1066.



இவ்வண்ண மிரவுபகல் வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ண நினைந்தழிந்த வடித்தொண்ட
                              ரயர்வெய்தி,
"மைவண்ணத் திருமிடற்றார் மன்றினடங் கும்பிடுவ
தெவ்வண்ண" மெனநினைந்தே யேசறவி
                       னொடுந்துயில்வார், 26

     1066. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு இரவும் பகலும்
வலஞ்செய்து, அங்குச் சென்று சேர்தற்கரியதாகிய அத்தன்மையை
நினைந்து, மனம் அழிந்த அடித்தொண்டர் அயர்ந்து, "கருமையாகிய
திருமிடற்றினையுடைய சிவபெருமானது திருவம்பலத் திருநடனத்தைக்
கும்பிடுவது எப்படி?" என்று நினைந்தே துக்கத்தோடும் உறங்குவாராகி, 26

     1066. (வி-ரை.) இவ்வண்ணம் - மேற்கூறியபடி. இரவு
பகல்
- உம்மைத்தொகை. இரவும் பகலுமாக நாள் முழுமையும்.
அங்கு......அழிந்த - அங்குச்சென்று சேர்தற்கரிதாக்கித் தடைசெய்து 
நின்ற இழிபிறவியின் தன்மையினையே எண்ணியெண்ணி மனம்
அழிவு அடைந்த.

     அவ்வண்ணம் - அகரச்சுட்டு மேல் மூன்று பாட்டுக்களாலும்
கூறிய அந்த என முன்னறிசுட்டு. அழிதல்- மனம் மிக வருந்தி
நைந்திடுதல்.

     அடித்தொண்டர் - திருவடிப்பற்றுவிடாத திருத்தொண்டார்.
"அடித்தொண்டின் நெறி" (1052) என்பது காண்க.

     மைவண்ணத் திருமிடறு - திருநீலகண்டம். ஏசறவு -
வருத்தம். "திருவேசறவு" என்ற திருவாசகப்பகுதி காண்க.

     துயில்வார் - துயில்பவராகி - முற்றெச்சம். துயில்வார்
என்ற வரும் பாட்டடியுடன் முடிக்க. 26