1084. |
குறவர்
பன்மணி யரித்திதை விதைப்பன குறிஞ்சி;
கறவை யானிரை மானுடன் பயில்வன கானம்;
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனம்;
சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.
7 |
(இ-ள்.)
வெளிப்படை. குறவர்கள் பல மணிகளையும் அரித்து
எடுத்துப் போக்கிக் காராமணிகளை விதைத்தற்கிடவமான குறிஞ்சி;
கறவைக் கூட்டங்கள் மான்களுடன் பயில்வதற்கிடமாவன காடுகள்;
பறவைகள் தாமரை மலரிலிருந்து கொண்டு இறால் மீன்களை
உண்ணுதற்கிடமாவன வயல்கள்; சுறா மீன்களின் முட்களையுடைய
கொம்புகளைத் தெய்வப்படிமமாக வைத்து விழாக்
கொண்டாடுதற்கிடமாவன கழியிடங்கள்.
(வி-ரை.)
குறிஞ்சி - குறிஞ்சி நிலம்.
குறவர் - குறிஞ்சிநில
மக்கள். இதை - காராமணி. இதை விளைத்தல்
அவர்களது தொழில்.
மணியரித்து இதை விளைத்தல் என்பது மணிகள் பரல்போன்று பயிர்
விளைத்தற்கிடையூறான ஆதலின் அவற்றைப் பருக்கைக்
கற்களோடொப்ப அரித்து எடுத்து எறிந்தார்கள் என்னக. பயிர்க்குக்
கேடுசெய்வதில் விலையுயர்ந்த மணிகளும் ஏனைப் பருக்கைக்
கற்களும் ஒன்று போலவே அமைவன; ஆதலின் அரித்து எறிந்தார்
எனப்பெற்றது. "நடவந்தவுழவரிது நடவொணா வகைபரலாய்த் தென்று
துன்று, கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் கரைகுவிக்குங் கழுமலமே"
(மேக - குறிஞ்சி - 8) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம்
காண்க.
கறவை
ஆனிரை - மான் - முல்லைக் கருப்பொருள்.
முல்லையின் மாக்களாகிய ஆனும் (பசு) மானும் ஒருசேரக்
கூடிவாழும் இயல்புடையன. கானம் - காடு. முல்லை நிலப்பகுதி.
தாமரையிலிருந்து
பறவை இற அருந்துவ என்க. அருந்துவ
- உண்பன. உண்பதற்கிடமாவன. பழனம் - வயல்.
மருதநிலப் பகுதி.
இற - இறால்மீன். இறா என்பது
இற என நின்றது.
கழிச்சூழல்
- கழிகள் பரவிச் சூழ்ந்த இடங்கள். கழி
-
கடல்நீர் அலைகளினால் உந்தப்பட்டு நிலப்பரப்பினுள் வந்து
தங்குமிடங்கள். அணங்கயர்தல் - விழாக்
கொண்டாடுதல்.
சுறவ
முள் அருப்பு அணங்கயர்தல் - சுறாமீனின்
முள்ளையுடைய எலும்புகளைத் தெய்வத்தின் குறியாக வைத்துத்
திருவிழாச் செய்தல் அந்நில வழக்கு.
கானம்
- முல்லை. பழனம் - வயல் மருதம். கழிச்சூழல்
- நெய்தல்.
இதை, ஆனும் -
மானும், இறவு, சுறவு, இவை முறையே
குறிஞ்சி முதலிய நானிலத் திணைக்கும் உரிய கருப்பொருள்களாம்.
7
|