1071. (வி-ரை.)
தென்றிசையின்......எய்தி- மறையவர்கள்
தீயினை எவ்விடத்து அமைத்தார்கள் என்பது முன் சொல்லாது
இங்குக் கூறினார். தில்லையந்தணர் தீயமைத்தபோது இதனைக்
கூறியிருப்பின் அவ்விடத்து அவ்வந்தணர்மட்டும் காணப்படுவர்.
நந்தனாரும் அந்தணரும் தொண்டர்களும் இறைவன்றிருவருள்
வெளிப்பாடும் உடன் காணப்படும் இப்போது அவ்விடத்தினைக்
காட்டுதல் சிறப்பும் தகுதியுமாமாதலின் முன்னர்க்கூறாது வைத்துப்
பின் கூறினாரென்க. இஃது ஆசிரியர்க்கே உரிய தெய்வக் கவிச்
சிறப்பமைதிகளுள் ஒன்று.
தென்திசை
மதிற்புறத்து - திருவாயின் முன் -
நெருப்பமைத்த குழி - ஓமகுளம் என்ற பெயருடன் ஒரு
திருக்குளமாக இன்றும் வழங்கி வருகின்ற குளம் இக்குழியிருந்த
இடமென்பர். 1அவ்வளவில் தென்புறம் திருமதிலும் அதன்
திருவாயிலும் முன் காலத்திருந்தது போலும்.
பிறை
உரிஞ்சும் திருவாயில் - திருவாயிலின் உயர்ச்சி
குறித்தது.
நிறை
அருளால் - நிறை - நந்தனார் பாலும் மறையவர்
பாலும் நிறைந்த. இனி இத்திருவருள் கேட்டு உய்யும் எண்ணிறந்த உயிர்களின் மேலும்
எக்காலத்தும் நிறைவதாதலின் நிறை என்று
முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகையாற் கூறினார்.
இறையவர்தாள்
மனங்கொண்டே- இது நந்தனார் தீயினை
வலங்கொண்டபோது மனத்துட்கொண்டது. மேல் வரும்பாட்டில்
கழல் உன்னி என்றது தீயினுட்புகும்போது மனத்துட்கொண்ட நிலை.
கழல்
நினைந்து வலம் வருதலும் தீயினுட்புகுதலும்
என்னை? எனின், அருளின் வயப்பட்டு அதனுள் தம்மையே
முழுதும் ஒப்புவிக்கும் பெருஞ்செயலிற் புகும்போது,
பிறிதொன்றினையும் மனத்தில் வையாது இறைவன் கழல்களையே
சிந்தித்தல் வேண்டுமென்பதாம். "அஞ்செழுத் தோதினா ரேறினார்
தட்டில்" (544) "அஞ்செழுத் தோதிப் பாற்றடம் புனற் பொய்கையில்
மூழ்கினார் பணியால்" (திருநா - புரா - 370), "அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி முழுகினார்"
(தண்டி- புரா - 19) என்பனவும், பிறவும் பார்க்க. (அஞ்செழுத்துச்
சிவநாமமே யாம்). இங்கு நந்தனார் அஞ்செழுத்தைப் பயிலப்
பெறாமையின் அதன் குறிக்கோளாகிய நடமாடுங் கழலினை
உன்னித் தீயினை வலம் வந்து அதனுட் புகுந்தனர் என்க.
எரிசூழ
வலம் கொண்டார் - அத்தீ, இறைவனது
ஆணையால் வளர்க்கப்பட்டதாதலானும், அது தமது இழிபிறவியை
நீங்கி மன்றினடம் கும்பிடும் புண்ணிய உடல்தரும்
சிவசாதனமாகுவதென்று கொண்டனராதலானும் அதனை
வலங்கொண்டார் என்க. "தனித்துலை வலங்கொண்டு" (543)
என்றதும், இவ்வாறு வரும் பிறவும் காண்க. 31