1089.
|
அங்கண்
வான்மிசை யரம்பையர் கருங்குழற்
சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழன்மூழ்கிப்
போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னு
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினான் மல்கும். 12 |
(இ-ள்.)
வெளிப்படை. அழகிய இடமகன்ற விண்ணுலகத்தில்
வாழும் அரம்பையர்களது கரிய கூந்தலிலுள்ள வண்டுகள்,
ஒளிவிளங்குகின்ற அணிகளையணிந்த தனங்களையுடைய குறவர்
மாதர்களுடைய கூந்தலினுள் மூழ்கி அங்கிருந்து நீங்காதிருத்தற்கு
இடமாகிய, சிவந்த கண்களையுடைய திருமாலை விடையாகவுடைய
சிவபெருமானது திருக்காளத்தி என்னும் மேகஞ்சூழ்ந்த
திருமலையைத் தன்னுள் நிலவப்பெற்ற வாழ்வுடைமையால்
(அக்குறிஞ்சி) மிகுவதாகும்.
(வி-ரை.)
அங்கண் என்றதற்கு அந்தக் குறிஞ்சிநிலத்தில்
என்பாருமுண்டு.
அரம்பையர்
- தேவமாதர். இவர் காளத்தியில் பூசிக்கவந்து
வழிபடும் வானவரோடு உடன்வந்தவர்கள் என்க. "கடவுண்மால் வரையி னுச்சி, யதிர்தருமோசை
யைந்து மார்கலி முழக்கங் காட்ட"
(750) என்றவிடத்துத் திருக்காளத்தியிற் றேவர் பூசித்தல்
குறிப்பிக்கப்பட்டது காண்க. கண்ணப்ப நாயனார் பேறு பெற்றபோது
உடனிருந்து கண்டு "நான்முகன் முதலா வுள்ள வானவர் பூவின்மாரி
பொழிந்தனர்" (828) என்றதும் கருதுக.
கொடிச்சியர்
- குறவர் மகளிர். குறிஞ்சிநிலத்
தலைமகளிரைக் கொடிச்சியர் என்பது பொருளிலக்கணம்.
குழன்
மூழ்கி - அவ்வாசனையில் ஈடுபட்டு, அதில் மூழ்கித் தன்வசமிழந்து
என்ற குறிப்புமாம்.
(குறிஞ்சி) வாழ்வினால்
மல்கும் என்க. குறிஞ்சி என்ற
எழுவாய் வருவிக்க. தொண்டைநாட்டுக் குறிஞ்சிநிலமானது
திருக்காளத்தி என்ற திருமலையினைத் தன்னுள்ளே இருக்கப்பெற்ற
வாழ்வுடைமையினால் சிறப்புப் பெருகுவதாயிற்று
என்க. அடுத்த
இரண்டு பாட்டுக்களிலும் "குறிஞ்சி மேன்மையின் மிக்கது" (1090),
''குறஞ்சி செய் தவம்'' (1091) என்றவை காண்க. குறிஞ்சி தவஞ்
செய்து இத்தலங்களைத் தன்னுள்ளே கொண்டு மேன்மையடைந்தது
என்பது தற்குறிப்பேற்றம்.
அரம்பையர்
குழற்சுரும்பு கொடிச்சியர் குழன்மூழ்கிப்
போகா என்றது அரம்பையர் கூந்தலினும் கொடிச்சியர் கூந்தலில்
வண்டுகள் மிக்கமணம் கண்டன என்றதாம். வானரம்பையர் கூந்தல்
மந்தாரம், கற்பகம் முதலிய மலர்களினாலாகிய செயற்கை மணம்
மட்டும் கொண்டது. ஆனால் இங்குள்ள கொடிச்சியர் குறிஞ்சிநிலத்
தலைவியராகிய உத்தமசாதிப் பெண்களாதலின் அவர் கூந்தல்
இயற்கை மணமும், குறிஞ்சியின் பல செழித்த பூக்கள் சூடிய
செயற்கைமணமும் ஆக இருவகை மணமும் பொருந்தியது
என்பதாம். அன்றியும் இக்கொடிச்சியர் காளத்திநாதரின் பங்குடைய
ஞானப்பூங்கோதையம்மையாரை வழிபட்டு அவரது திருவருள்
மணம் பெற்றவர்கள். அவ்வம்மையாரது கூந்தலின் இயற்கை மணம்
பற்றிய திருவிளையாடற் புராண வரலாறுகளும், "கொங்குதேர்
வாழ்க்கை" என்ற இறைவன் பாடலும் இங்கு நினைவு கூர்தற்பாலன.
தொண்டைநாட்டுக்குன்ற
மகளிர் கூந்தல்களின் உயர்வை
வாசனையால் வண்டுகள் முதலில் அறிந்து, அரம்பையர்
கூந்தலிலிருப்பதினும் இங்குத் தங்குதலே சிறந்தது என்று கண்டு,
அவ்வரம்பையர் கூந்தலைவிட்டுக் கொடிச்சியர் கூந்தலில் மூழ்கிக்
குடிகொண்டன. அதன் பின்னர், அவ்வண்டுகள் வழி
காட்டினமையாலும் பிறவாற்றாலும் இவ்வுண்மையையறிந்த
அரம்பையரும் இமையவர்களும் தேவருலகில் வாழ்வதினும்
வேடமாதரும் வேடருமாகப் பிறந்து இங்கு வாழ்தல்
சிறப்புடைத்தென்று வேண்டி அவ்வாறே இங்கு வந்து பிறந்து
இறைவரை வணங்குகின்றார்களென்றும் (1090), அவ்வாறு
பிறக்கும் பேறு கிடைக்கப்பெறாத அரமகளிர் கொடிச்சியருடன்
கூடி இங்குச் சுனைநீராடுகின்றனர் என்றும் (1091) இக்கருத்தினைத்
தொடர்ந்து அடுத்த இரண்டு பாட்டுக்களினும் கூறுதல் காண்க.
காளத்தி
- தொண்டை நாட்டின் 19-வது திருத்தலம்.
கண்ணப்பர் புராணம் - தலவிசேடம் பார்க்க.
கருங்குழல்
- அமுதமுண்டு நெடுநாள் மூப்பின்றி
யிருக்கப்பெற்றார்களாதலின் நரைசேராது கறுத்த கூந்தல்
என்பது குறிப்பு.
பொங்குபூண்
முலைக் கொடிச்சியர் - வள்ளி நாயகியாரை
வளர்த்த தாயர் சேடிமார் முதலியோர்களின் வழியினர் என்ற
சிறப்புக் குறித்தது. 12
|