1070.



"ஐயரே! யம்பலவ ரருளாலிப் பொழுதணைந்தோம்
வெய்யவழ லமைத்துமக்குத் தரவேண்டி"
                              யெனவிளம்ப,
நையுமனத் திருத்தொண்டர் "நானுய்ந்தே"
                         னெனத்தொழுதார்;
தெய்வமறை முனிவர்களுந் தீயமைத்த
                           படிமொழிந்தார். 
30

     (இ-ள்.) வெளிப்படை. "ஐயரே! அம்பலவர் வெவ்விய
அழல் உமக்கு அமைத்துத் தரும்படி அருளியபடியால் இப்பொழுது
உம்மிடம்வந்தோம்" என்று சொல்ல, நையும் மனத்தினையுடைய
திருத்தொண்டராகிய நந்தனார் "நான் உய்ந்தேன்" என்று
தொழுதனர். தெய்வமறை முனிவர்களும் அவ்வாறே தீயமைத்த
செய்தியைத் தெரிவித்தார்கள்.

     (வி-ரை.) ஐயரே! - பெருமையுடையவரே! "ஐயர்
நீரவதரித்திட விப்பதி" (திருஞான - புரா - 179) முதலியவை
பார்க்க. ஐயர் என்பது பெருமையின்றியும் இடுகுறியளவாய் வெறும்
சாதிப்பெயராய் மட்டும் வழங்குதல் பிற்கால வழக்கு.

     அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம் -
நீர் பெருமையுடையீர்! ஆனால் உமது பெருமையினை நாங்கள்
உணரவில்லை; அம்பலவர் அருளிக் காட்டினர். இப்பொழுது -
இப்பொழுதாயினும் கண்டு அணையப் பெற்றோம் என்பது குறிப்பு.
"காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே, காண்பாரார்
கண்ணுதலாய் காட்டாக் காலே" என்றபடி அவன் உணர்த்த
உணர்ந்து இப்பொழுதே யணைந்தோம். அவர் அருளவில்லையேல்
இப்பொழுதும் அணையோம் என்றது குறிப்பு.

     வெய்யதழல் - வெம்மை - விருப்பம். இறைவன் விரும்பியருளிய தழல்; அதனால் நீரும் விரும்பிய தழல். பிறர்
வெப்பமாக்கொண்டு அஞ்சி ஒதுங்கத்தக்கதும் நீர் விரும்பிப்
புகத்தக்கதுமாகிய என்றலுமாம். பிறவியாகிய வெப்பத்தைத்
தணிப்பதற்கு உதவும் வெப்பத்தையுடைய என்று ஒப்புமுறை
மருத்துவ நூற்கருத்தைக் குறிப்பால் உணர்த்துவதும் காணத்தக்கது.
துணியின் அழுக்கை மற்றும் ஒரு அழுக்காகிய உவர்மண் கொண்டு
போக்குவதுபோல நந்தனாரது திருவுள்ளத்தில் இழிபிறவியென்ற
அழுக்கினைத் தீயைக்கொண்டு போக்கிக்காட்ட இறைவர்
திருவுள்ளம் பற்றினார் போலும்.

     தழல் அமைத்துத் தரவேண்டி - இறைவன் ஆணையின்
படியே யமைத்துத் தர வந்தோம். என்பதாம். தீயிற்குளித்து வரச்
சொன்ன இதனை இறைவர் தில்லை அந்தணர்க்கு அறிவியாது
நந்தனாருக்கே அறிவித்துத் தம்மிடம் வரச் செய்திருப்பினும்
பொருந்துமே? எனின்,இப்பிறவியின் உணர்வுடனே "மன்றினடம்
கும்பிடுவதெவ்வண்ணம்?" என்று வருந்திய நந்தனாருக்கு
வேள்விச்சாலை, வேதமடம் மூவாயிரம் ஆகுதிகள்
என்றிவற்றினிடையே முன்னை இழிபிறவியின் உடல் நீங்கிப்,
புண்ணிய உடலுடன் போதுகின்றோம் என்ற உணர்வை
விளைக்கவும், அவ்வுணர்வினொடும் வருதலை உடனிருந்து
பார்த்துத் தொண்டரும் ஏனைய உலகரும் அருளின் றிறமும்
அன்பின் றிறமும் கண்டு உய்யச் செய்யவும், ஆக இருபாலும்
அறிவித்து மறையவரைத் தீயமைக்கச் செய்தனர் என்க.

     நையும் மனம் - திரு அருளின் வெளிப்பாடு கண்டு, "மிகச்
சிறிய எளியேன், மிகப்பெரிய பேறு பெற்றேன்" என்றெழுகின்ற
உணர்ச்சியினால் "இத்தனையு மெம்பரமோ வைய! ஐயோ!
எம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே" என்று எண்ணி உருகி
நைந்த மனம். நைதல் - உருத்தெரியாதபடி இளகுதல்.

     நான் உய்ந்தேன் - இழிபிறவி போய் நல்லுடம்பு பெற்றுத்
தில்லை மறையோர் சூழத் திருமன்று கும்பிடும் பேறு வாய்க்கும்
உறுதிகொண்டு உய்ந்தேன் என இறந்த காலத்தாற் கூறினார்.
இறைவன் திருவருளைக் கனவிற் கண்டபடி அதனை நிறைவேற்ற
நனவில் மறையவர் வந்தது கண்டு உய்ந்தேன் என்றார்
என்றலுமாம்.

     தீ அமைத்தபடி மொழிந்தார் - நந்தனாரின்
திருவுள்ளத்தின் இசைவுபெற்ற அந்தணர் சென்று அவ்வாறே
அமைத்த செய்தியை அறிவித்தனர். இறைவனது அருட்டிரு
உள்ளத்தையும், அந்த அருளைப்பெறப் பக்குவப்பட்ட உயிரினையும்
கண்டபோது உரிய செயல் செய்து அவ்வுயிரினைத் திருவடியிற்
கூட்டுவிக்கும் ஆசாரியன் போன்று இங்குத் தில்லை வேதியர்கள்
நின்றனர் என்ற உண்மையும் உணர்தற்பாலது. நடராசர் இவர்களுள்
ஒருவரே யாவர் என்றதும் கருதுக. 30