1063.
|
செல்கின்ற
போழ்தந்தத் திருவெல்லை பணிந்தெழுந்து, பல்குஞ்செந் தீவளர்த்த பயில்வேள்வி
யெழும்புகையும், மல்குபெருங் கிடையோது மடங்கணெருங் கினவுங், கண்
டல்குந்தங் குலநினைந்தே யஞ்சியணைந்
திலர்நின்றார். 23 |
1063. (இ-ள்.)
வெளிப்படை. செல்கின்றபோது, அதன்
திருவெல்லையினைப் பணிந்து, எழுந்து பெருகும் செந்தீயினை
வளர்க்கும் பயில்கின்ற வேள்விகளில் எழுகின்ற புகையினையும்,
பொருந்திய பெருங்கிடைகள் மறைகளை ஓதுகின்ற மடங்கள்
அணியனவாதலையும் கண்டு, கீழாகிய தமது குலத்தினை
நினைந்தே, பயந்து, மேற்சென்று அணையாது நின்றனர். 23
1063. (வி-ரை.)
அந்தத் திருவெல்லை - மேற்பாட்டிற்
கூறிய தில்லையாகிய பதியின் திருஎல்லை என அந்த
என்பது
முன்னறி சுட்டு. எல்லை பணிந்தாற் பிறவி நீங்கும் என்று உண்மை
நூல்களாற் றுணியப்பட்ட அந்த எனப் பண்டறிசுட்டு
என்றலுமாம்.
பயில்வேள்வி
- கிடைஓதும் மடங்கள் - பொதுவேள்விச்
சாலைகளும் மறைபயில் இடங்களுமாம். இவை நகர அமைப்பில்
நகர்ப்புறத்தில் அமைவனவாக விதித்தனர் நம் முன்னோர்.சுண்டீசர்
புராணம் 3, 4 திருப்பாட்டுக்களும்,"பெரும்பெயர்ச்சாலை" (77),
"வேதமுங் கிடையு மெங்கும், யாகமுஞ் சடங்கு மெங்கும்" (81) என்ற
விடங்களில் உரைத்தனவும், பிறவும் பார்க்க.
தில்லையின்
மருங்கணைய வருகின்ற நந்தனார்
திருவெல்லையில் வந்தார். அதனைப் பணிந்தார்; எழுந்தார்; கடந்து
மேற்செல்ல எண்ணினார். அவர் முன்பு அடுத்து
வேள்விப்புகையும்
கிடை ஓது மடங்களும் கட்புலப்பட்டன. அவற்றைக் கண்டதும்
தமது இழிகுலத்தை எண்ணி அவற்றைத் தாம் அணுகச்
செல்லலாகாது என்று அஞ்சினார். ஆதலின் மேற்செல்லாது
அங்குநின்றார். மேல்வருமாறு எண்ணுவாராயினார் - என்பதாம்.
எல்லை
பணிந்து - தில்லைத் திருஎல்லையில் வணங்கி
உட்புகும் விதி குறிக்கப்பட்டது. "தில்லை மல்லலம் பதியினெல்லை
வணங்கி" (238) என்றவிடத்துரைத்தவை பார்க்க.
பல்கும்
செந்தீ வளர்த்த பயில்வேள்வி - பல்குதல் -
மிகுதல். பல்கு - பயில் என்றதனால் இவை
மறையோர் பலரும்
சேர்ந்து இயற்றும் வேள்விச் சாலைகள் என்பது பெறப்பட்டது.
இவை வேறு. மறையவர் தத்தம் மனைகளில் நாடோறும் வளர்க்கும்
முத்தீ என்பவை வேறு. அவற்றை மேல்வரும் பாட்டில் "மாளிகைகள்
தொறுங்குலவும் வேதிகைகள், ஒன்றிய மூவாயிரமங் குளவென்
பாராகுதிகள்" என்று வேறு பிரித்துக் கூறியது காண்க.
திருநீலநக்கநாயனார் புராண வரலாறும், பிறவும் இங்கு நினைவுகூர்க.
மல்கு
பெரும் கிடை - கிடை - மாணவர் தொகுதி -
கூட்டம். கிடை - கிட்டுதல் - சேர்தல் - கூடுதல்; கிடை
- பகுதி.
கிட என்றது பகுதியாகப் பிறந்த பெயராகக்
கொண்டு, குறித்த
நேரங்களின் முன்னரே வந்து, குறித்த காலஅளவு வரை தங்கிக்
கிடத்தலால் கிடை எனப்பட்டது என்றலுமாம்; இப்பொருட்டுக் கிட
என்ற பகுதியீற்றகரம் கெட்டு, ஐ என்ற தொழிற்பெயர் விகுதிபெற்று
நின்றதென்க. இவ்வாறன்றிக், கிடை - வேதம்பயில் இடம்
என்றுரைப்பாருமுளர். ஓதுமடங்கள் எனப் பின்னர்
வருதலால்
அது பொருந்தாதென்க. மல்கு - பெரும்- என்ற
இரண்டு
அடைமொழிகள் வேதம்பயில் மறைச்சிறார்களின் கூட்ட நிறைவும்
செறிவும் குறிப்பனவாம். "அருமறை நான்கி னோடா றங்கமும்
பயின்று வல்லார்" (354) என்றபடி மறைநூல் வல்ல தில்லை
வாழந்தணர்கள் மூவாயிரவர்களின் சிறாரும் பிறரும் உள்ள
நகராதலின் சிறாரின் நிறைவு இவ்வாறு குறிக்கப்பட்டது.
அல்கும்
... நின்றார் - அல்குதல் - குறைதல்.குறைவுடைய
தமது குலச் சார்பினால், வேள் விச்சாலைகள் வேதம் பயிலிடங்கள்
இவற்றி னணிமையிற் செல்லலாகாது என்றுவரும் விதிவழக்கம் பற்றி
அணைந்திலராய் நின்றனர். இன்ன மரபினர்க்கு இன்ன தொழில்கள்
உரியன என்பதும், ஒரு மரபினர் பிற மரபினரோடு செல்லுதல்
உறைதல் முதலியவை நிகழுங்காலங்களில் இன்னவாறு ஒழுகுதல்
வேண்டுமென்பதும், யாவர்யாவர் யாண்டியாண்டு உறைதலும்
செல்லுதலும் உரியர் என்பதும் முதலியன ஆகமங்களானும்
பிறநூல்களானும் விதிக்கப்பட்டு, அவ்வழி மக்கள் ஒழுகி
வந்தனராதலின், அவ்விதி மரபு ஒழுக்கத்தில் நின்றே அறம் புரிந்த
நந்தனார் இவ்வாறு சிந்தித்தனர் என்க. "வருபிறப்பின் வழிவந்த
அறம்புரி கொள்கைய ராயே" (1052), "இன்னறரும் இழிபிறவி" (1067)
என்றவை காண்க. இந்த நிலை வேறு; சாதி குலம் மரபு
முதலியவற்றை மறந்து நின்ற கண்ணப்ப நாயனார் போன்றார் நிலை
வேறு என்பதனை உய்த்துணர்ந்து கொள்க.
அணைந்திலர்
- அணைந்திலராகி. முற்றெச்சம். வினை
முற்றாகக் கொண்டுரைப் பினுமமையும். 23
|