1064
|
நின்றவரங்
கெய்தரிய பெருமையினை நினைப்பார்
"முன்
சென்றிவையுங் கடந்தூர்சூ ழெயிற்றிருவா
யிலைப்புக்காற்
குன்றனைய மாளிகைக டொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரமங் குளவென்பா ராகுதிகள்;" 24
|
1064. (இ-ள்.)
வெளிப்படை. அவ்வாறு நின்றவராகிய
நந்தனார், அங்குத்தாம் சென்று சேர்வதற்கரியதாகிய பெருமையினை
நினைப்பாராகி, "இதற்கு மேல், முன் சென்று, இவற்றையுங்கடந்து
ஊரைச்சுற்றிச் சூழ்ந்த திருமதிலின்றிருவாயிலிற் புகுந்தால் அங்கு
மலைபோன்ற மாளிகைகள் தோறும் குலவிய வேதிகைகளுடன்
பொருந்திய மூவாயிரம் ஆகுதிகள் உள்ளன என்று சொல்வார்கள்;"
24
1064. (வி-ரை.)
அங்கு எய்தரிய பெருமை - என நந்தனார்
எண்ணிய எண்ணங்களாவன"இவ்வேள்விச்சாலைகளையும் வேதம்
பயிலும் மடங்களையும் அணைந்து கடந்து செல்லுதல் அரிது;
அவ்வாறு மேற்சென்றாலும் ஊர்சூழ் மதிற்றிருவாயிலினுட் புகுவதும்
என் இழிகுலத்துக்கு இசையாது; அவ்வாறு புகுந்தால் அங்கு
மாடங்கள்தோறும் வேதிகைகளுடன் மூவாயிரம் ஆகுதிகள் உள்ளன
என்பார்; இத்தன்மையில் நான் சென்று சேர்தல் அரிது" என்பனவாம்.
எய்தரிய பெருமை - என்றதனால் அதன் பெருமையினையும்
அதனைச் சேர்தற்கரிய தமது சிறுமையினையும் குறித்தபடி.
முன்சென்று
நின்றவர், அவ்வாறு நிற்காமல் மேலே போய்.
இவையும் - முன்பு கண்ட வேள்விச்சாலைகள் வேதம்பயில்
மடங்கள் ஆகிய இவற்றையும். உம்மை உயர்வு சிறப்பு. பின்னும்
மூவாயிரம் ஆகுதிகள் உள எனப் பின்வருவதனைத் தழுவிய
எதிரதுதழுவிய எச்சவும்மையாக வுரைப்பினுமமையும்.
ஊர்சூழ்
எயில் - நந்தனார் எண்ணமிட்டு நின்ற
எல்லையைக் கடந்து மேற்சென்றால் சில நாழிகையளவில் காணும்
நகர்ப்புறத்துத் திருமதில். இது ஊரினைச்சுற்றிச் சூழ்ந்திருப்பது.
இதில் நேர்திசை நான்கிலும் விளங்குவன நான்கு திருவாயில்கள்.
இங்கு எயிற்றிருவாயில் என்றது தென்புறத்துத்
திருவாயிலை.
புக்கால்
- புகுதல் இசையாது; ஒருகால் அருமையாகக்
கடந்து புகுதப்பெற்றாலும் என்று புகுதலின் அருமை தோன்றக்
கூறியபடியாம். இப்பாட்டு, மேல்வரும் பாட்டுடன் கூடிப் "புக்கால்
உள என்பார்; இத்தன்மையாதலின் எனக்கு எய்தல் அரிது" என
நந்தனார் எண்ணமிட்டதனை ஒரு சேரத் தொடர்ந்து கூறுதலால்
புக்கார் என்ற பாடம் தவறு என்க. புகுதல்
பின்னரே நிகழ்வதாம்.
1074 பார்க்க.
அங்கு
மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய ஆகுதிகள் மூவாயிரம் உள என்பார் என்க.
வேதிகைகள் ஒன்றிய ஆகுதிகள் என்றதனால் நித்தியாக்கினியாக
மறையோரின் மனைகள்தோறும் வளர்க்கப்படும் முத்தீயினுக்கும்
உரிய வேதிகையும் குண்டமும் அமைவன என்று காட்டியபடியாம்.
வேதிகை- வேள்விக் குண்டத்தின் முன்னர்க்
குடம் முதலியன
வைத்துப் பூசிப்பதற்காக இடும் சிறுதிண்ணை. "வேதியின் மங்கல
ஆகுதி" (1005), "ஆங்கு வேதியிலறாதசெந் தீவலஞ் சுழிவுற்று"
(திருநீலநக்கர் புரா - 31) முதலியன பார்க்க. ஆகுதியும் வேதிகையும்
ஒன்றினொன்று பிரிக்கப்படாது பிணைந்துள்ளன என்பார் ஒன்றிய
என்றார்.
மூவாயிரம்
- தில்லை வாழந்தணர் மூவாயிரவரும் தமது
மாளிகை ஒவ்வொன்றிலும் தனித்தனி தீவளர்ப்பாராதலின் ஆகுதிகள்
மூவாயிரம் என்றார். "கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார்" (குறிஞ்சி - கோயில் 1) என்று ஆளுடைய பிள்ளையார்,
இத்தன்மையைத் தேற்றம்பட முதற்கண்ணே வைத்து ஓதியது காண்க.
"வருமுறை யெரிமூன் றோம்பி" (354) என்றதும், பிறவும் காண்க. 24
|