1081 |
ஆணை
யாமென நீறுகண் "டடிச்சேர" னென்னுஞ் சேணு லாவுசீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாணி லாவுபூண் வயவர்கண் மைத்துனக் கேண்மை பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.
4 |
(இ-ள்.)
வெளிப்படை. சிவபெருமானது திருவருளின்
வடிவமே திருநீறாகுமென்று ஈடுபட்டுத் திருநீற்றினைக் கண்டு
வணங்கும் வகையால், "அடியேன் அடிச்சேரன்" என்று, (நீறுபோன்று
வெளுத்த உவர்மண் ஊறிய உடம்புடைய வண்ணானை) வணங்கும்,
நெடுந்தூரம் பரவிய கீர்த்தி மிக்க சேரமானுடைய திருமலைநாட்டில்
வாழும் ஒளிவீசும் அணிகளை அணிந்த வெற்றிபொருந்திய வீரர்கள்,
மைத்துனர் முறை என்னும் உரிமையைப் பாராட்டுகின்ற நீடித்த
முறைமையினையுடையது பெரிய தொண்டை நாடாகும்.
(வி-ரை.)
ஆணை - சிவசத்தி. திருநீறு, சத்தி என்கின்ற
சிவனருளின் வடிவம். "பராவணமாவது நீறு" என்ற
(திருநீற்றுப்பதிகம் - 8) தேவாரமும், "நீற்றுப் பதிகம் நிகழ்த்துங்
காலை, மாற்றுப் பரையின் வரலாறாகும்" என்ற அதன் விளக்கமும்
காண்க.
ஆணை
யாமென நீறுகண்டு - நீற்றினை நீறாகக் காணாது
எவ்விடத்தும் சிவனருளாகவே கண்டார் என்பதாம்.
நீறுகண்டு
"அடிச்சோன் என்னும்" ..... சீர்ச்சேரனார்
என்ற இவ்வரலாறு கழறிற்றறிவார் நாயனார் புராணம், 17, 18, 19
திருப்பாட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. அரசராக முடிசூட்டிக்கொண்டு
யானைமீது செல்லும் கழறிற்றறிவார் நாயனார், உவர்மண் ஊறி
வெளுத்த உடம்புடன் ஒரு வண்ணான் பொதியுடன் தம்முன்
வரக்கண்டனர். அப்பொலிவு திருநீறு பூசிய தன்மையில் விளங்கவே
பட்டத்து யானையினின்றும் இறங்கி அவ்வண்ணானை வணங்கினர்.
அவன் பயந்து "அடியேன் அடி வண்ணான்" என்ன, அதனைக்
கேட்டு, அவன் வண்ணானென்றும் மேனியில் உள்ளது உவர்மண்
ஊறிய வெண்மையே என்றும் திருநீறு அன்றென்றும் தெரிந்தபின்,
சேரர்பெருமான் அவ்வேடம் திருநீற்று வாரவேடத்தினை
நினைவித்ததென்று கொண்டு அவ்வண்ணானை நோக்கி "‘அடியேன்
அடிச்சேரன்;' ..... திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர்;
வருந்தாதேகும்" என விடைகொடுத்தனுப்பினார் என்பது.
சேண்
உலாவு சீர் - நெடுந்தூரமும், நெடுங்காலமும்
சென்று நின்று பரவும் சிறப்பு.
திருமலைநாடு
- மாலைநாட்டின் சிறப்புக்குறிக்கத் திரு
என்று அடைமொழி கொடுத்து ஓதினார். திருமலையின் தலைவரது
ஏவலினால் இந்நாட்டினின்றும் வெள்ளை யானையி லேறிச்சென்று
ஆளுடைய நம்பிகள் திருமலையை அடைந்தனர். அவரைத்
தொடர்ந்து சேரமானாரும் குதிரையில் ஏறிச்சென்று திருமலையை
அடைந்தனர். அவ்வாற்றால் திருமலையின் தொடர்புடைய நாடு
என்ற குறிப்புமாம். (திருமலை - கயிலை.)
வயவர்கள்
- வயம் - வெற்றி. வயவர்
- வெற்றியுடைய
வீரர்கள். வயவர் - வணிகர் என்றலுமாம்.
சேரநாட்டு
வயவர்கள் மைத்துனக் கேண்மை பேண
நீடியமுறை - இங்குக் குறித்த சரிதமாவது : - ஒரு காலத்தில்
சேரர் நாட்டில் கலகமுண்டாக, அந்நாட்டினர் பலபக்கமும் சிதறிச்
சென்றனர். அவர்களுள் ஒரு வணிகப்பெண்தொண்டை நன்னாட்டில்
ஒரு வேளாளர் மனையில் அடைக்கலம்புக்கு அவர்களால் தமது
பெண்போல அன்புடன் வளர்க்கப்பட்டு வந்தனள்.
கலகம் தீர்ந்த
பல நாட்களின் பின்னர் அப்பெண்ணுக்
குரியவர்கள் தேடி வந்து பெண்ணை அழைத்துச்செல்ல
விரும்பியபோது வேளாளர் அப்பெண்ணைத் தாம் வளர்த்தமையால்
தமது பெண்ணேயாவாள் எனக்கொண்டு அவளுக்கு வரிசைகள்
தந்து மணஞ் செய்வித்து வழி அனுப்பினர். ஆதலின் சேரநாட்டினர்
மைத்துனர் முறைமை கொண்டாடினர். "கொத்தலர் கோதை
வியன்சேர மண்டலக் கொம்பைத் தம்பால், வைத்திருந் தாங்கவ
டன்கேளிர் நேடி வரவவர்க்கே, யுய்த்திருவோர்க்கும் வரிசையு
மாற்றி யுடனுஞ்சென்று, மைத்துனக்கேண்மை படைத்ததன்றோ
தொண்டை மண்டலமே" என்பது தொண்டைமண்டல சதகம்.
கரிகாற் சோழனுடைய
மகனுக்கும், மகன் மகனுக்கும்
சேரர்குலப் பெண்களை மணம்செய்து கொண்டதனால் அந்த
முறைபற்றிச் சேரநாட்டு வீரர்கள் கரிகாற் சோழனது நாட்டு
வீரர்களைஎதிர்த்துப் போர் புரியாமல், அவர்களுக்குச் சார்பாய்
நின்று, வேற்றரசர்களை வென்று கொடுத்து மைத்துனக்கேண்மை
கொண்டாடினர் என்றதொரு வரலாறும் உண்டு. கரிகாற் சோழன்
- காடெறிந்து காஞ்சிபுரநகரங்கண்ட அரசன். 1162 பார்க்க. 4
|