1075.





தில்லைவா ழந்தணரு முடன்செல்லச் சென்றெய்திக்,
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத்
                           தொழுதிறைஞ்சி,
யொல்லைபோ யுட்புகுந்தா; ருலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் ரியாவர்களுங்
                              கண்டிலரால். 35

     1075. (இ-ள்.) வெளிப்படை. தில்லைவா ழந்தணர்களும்
உடன்வரச்சென்று திருநகரத்தின் உள்ளே சேர்ந்து, கொல்லை
மானை ஏந்திய கையினையுடைய சிவபெருமானது திருக்கோபுரத்தைத்
தொழுது வணங்கி விரைந்து போய் உள்ளே புகுந்தனர். உலகெலாம்
உய்யும்பொருட்டு அருட் கூத்தாடுகின்ற எல்லையினைத்
தலைப்பட்டனர். அதன்பின் அவரை யாரும் கண்டிலர். 35
     

     1075. (வி-ரை.) அந்தணரும் உடன் செல்லச்
சென்றெய்தி -
திருவருள் பணித்த வழியே செய்து தீயமைத்துக்
கொடுத்த மட்டில் நின்று வேறு செயலறியாது நின்றவர்களாகிய
அந்தணர்களும் என்க. தீ மூழ்கி முனிவராயெழுந்த நந்தனார்,
மன்றினடங் கும்பிடத்தடையென் றெண்ணியிருந்த இழிபிறவி போய்
நீங்கக்கண்டவுடன் தடையின்றி வேறொன்றினையும் எதிர்நோக்காது
நேரே செல்வாராயினர்; அதுகண்டு அந்தணர்களும் பின்
தொடர்ந்தனர் என்பதும் குறிப்பாம். அகம்படித் தொண்டுசெய்யும்
அந்தணர்களும் என்று உயர்வு சிறப்பும்மையாக்கியும், தாம்
உடனிருந்தேயும் நந்தனார் நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டு
மறைவதனைக்காண இருக்கும் அந்தணரும் என எதிரது தழுவிய
எச்சவும்மை யாக்கியும் உரைத்தலுமாம்.

     கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி - இது தெற்குக் கோபுரம்.
ஆதனூரினின்றும் வருகின்றவர் தெற்கு எல்லையினைக் கடந்து
தெற்குமதிற்புறத்துத் தங்கினார்; தென்றிருவாயிலைக் கடந்து தெற்குக்
கோபுரத்தின்வழி உள்ளே செல்கின்றார் என்பதாம். ஆளுடைய
பிள்ளையாரும் இத்திருவாயிலின் வழியே போந்தருளினர் என்பது
பின்னர் உணரப்படும்.

     கொல்லைமான் மறிக்கரத்தார் - கொல்லைமான் -
என்பது "புற்றில் வாளரவு" என்பதுபோல மானுக்குச் சாதிபற்றிய
இயற்கையடைமொழி. இறைவர் திருக்கரத்தில் இருப்பது
கொல்லையில் மேய்வது என்பதன்று. அது இருடிகளின் யாகத்தில்
எழுந்து ஏவப்பட்டது என்ற சரிதம் மாபுராணங்களுட் காண்க.

     ஒல்லைபோய் உட்புகுந்தார் - பலகாலம் தடைபட்டுச்
சிறையிட்ட நீர் கரையுடைந்தபோது வெளியேறும் வேகம்போல
நந்தனார்க்கு இழிபிறவி என்ற எண்ணத்தினாற் றடுக்கப்பட்டு
மென்மேல் எழுந்து மூண்டுநின்ற ஆர்வத்தின் தீவிரம் குறிக்க
ஒல்லைபோய் என்றார்.

     உட்புகுந்தார் - நடமாடும் எல்லையினைத் தலைப்
பட்டார் -
திருவாயிலினையும் திருக்கோபுரத்தினையும் கடந்தபின்,
திருவீதி வலமா வருதலும், திருமாளிகை, பேரம்பலம்,
முதலியவற்றைத் தொழுதலுமாகிய முறையிலே திருவணுக்கன்றிரு
வாயிலினைக் கடந்து திருச்சிற்றம்பலத்தின் திருமுன்பெய்தி நடன
சபேசனைக் காணுதல் வழிபாட்டு முறையாகும். நமது பரமாசாரிய
மூர்த்திகள் தரிசித்த முறைகளை ஆசிரியர் சேக்கிழார் பெருமான்
காட்டக் கண்டுகொள்க. அவ்வாறின்றி இந்நாயனார் கோபுரத்தைத்
தொழுது கடந்தவுடன் விரைந்து சென்று நடமாடும் எல்லையினைத்
தலைப்பட்டார்
என்பதும் இவரது தீவிரத்தைக் குறித்தது. அன்றியும்
"இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீமூழ்கி.....அணைவாய்" (1068)
என்று இறைவர் அருளியவாற்றால் இப்பிறவி நீங்கப்பெற்ற இவர்க்கு
இறைவரை அணைதல் ஒன்றே எஞ்சி நின்றதாதலின் விரைவில்
சென்று தலைப்பட்டு மறைந்தனர் என்பதுமாம். இவ்வாறே திருவருட்
சிருட்டியில் மீளத் தோற்றிய பூம்பாவையாரும் "கன்னிமாடத்து
வைத்தனர், தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்" (திருஞான -
புரா - 1117) என்றபடி விரைவிற் சிவனையடைந்த செய்தியும் இங்கு
நினைவு கூர்தற்பாலது.

     உலகுய்ய நடமாடும் எல்லை - "அலகில் கலையின்
பொருட்கெல்லை ஆடுங் கழலே" என்ற சண்டீசநாயனார் புராணங்
காண்க. எல்லை - திருவடி. எல்லாப் பொருள்களுக்கும்
முடிவிடமாயுள்ளதாதலின் திருவடி எல்லைஎனப்பட்டது.

     தலைப்பட்டார் - கூடினார் - கிடைத்தனர் - அடைந்தனர்,
தாடலைபோலத் திருவடியிற் றலைபொருந்தப்பெற்று ஒன்றாயினர்
என்ற குறிப்பும்காண்க. "தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர்
தலைமறைவே" (அப்பர் சுவாமிகள் - திருவிருத்தம்)
என்றபடி
அத்திருவடியின் கீழே தலைமறைவு கிடைக்கப்பெற்றார் என்க.
"முக்கண்ணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங்
குணர்வினால் எய்யலாமே" (திருநேரிசை) என்றபடி
எல்லையினுள்ளே தலைப்பட்டனர் என்பதாம்.

     யாவரும் கண்டிலர்- நடமாடும் எல்லையாகிய
திருச்சிற்றம்பலத்தின் திருவடியைத் தலைப்பட்டுத் திருவருள்
வியாபகத்தில் இரண்டறக் கலந்து மறைந்தனர். உடன் இருந்து,
புகுதலைக்கண்ட மற்றை யாவரும் மேற்காண முடியாதவரானார்.
"ஈறிலா அறிவா னந்தத், தேசுடன் கலந்து நின்றார் சிவனருள்
விளக்க வந்தார்" (மண்சுமந்த படலம் 114) என்ற திருவிளையாடற்
புராணத்தாலும், "மன்றதனிற் கடிதேகி மறைந்தாரங் கவர்காண"
(28), "கைகாட்டித் தம்முருவங் காட்டாமன் மறைந்தார் ... பாலுடனே
மேவியநீ ராயினார்" (29) என்ற திருவாதவூரர் புராணத்தாலும்
அறியப்படுகின்ற மணிவாசகப் பெருமானாரது சரிதவரலாறு இங்குச்
சிந்திக்கற்பாலது. 35