1069.

தம்பெருமான் பணிகேட்ட தவமறையோ ரெல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பச்ச முடனீண்டி
"யெம்பெருமா னருள்செய்த பணிசெய்வோ"
                               மென்றேத்தித்
தம்பரிவு பெருகவருந் திருத்தொண்டர்
                           பாற்சார்ந்தார்." 29

     (இ-ள்.) வெளிப்படை. தமது பெருமானது கட்டளையைக்
கேட்ட தவமறையோர்களாகிய தில்லைவா ழந்தணர்கள் யாவரும்,
அம்பலவாணரது திருவாயிலின் முன்பு அச்சத்தோடு வந்து சேர்ந்து
"எமது பெருமான் திருவருள் புரிந்த ஏவலைச் செய்வோம்" என்று
துதித்துச்சென்று, தம் அன்பு பெருக வருவாராகிய
திருத்தொண்டரிடம் சார்ந்தார்கள்.

     (வி-ரை.) தம்பெருமான் - தில்லைவாழந்தணர்களுள் தாழும்
ஒருவராயும் தலைவராயும் உள்ள நடராசர். தில்லைவாழந்தணர்
புராணம் பார்க்க.

     அம்பலவர் திருவாயின் முன்பு - அணுக்கன்
றிருவாயிலினை அடுத்துள்ள பேரம்பலத்தின் முன்பு.

     அச்சமுடன் ஈண்டி - அச்சம் - தம் பெருமானது
திருவருட்கு இலக்காகி விளங்கும் இத்தகையதொரு பெரியாரை
இதுவரையும் அறிந்துகொள்ளாது புறக்கணித்திருந்தமை பற்றி
அஞ்சினார் என்க. நெருப்பு மூட்டி, அதனுள் ஒருவரைப்
புகச்செய்தால், திருவருளின் பெருமையையும் ஆணையையும்
அறியாத அரசும் குடிகளும் என் சொல்வரோ? இஃது என்னாய்
விளையுமோ? என்றஞ்சினர் என்றலுமாம். "உலகர றியாரரென
மறைவிற் கொண்டு" காரியஞ் செய்த சிறுத்தொண்ட நாயனார்
சரிதவரலாறும், உமாபதியார் நடராசரது கைச்சீட்டுப்படி பெற்றான்
சாம்பானுக்குத் தீக்கைசெய்து முத்திகொடுத்த வரலாற்றின் விளைவும்
இங்கு நினைவு கூர்க. இதுபற்றியே அந்தணர்களும் இங்கு
எப்பரிசாயினுமாக; எம்பெருமான் அருள் செய்த பணிசெய்வோம்
என்று துணிந்து நந்தனாரிடம் சென்றனர் என்க.

     தம்பரிவு பெருகவரும்- தமது அன்பு பெருகியதனால் அங்கு
வந்து கிடந்த. பெருக - பெருகியதனால் - காரணப் பொருளில்வந்த
வினையெச்சம். பரிவுபெருகியது பற்றி 1060 -1065 பார்க்க.

     என்றேகி - என்பதுவும் பாடம். 29