரும்
பாட்டுடன் முடிக்க.
பூம்பாளைக்
கமுகு என்க. உடுத்தல் - சூழ்ந்திருத்தல்.
பழம்பதி
- ஆதனூர். பழைமையாகத் தாம் வழிவழி
வாழ்ந்த ஊர்.
வாளைப்போத்து
எழும் பழனம் - வாளைமீன்கள்
துள்ளிமேல் எழுந்து குதிக்குமியல்புடையன. "வாளை செருச்செய",
(ஆளுடையபிள்ளையார் தேவாரம் - குறிஞ்சி - இடைச்சுரம் - 2),
"பகுவாய் வாளைகள் போர்த்தொழில் புரியும் பொருகாவிரி"
(பட்டினத்தடிகள் - திருவிடைமும் - கோ - 7) முதலிய
திருவாக்குக்கள் காண்க. போத்து - ஆண். "பாளையுடைக்கமுகு"
என்றும்,"வாளையுடைப்புனல் வாழ்வயற்றில்லை" என்றும் அப்பர்
சுவாமிகள் அருளிய இத்தலத்துத் திருவிருத்தத்தின் சொல்லும்
பொருளும் எடுத்தாளப்பட்டு மிளிர்வன காண்க.
மருங்கணைந்தார் - என்பதும் பாடம். 22
|