1078. ஏயு மாறுபல் லுயிர்களுக் கெல்லையிற் கருணைத்
தாய னாடனி யாயின தலைவரைத் தழுவ
வாயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
  1

     1078. (இ-ள்.) வெளிப்படை. பொருந்தும்படி பல
உயிர்களுக்கும் எல்லையில்லாத கருணைத் தாய்போன்ற
உமாதேவியார் தனியாகிய தமது தலைவரைத் தழுவதற்காக,
ஆராய்கின்ற நான்கு வேதங்களும் போற்ற ஆகமவழியில் நின்று,
தன்னிடத்தே அரிய தவம்புரியும்படியான தூய பெருந்தவத்தைச்
செய்துள்ளது தொண்டை நன்னாடு.

     1078. (வி-ரை.) பல்லுயிர்களுக்கும் ஏயுமாறு என்க.
எல்லா வுயிர்களுக்கும் அவ்வவற்றின், கன்மத்திற்கேற்றபடி
பொருந்த. எல்லையில்லாத கருணையேயாயினும் உயிர்தோறும்
வெவ்வேறு வகைபடச் செலுத்தப்படுதற்குக் காரணங் கூறியபடியாம்.
கருணைத் தாயனாள் - உலகில தாய்மார், மகவுக்கு நோய்
மூலமாகிய உடம்பைக்கொடுத்து ஊட்டி வளர்த்து மீண்டும் பல உடற்
சுமைகளை எடுக்க வழிசெய்கின்றார்கள். இத்தாய், நோய் நீங்கும்படி
உடலைக் கொடுத்துக், கர்மங்களை ஊட்டிப் போக்கி, மீண்டும்
உடற்சுமைவந்து பொருந்தாதபடி செய்கின்றாராதலின் இவ்வாறு
சிறப்பித்தார்.

     தனியாயின தலைவர் - தனி - ஒப்பற்றவர்.
உமையம்மையாரைப் பிரிந்ததனால் தனியாயினவர் என்றலும் இங்கு
இச்சரிதக் குறிப்பிற் பொருந்துவதாம்.

     தழுவுதல் - இங்குப், பிரிந்த தலைவர் சேர்தலைக் குறித்தது.
தழுவத் தாயனாள் தவம்புரிய மாதவம் புரிந்தது தொண்டை
நாடு
என்று முடிவு கொள்க. தன்னிடமாக என்பது வருவிக்க.

     நாடு மாதவம் செய்தது - ஆகமத்தின்வழிப் பூசனை செய்ய
வேண்டுமென்று அம்மையார் வேண்டியபோது அதற்கேற்ற தலம்
காஞ்சியே என்று இறைவரருளினர். (1130). அந்தக் காஞ்சியினைத்
தன்னிடத்தே கொள்ளத் தொண்டைநாடு புண்ணியம் பண்ணிற்று
என்க. நாடு புண்ணியம் செய்ததாவது அந்நாட்டினில் பெருஞ்
சிவதருமங்கள் பொருந்தி உயிர்களுக்கு நலம்தந்து பெருகுமாறு
செய்த தவமாம். நாடுசெய்த தவத்தைக் குறிஞ்சி முதலாக
நெய்தலீறாக வேறு வேறு கூறி, "குறிஞ்சிசெய் தவங்குறையுளதோ"
(1091), நெய்த லெய்தமுன் செய்தவந் நிறைதவஞ் சிறிதோ" (1117)
என நுணுகிக் காட்டிய திறம் காண்க.

     ஆயும் நான்மறை போற்ற நின்று - ஆய்தல் - தெளிதல்.
மறைகள் இறைவனிலக்கணத்தை ஆய்ந்து சிவனே பொருள் எனத்
தெளிந்து இதயத்துட் கொண்டன. 1034 - 1037 பார்க்க. கொண்டு
வைத்த அப்பொருளைப் பூசித்து அடையும் வழியினை உயிர்களுக்கு
நடந்துகாட்டும் பொருட்டுப் பல உயிர்களுக்கும் கருணைத்தாய்
பூசைசெய்த அதனை மறைபோற்றிற்று. நின்று - அந்த ஒழுக்கத்தின்
வழிநின்று ஒழுகி.

     பெருந்தவம் புரிய - தழுவப்புரிந்த தவமும் பூசையும் 1135
முதல் 1142 வரை திருப்பாட்டுக்களில் விரித்துரைக்கப் பெற்றன.

     தொண்டை நன் நாடு - நன்மை - இடத்துக்கேற்பதாகிய
இடைப்பிறவரல். இந்நன்மையாவது மக்கள் நல்லொழுக்கத்தில்
வழுவாது வாழ்வதேயாகும் என்பதனை மேல் வரும்பாட்டில்
உடன்பாட்டு முகத்தால் விளக்குகின்ற ஆசிரியர், பின்னர், இதுபற்றி
எதிர்மறை முகத்தால் "தீயவென்பன கனவிலு நினைவிலாச் சிந்தை"
என 1124-ல் விளக்கி வற்புறுத்துதலும் காண்க. "மெய்ம்மைநிலை
வழுவாத மேன்மைநிலை விழுக்குடிமைச், செம்மையினார்" என்றதும்
பிறவும் நினைவு கூர்க. "தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு
சான்றோ ருடைத்து" என்று பிற்காலத்து ஆசிரியர் நாடுகளை
வகைப்படுத்தி முடித்துக் காட்டியதும் உன்னுக.

     இது முதல் ஐந்து திருப்பாட்டுக்களால் நாயனாரது திருநாட்டுப்
பெருமையும், 1083 முதல் 1124 வரை நாட்டினியலும் வளமுங்
கூறுகின்றார். இவ்வாறு அத்திருநாடு முற்றிலும், நம் கருத்தினை
உடன்கொண்டு, நானிலப் பகுதிகளையும் திணைக்கலப்புப்
பகுதிகளையும் அவ்வவை யெல்லாம் சிவபுண்ணியப் பெருவாழ்
வினைத்தரும் வகையினையும் காட்டிச் செல்கின்றனர் ஆசிரியர்.
அதன்மேல் இந்நாயனாரது நகரமாகிய காஞ்சிபுரத்தின் சிறப்பும்
வளனும் 1125 முதல் 1187 வரை நகரச்சிறப்பாகக் கூறுகின்றார்.
அதன்மேல் 1188 முதல் 1205 வரை நாயனாரது சரிதங்கூறி
முடிக்கின்றார். இவ்வாறு இப்புராணத்தின் அமைப்பினை
வரையறுத்துக் கண்டுகொள்க.

     தொண்டை நாட்டினைக் கூற நேர்ந்த முதலிடம்
இதுவேயாதலின் இங்கு அதனை விரித்துக் கூறினார். சரிதத்தின்
அளவுக்குமேல் விரிந்தபடியாக நாடு நகர் வர்ணனை
கூறப்பட்டதென்றும், இஃது ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் தமது
நாட்டின்மேல் வைத்த அன்பினாலாகியது என்றும் கருதுவாரும்
உண்டு. அது ஓரளவுக்கு உண்மையே என்று தோன்றினும், புராணம்
பாடுவித்த சோழர்களது நாடாகவும் பெரிய நகராகவும்
தொண்டைநாடும் காஞ்சீபுரமும் விளங்கின என்பதனையும்,
திருத்தொண்டர்புராணத்தினும் ஏனைச்சோழ பாண்டிய நாடுகளைக்
றிய இடங்களைத் தொகுத்துநோக்கின் இங்குத் தொண்டை
நாட்டுக்குக்
கூறிய அளவு சிறியதேயாகும் என்பதனையும் நாம்
மறக்கலாகாது. அன்றியும் அன்பர் திருவேடமும் பூசையுமே முடிந்த
பொருள்களாகக் காட்டி விளக்கும் இம்மாபெருங் காவியத்தினுள்,
சிறந்த அரன்பூசையினை ஆகமவிதிப்பிடி உலகை ஆளுடையாள்
செய்து காட்டும் இடம் இதுவேயாதலின் அதனை விரித்துக் கூறுதலும்
இன்றியமையாததாயிற்று அதனை எடுத்துக் காட்டுதற்கு, யாண்டும்
நாட்டுச் சிறப்பும் வளமும் என்று சொல்லத்தக்கவை யாவும் சிவன்
சம்பந்தத்தோடு கூடிய வழியே சிறப்புடையன - அல்லுழி அல்ல -
என்பதனையும் எடுத்துக்காட்டவேண்டிய அவசியம்பற்றி நானிலப்
பகுதிகளை அச்சிறந்த பொருள்பற்றிக் காட்டவேண்டுவதும்
இன்றியமையாததாயிற்று. நானிலப் பகுதிகளைக் கூறும் வகையில்
சிறந்த காவிய நிலைபற்றித் தமிழ் இலக்கண முறையிற் பகுத்துக்
காட்டுவதும் வேண்டப்பட்டது. மேலும் நானிலப்பகுதிகளும்
நிலக் கலப்புக்களும் நிறையப்பெற்று விளங்குவது
இத்திருநாடேயாகும். இம்மாபுராணத்துள் பேசப்படும் ஏனைநாடுகள்
அவ்வகையில் ஒவ்வோர் குறைபாடுடையன. ஆதலின் இச்சரிதத்தின்
திருநாடே தமிழிலக்கிய வரம்பிற்கு எடுத்துக்காட்டாதற்
றகுதியுடையதாம். இவை முதலிய காரணங்களால், நாட்டுப்பற்று
(தேசாபிமானம்) என்று வெறும் நிலம்பற்றிய தொடர்பினால்
ஆசிரியர் இத்துணையும் கூற அமைந்தனரல்லர் என்பதனை
உய்த்துணர்ந்துகொள்க. அன்றியும் இதனால் நாடும் நகரமும்
மக்களும் எவ்வாறிருத்தல் வேண்டும் - எவ்வகையால்
மதிக்கப்படுதல்வேண்டும் - என்று எடுத்துக்காட்டிய திறமும்
சிந்திக்க.

     இதனுள் ஆகமத்திறனெல்லாம் தெரிய எடுத்துக்கூறிச்
சிவபூசையில் முயற்சியெழுவிக்கும் இப்பகுதியை, (ஐஞ்சீருடைய)
கலிநிலைத்துறையாலும். அதன்மேல் எண்குணனாகிய
அட்டமூர்த்தியினைப் பூசைசெய்தடையும் பகுதியை எண்சீர்
விருத்தத்தாலும், சரியையாதி நாற்பாத நெறியில் நின்று
பிறவிமாசுபோக்கும் சரிதத்தை நாற்சீர் விருத்தமாகிய கொச்சகக்
கலிப்பாவினாலும் யாத்த திறமும் கண்டுகொள்க. 1