1072.
|
கைதொழுது
நடமாடுங் கழலுன்னி யழல்புக்கார்;
எய்தியவப் பொழுதின்க ணெரியின்க ணிம்மாயப்
பொய்தகையு முருவொழித்துப் புண்ணியமா
முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி
கொண்டெழுந்தார்.
32 |
1072.
(இ-ள்.) வெளிப்படை. கைகளைக் கூப்பித்தொழுது.
ஐந்தொழிற்றிருக்கூத்தியற்றியருளும் திருப்பாதத்தை நினைந்து
தீயினுட் புகுந்தார்; சேர்ந்த அப்பொழுது தீயினிடத்து இந்த மாயா
காரியமாகிய பொய் பொருந்திய உருவினை ஒழித்துப் புண்ணிய
உருவமுடைய முனிவர் வடிவம்கொண்டு, மார்பில் வெண்புரிநூல்
விளங்கச் சடைமுடியும் கொண்டு மேலெழுந்தனர். 32
1072.
(வி-ரை.) கைதொழுது
- என்றதனால் உடம்பால்
வணக்கமும், கழல் உன்னி என்றதனால் மனத்தால் வணக்கமும்
கூறப்பட்டன. வாழ்த்துச் சொல்லுதலாகிய வாக்கின்றொழில்
நிகழ்தற்கியைபில்லை யாதலின் கூறாது விடுத்தனர். அன்றி
இனம்பற்றி உடன்கொள்ளுதலுமாம். "நான் உய்ந்தேன்" என
முன்னரே தோத்திரித்தார் என்று கொள்ளுவதுமமையும்.
அழல்புக்கார்
- "எரியினிடை நீமூழ்கி" (1068) என்று
இறைவர் ஆணையிட்டனராதலின் அவ்வாறே தீயின் மூழ்குவாராய்
அழலினுட்புகுந்தனர்.
பொழுதின்கண்
- எரியின்கண் - (மாயப் பொய்யுரு
வொழித்த) காலமும் இடமும் குறித்தபடி. கண் - ஏழனுருபு.
இம்மாயப்
பொய்தகையும் உரு ஒழித்து- பொய்
பொருந்திய மாயாகாரியமாகிய இந்த உடல். பொய்
- சாதி குலம்
பிறப்பு என்று அபிமானம் செய்தற்குரிமையும் நிலையாமையும்
கருதியது. நந்தனார் புலை உருவாய இழிபிறவி என்று கருதிய
அவ்வுடலை ஒழித்தனர் என்பதாம்.
புண்ணியம்
ஆம் முனி வடிவாய் - பொய் உடலைத்தீயில்
ஒழித்த நந்தனார் மெய் உடலாம் புண்ணிய முனி வடிவம் பெற்றுத்
தீயினின்றும் எழுந்தனர் என்க.
தீயில் உடல்விட்ட
நிலை ஒவ்வோருயிரும் எய்தியே தீர்தல்
வேண்டுமென்றும், இங்கு அஞ்ஞான உடல்போய் ஞான உடல்
வந்ததென்றும், புலை உடல் போய் மறையவர் உடல் வந்ததென்று
கொள்ளற்க என்றும் இங்குப் பலவாறு விசேட ஆராய்ச்சியுரை
காண்பாருமுண்டு. அவை பொருந்தாமை மேற்காட்டப்பட்டது.
பின்னரும் காட்டப்படும். முன்னர்ப் பிறவியினாற் றாமே தடையுண்டு
நின்ற நந்தனார், வெண்ணூலும் வேணிமுடியும் கொண்டு
எழுந்தபோது தாம் மன்றினடம் கும்பிடத் தடையாய்நின்ற
இழிபிறவிநீங்கி அதற்குத் தகுதியாகிய திருவுடல் பெற்றவராய்
எண்ணியே திருமன்றில் ஆடுகின்றகழல் வணங்க வருவாராகுவர்.
"மண்ணிலிரு வினைக்குடலாய் வானிரயத் துயர்க்குடலா,
யெண்ணிலுட லொழியமுய லிருந்தவத்தா லெழிற்றில்லைப்,
புண்ணியமன் றினிலாடும் போதுசெயா நடங்காண,
நண்ணுமுட
லிதுவன்றோ நமக்குடலாய் நயந்தவுடல்" என்ற கோயிற்புராணத்
திருவாக்கின் (பாயிரம் - 14) கருத்துப்படி நின்றது அவர்தம்
மனநிலை. இறைவர் வகுத்த ஆகமமுதலிய அறநூல் விதி வழிபாட்டு
நியதியும் முட்டுப்படாது முற்றுப் பெறுவதாயிற்று என்பதும் காண்க.
வெண்ணூல்
- முப்புரியாகிய வெள்ளிய பூணூல். வேணிமுடி
- சிரத்திற்றாங்கிய சடைமுடி. சடை - சைவத்தின்
சிறந்த
அடையாளம்.
முந்நூல்
விளங்க - என்பதும் பாடம். 32
|