1079. |
நன்மை
நீடிய நடுநிலை யொழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை யோங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின் தொன்மை மேன்மையி னிகழ்வது
பெருந்தொண்டை
நாடு.
2
|
(இ-ள்.)
வெளிப்படை. நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்தில்
விருப்பமுடைய தன்மை வாய்ந்த தலைமையுடைய பெருங்குடிகள்
தழைத்தோங்க வலிய பெரிய மதில்களையுடைய வளநகரங்கள்
பலவும் தன்னுள்ளே நிலவப்பெற்றதாய், எல்லையில்லாத
பழமையாகிய மேம்பாடுகளுடன் நிகழ்வது பெருந்தொண்டை
நாடாகும்.
(வி-ரை.)
நடுநிலை ஒழுக்கம் - தமர்பிறர் என்னாமலும்,
நன்றுதீது என்னாமலும், அறநெறியினிற் பிறழாமலும் துலைக்கோல்
போல ஒழுகுதல். "மாற்றார்க்கமரி லழிந்துள்ளோர் வந்து தம்பான்
மாநிதியம், ஆற்றும் பரிசு பேசினா லதனை நடுவு நிலைவைத்துக்,
கூற்ற மொதுங்கு மாள்வினையாற் கூலி யேற்று" (3) என்ற
முனையடுவார் புராணங் காண்க.
தலைமைசால்
பெருங்குடி - ஒழுக்கத்திற் சிறந்த
சால்புடைமையால் தலைமை பெற்ற குடிகள். இத்தன்மையாவது
வாய்மையும், பிறர்க்கு எஞ்ஞான்றும் நினைப்பினாலும் தீமை
செய்யாமையுமாம்.
வளம்பதி
பயின்றது - வளமையுடைய நகரங்கள் நிலவுதல்
நாட்டிற்குச் சிறப்புத் தருவதாம்.
தொன்மை
மேன்மை - ஆவதும் அழிவதும் ஆகிய புதிய
வளங்கள் மேன்மை தருவன அல்ல என்பது. பழங்கால முதல்
மேன்மை குறையாது வருதல் உண்மைச் சிறப்பால்மட்டு
மாகுவதொன்று என்க.
தகைமைசால்
- என்பதும் பாடம். 2
|