1065. (வி-ரை.)
இப்பரிசு முன்பாட்டிற் கண்டபடி எண்ணிய
இந்தத் தன்மை. ஆகுதிகள்உள என்பார் என்று இந்த என
அண்மைச்சுட்டு, அவர் மனத்துள்ளே எழுந்த கருத்தினையும் கால
அணிமையினையும் குறித்தது.
இருக்க
அரிது - இருத்தலால். காரணப்பொருளில்வந்த
வினையெச்சம். எய்தல் எனக்கு அரிது என்க.
அரிது -
"மனக்கவலை மாற்றலரிது" என்றாற்போல.
மதிற்புறம்-
புறமதிலைக் குறித்தது. இது "ஊர்சூழ் எயில்"
(1064) என்றதின் புறத்தே யிருப்பது.
ஆராத.......செல்கின்றார்
- நந்தனாரின் மனநிகழ்ச்சியும்
உடல் நிகழ்ச்சியும் கூறியபடி. தமது ஊரினின்றும் "மிக்கெழுந்த
சித்தமொடும் உய்த்தபெருங் காதல் ஒழியாது வந்துதிப்ப" (1060)
அதனால் உந்தப்பட்டுப் போந்து திருவெல்லையினை அடைந்தார்.
புறப்படும்போது மனம் எழுவதும் தவிர்வதுமாகப் பலநாள்
மனப்பூசலிட்டு ஒருவாறு காதல் மீக்கூர்ந்து உந்திவரத்
திருஎல்லையினைச் சேர்ந்த அவர், வேள்விச் சாலையும் வேத
மடங்களும் ஊர்சூழ் மதிலும், வாயிலும், அதனுள் (காணாவிடினும்
கேட்டறிந்த) வேதிகைகளும் ஆகுதிகளும், ஆகிய இவையெல்லாம்
அங்கு எய்தரிய பெருமையினை வற்புறுத்தி அவரது மேற்செலவைத்
தடைபடுத்தின. அவ்வாறு தடைபட்டதனால் ஆராத பெருங்காதல்
மேலும் ஒப்பில்லாதபடி வளர்ந்தோங்கிற்று; உள்ள முருகிற்று;
அதனால் மதிலின் புறத்தே பலமுறையும் வலங்கொண்டு
செல்வாராய் நிகழ்ந்தனர் என இவ்வாறு கண்டுகொள்க.
செல்கின்றார்
- பலமுறையும் வலங்கொண்டு
நிகழ்வாராயினார். அச்செயலினை ஓயாது செய்துகொண்டிருக்கிறார்
என்று குறிக்க நிகழ்காலத்தாற் கூறினார்.
உள்
உருகி - மனம் பதைத்து உருகி. பெருங்காதல்
வளர்ந்தோங்க என்றதனால் முன்னமே "மெய்ப்பரிவு சிவன்கழற்கே
விளைத்த வுணர்"வில் (1051) பெருங்காதலாய் எழுந்த ஆசை
இன்னபடித்தென்று சொல்லமுடியாத அளவிலே வளர்ந்து மேலும்
ஓங்கிற்று. ஆதலின் உள்ளே போகவும் முடியாமல், விட்டு நீங்கவும்
முடியாமல், தேனடைத்த பாண்டத்தினைச் சுற்றும் எறும்புபோலச்
சுற்றிச்சுற்றி வருவாராயினர் என்பதாம். தாய்ப்பசுவினைஒரு வீட்டின்
உள்ளே வைத்து அடைத்துக், கன்றினை வெளியே நிறுத்தினாற்
கன்று அவ்வீட்டினைச் சுற்றிச்சுற்றிவரும் இயல்புபோல என்க.
காதல் ஓங்க
- உள் உருகிற்று; கைதொழுதது; கால்
வலங்கொண்டது - இவ்வாறு செல்கின்றார் என்க. இவையே
ஆராத மனக்காதலுடையோர் செயல்களாம். 25