1073.



செந்தீமே லெழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த வந்தணன்போற் றோன்றினா; ரந்தரதுந்துபிநாதம்
வந்தெழுந்த துயர்விசும்பில்; வானவர்கண்
                              மகிழ்ந்தாரத்துப்
பைந்துணர்மந் தாரத்தின் பனிமலர்மா
                        ரிகள்பொழிந்தார்.   33

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு செந்தீயின்மேல் வந்து
எழுகின்றபோது செம்மலரின்மேல் வந்து எழுந்த அந்தணன்
போலத் தோன்றினார்; அப்பொழுது பெரிய ஆகாயத்தில் வான
துந்துபி முழக்கம் எழுந்தது; தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்துப்
புதிய இதழ்களை உடைய மந்தாரத்தின் புதுமலர்மழைபொழிந்தனர்.

     (வி-ரை.) செந்தீ - செம்மலருக்கும், தீயின் எழுந்த
நந்தனார்
-
செம்மலர்மேல் எழுந்த அந்தணனுக்கும் உவமை.
செம்மலர் - திருமாலின் செந்தாமரை போன்ற உந்தித் தாமரை.
வந்தெழுந்த அந்தணன்
- பிரமதேவன். படைப்புக் காலத்தில்
மாலின் உந்தியினிடத்திருந்து பிரமன் தோன்றுவான் என்பது நூன்
முறை. முன்னை இழிபிறவியின் பொய்தகையும் (மாய)
உருவொழித்துச்,சிவபிரான் அருட் சிருட்டியிற்பட்டு, முனிவடிவாய்
வருதலின் சிருட்டிக் காலத்தில் உலகம் படைத்தற்பொருட்டு
உண்டாக்கப்பட்டு வரும் பிரமனைப் போன்று நந்தனார்
விளங்கினார் என்றபடி. மெய்யும் வினையும் பற்றி வந்த உவமம்.

     எழும்பொழுது - என்றதனால் தீயின்மேல் எழுகின்ற
அப்போது. அந்த அளவில்.

     தோன்றினார் - எழும்பொழுது அத்தோற்றத்துடன்
விளங்கினார். பின்னர் மன்றினடம் கும்பிடச் சென்றணையும்போது
இவ்வுவமை செல்லாதென்பது குறிப்பு. பின்னர்ப் பிரமன் இவருக்கு
ஒப்பாகான் என்பது கருத்து.

     அந்தர துந்துபி நாதம்வந்து எழுந்தது - என்க. திருவருள்
வெளிப்பாட்டினால் தேவதுந்துபிகள் தாமே முழங்கின என்பதாம்.

     மந்தாரம் - தேவருலகத்துள்ள ஏழுமரங்களுள் ஒன்று.

     மாரிகள் - பல இடத்தும், பலகாலமும் என்று 
குறிக்கப்பன்மையிற் கூறினார். 33