1068.




"இப்பிறவி போய்நீங்க வெரியினிடை நீமூழ்கி
முப்புரிநூன் மார்பருடன் முன்னணைவா"
                           யென்னமொழிந்,
தப்பரிசே தில்லைவா ழந்தணர்க்கு மெரியமைக்க
மெய்ப்பொருளா னாரருளி, யம்பலத்தே மேவினார். 28

     1068. (இ-ள்.) வெளிப்படை. "இப்பிறவி போய் நீங்கும்படி தீயினிடத்து நீ முழுகிப் பூணூலணிந்த மார்பினையுடைய
வேதியர்களுடனே முன் அணைவாயாக" என்று கூறியருளி,
மெய்ப்பொருளாகிய இறைவர், அவ்வாறே சேர்ந்தனர். 28
   

     1068. (வி-ரை.) இப்பிறவி - "நீ, இழிந்ததென்றும்,மன்றினடம்
கும்பிடுதற்குத் தடையாயினதென்றும் கொண்டதாகிய இந்தப் பிறவி"
என்க. "புன்னெறியா மமண்சமயத் தொடக்குண்டு போந்தவுடல்,
தன்னுடனே யுயிர்வாழத் தரியேனான்; றரிப்பதனுக், கென்னுடைய
நாயக! நின் னிலச்சினையிட் டருளென்று" (திருநா -புரா - 150)
அப்பர்சுவாமிகள் தமது உடலைத் தூய்மை செய்வதற்காகச் சூலமும்
இடபமும் பொறித்தருளும்படி வேண்டிக்கொண்ட சரிதம் இங்கு
நினைவு கூர்தற்பாலது.

     முன் அணைவாய் - முன் - முப்புரிநூல் மார்பர்களுடனே
அவர்களின்முன். தீயில் மூழ்கி எழுந்த நந்தனார் திருவம்பலத்துக்கு
வரும்போது தில்லைவா ழந்தணர்கள் தம்முடன் செல்ல அவர்களின்
முன்னே சென்றனர் என்பது பின் அறியப்படும். (1074 - 1075). முன்
- நம் முன்பு என்றலுமாம்.

     அப்பரிசே எரி அமைக்க - நந்தனாருக்கு அருளிய
அந்தப்படியே. நந்தனாருக்குக் கனவில் அறிவித்தருளிய அந்தச்
செய்தியின்படியே தில்லைவாழந்தணர்கள் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி அருளினார். "பணிகேட்ட தவமறையோர் எல்லாரும்"
என மேல் வரும் பாட்டிற் கூறுவது காண்க.

     மெய்ப்பொருள் ஆனார் - சத்தாயுள்ளவர். உண்மை
ஞானத்தின் பொருளாயுள்ளவர் என்றலுமாம்.

     "மெய்ப்பொருள்" (481) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

     அம்பலத்தே மேவினார் - கனவிற் றோன்றிய
நிலையினின்றும் நீங்கித் தமது உண்மையுருவில் மறைந்தருளினார்.
28