1067.

"இன்னறரு மிழிபிறவி யிதுதடை" யென் றேதுயில்வார்;
அந்நிலைமை யம்பலத்து ளாடுவா ரறிந்தருளி, மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண் முறுவலொடு
                           மருள்செய்வார்,  27

     1067. (இ-ள்.) வெளிப்படை. "துன்பந்தரும் இழிந்த
இப்பிறவியே அதற்குத் தடையாகவுள்ளது" என்றே உட்கொண்டு
துயில்வாராயினர்; அந்த நிலைமையினைத் திருவம்பலத்தினுள்
ஆடுகின்றவராகிய அம்பலவாணர் அறிந்தருளி, நிலைபெற்ற அந்தத்
திருத்தொண்டருடைய வருத்தங்கள் எல்லாவற்றையும் தீர்ப்பதற்காக
அவர் முன்பு கனவினிடத்து அணைந்து, புன்முறுவலுடன் அருளிச்
செய்வாராகி, 27

     1067. (வி-ரை.) இன்னல் தரும் இழி பிறவி -பெருமானது
மன்றினடங்கும்பிடத் தடையாய் நிற்பதனால் இன்னல் தரும்
என்றும்,இழிவினால் தடையாயிற்று என்பார் இழி பிறவி என்றும்
கூறினார்.

     இது தடை என்றே - மன்றினடம் கும்பிடுவது எவ்வண்ணம்? என்று தம்முள்வினாவித் துயிலப் புகுந்தார், தாமே அவ்வினாவுக்கு
இது தடை என்று விடையும் கண்டு, துயில்வாராயினர் என்க.

     அந்நிலைமை- கும்பிடுவதன் மிக்க ஆர்வமும்,இழிபிறவியே
தடை என்ற உணர்வும், அதனாற் றடையுண்டு புறம்பே வீழ்ந்து
கிடந்ததும், ஆகியநிலை.

     அறிந்தருளித் - தீர்ப்பதற்கு - அணைந்து - அருள்செய்வார்,
-என்ன மொழிந்து, - அப்பரிசே யருளி -மேவினார் - என்று
மேல்வரும் பாட்டுடன் தொடர்ந்து முடித்துக் கொள்க.

     மன்னு திருத்தொண்டர் - தமது திருவடியில் என்றும்
நிலைத்த திருத்தொண்டினையுடையவர்.

     வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு- மேற்கூறிய அவை
எல்லாம்.இழி பிறவியே தடை என்று அவர் எண்ணி யர்ந்த
படியினால் அவ்வெண்ணம் நீங்கினாலன்றி அவ்வருத்தங்கள்
போயின என்று அவர் துணியாராதலின், அதனைப் போக்கும் பரிசு
இறைவன் அருளிச் செய்வாராயினர் என்க.

     வேதியர்க்கு அவரது திருமேனி நெருப்பிலும் வேகாதது
என்று காட்டும் வழி அன்பின் உயர்வையும் சாதியின் இழிவையும்
புலப்படுத்தவும் ஆண்டவன் திருவுள்ளம் பற்றினான் என்று இங்கு
விசேடவுரை காண்பாருமுண்டு. திருநடங்கும்பிடப் பெறாது
மனமழிந்து துயின்ற திருத்தொண்டர் வருத்தந்தீர்ப்பதுவே இங்கு
இறைவர் திருவுள்ளமன்றி, வேதியரைத் தெருட்டுதல் கருத்தன்று
என்க. "அவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு" என்று ஆசிரியர்
காட்டுதலும் காண்க. "இப்பிறவி போய் நீங்க" என்றும், "எரியின்கண்
இம்மாயப் பொய்தகையும் உருவொழித்து" (1072) என்றும்
கூறியவற்றால் நந்தனாரது முன்னைத் திருமேனி நில்லாதொழிந்து,
பின்னைப் புண்ணிய மேனியாகப் புதுப்பிக்கப்பட்டதென்பது
கருதப்படும். "இப்பிறவி போய் நீங்க" என்றதும், முனிவடிவாகி
முந்நூல் விளங்க வேணியுடன் திருமேனி கொண்டு எழுந்தனர்
என்றதும் கருதுக. இவை முதலிய காரணங்களால் இவ்விசேட
வுரைகள் பொருந்தாதன என்பதாம். இத்தகைய புத்தாராய்ச்சிகளை
இப்புராணத்தினுட் புகுத்தியிடர்ப்படுதல் வழியன்று என்க.

     புன்முறுவல் - திருவருள் செய்தற்கண் இளமூரல் அரும்ப
வருதல் இயல்பு. "நாய கன்றிரு வுள்ளத்து மகிழ்ந்தே யங்க
ணெய்திய முறுவலுந் தோன்ற" (திருக்குறிப்பு - புரா - 52),
"திருமுக முறுவல் செய்ய வொன்றிய விளையாட் டோரார்"
(ஏயர்கோன் - 351) "அருள்பொழியுந் திருமுகத்தி னணிமுறுவ
னிலவெறிப்ப" (சிறுத் - 35) என்பன வாதி பல பல விடங்களிலும்
வருவன காண்க. இத்திருப்புன்முறுவலையே தரிசித்து
ஆனந்தமடைய வேண்டுமென்று கொண்டு "சிரித்த முகங்கண்ட
கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" என்றருளினர் அப்பர்
சுவாமிகள். இவ்வாறன்றி, இல்லாத சாதியை உண்டென்றும் அது
இழிந்ததென்றும் நந்தனார் தவறாக எண்ணியது கண்டு சாதி
குலங்களெல்லாங் கடந்த நடராசர் சிரித்தனர் என்று இங்கு
விசேடவுரை காண்பாருமுண்டு. சாதிகுலம் முதலிய பாகுபாடுகள்
உள்பொருள்களே யன்றி இல்லாதவையல்ல. வினைப் பயன்கள்
அனுபவத்துக்கு வருங்கால், சாதி, ஆயுப், போகம்என மூன்றால்
வரும் என்பது "கன்மநெறி திரிவிதநற் சாதியாயுப் போகக்
கடனதென வரும்" என்னும் சிவப்பிரகாச (29)த்தான் உணர்க. அவை
இறைவன் அருளிய ஆகம முதலிய நூல்களானும் தமிழிலக்கண
வரம்பினாலும் விதிக்கப்பட்டவையே. அவ்விதிவழி மக்கள் நடந்து
படிப்படியாக விதிகடந்த மேனிலை யடைவர் என்பது சாத்திரம்.
ஆதலின் தாமே வகுத்த மரபுகளின் விதிவழி நின்று பணிசெய்த
நந்தனாரது மனநிலையினைப் பார்த்து இறைவன் இகழ்ச்சிக் குறிப்புத்
தோன்ற முறுவலிக்கக் காரணமில்லை. இத்தன்மையாயின
ஆராய்ச்சிகள் முறை பிறழ்ந்தவையாமென்க.

     முன் - துயில்பவர் முன்பு. 27