1090. பேறு வேறுசூ ழிமையவ ரரம்பையர் பிறந்து
மாறில் வேடரு மாதரு மாகவே வணங்கும்
ஆறு சூழ்சடை யண்ணலார் திருவிடைச் சுரமுங்
கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி
 13

     (இ-ள்.) வெளிப்படை. அந்நாட்டினது வுண்மையுடைய
குறிஞ்சி நிலமானது, வேறாகிய தனிப்பேற்றினை எண்ணி நோற்ற
வானவர்களும் அரம்பையர்களும் இங்கு ஒப்பற்ற வேடர்களும்
வேடமாதர்களுமாகப் பிறந்து வணங்குதற்கிடமாகிய, கங்கையாறு
சூழ்கின்ற சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய
திருவிடைச்சுரமும்
நிலவிய வாழ்வுடையதென்று சொல்லத்தக்க
மேன்மையினால் மிகுந்தது.

     (வி-ரை.) பேறு வேறு சூழ் - பேறு - அவ்வப்போது
உருத்தெரியாது வந்து வணங்கிப் போதலைவிட எப்போதும் இங்கு
வாழ்ந்து வணங்கும் பேறு,வேறு சூழ் - தனியாக - வேறாகச்
சூழ்ந்த. சூழ்தல் - ஆலோசித்தல்; நினைத்தல். அதற்கென்று
தனியாக நினைத்துத் தவஞ்செய்து வேடராகவும் வேடமகளிராகவும்
பிறந்தார்க ளென்பதாம்.

     மாறில் - முன்னரே தவஞ்செய்த தேவராயிருந்து பின்னரும்
தவஞ்செய்து இறைவனை வணங்கப்பெற்றவர்களாதலின் அவ்வாறு
செய்யாத ஏனைவேடர்கள் இவர்களுக்கு ஒப்பாகார் என்பார் மாறில் பொருந்த.வேடர் என்றார். "புவனியிற் போய்ப் பிறவாமையி
னாணாம் போக்குகின் றோமவமே" என்ற திருவாசகம் காண்க.

     பிறந்து - வணங்கும் என்க. பிறத்தல் - வணங்குதற்காகப்
பிறவி எடுத்தனர் என்பதாம். வணங்குதலே பிறவிப்பயனாம் என்ற
உண்மை வற்புறுத்தப்பட்டது.

     திருவிடைச் சுரமும் கூறுமேன்மை - இடைச்சுரமும் நிலவிய
வாழ்வுடையதென்று எடுத்துச் சொல்லும் மேன்மை என்க. "நிலவிய
வாழ்வுடையது என்று" என்பது குறிப்பெச்சம். உம்மை, முன் கூறிய
திருக்காளத்தியேயன்றி, என இறந்தது தழுவிய எச்சவும்மை.

     வண் குறிஞ்சி - குறிஞ்சிக்கு வண்மையாவது
தன்னையடுத்தவர் யாவர்க்கும் சிவநெறியின் வாழ்வுபெற வழிகாட்டி
யிடங்கொடுக்கும் தன்மை.

     இப்பாட்டில் குறிஞ்சி நிலக்கருப்பொருள்களும் மக்கள் -
வேடரும் வேடமாதரும் என்பது உணர்த்தப்பட்டது.

     திருவிடைச்சுரம் - தொண்டை நாட்டு 27-வது தலம்.
மலைகளினிடையில் கற்சுரத்தில் இடையில் உள்ள காரணத்தினாற்
போந்த பெயர். சுவாமியின் ஒளியுருவங்கண்டு
ஆளுடையபிள்ளையார். "இடைச்சுர மேவிய இவர்வணமென்னே?"
என்று பாடியருளினர். செங்கற்பட்டு நிலையத்திலிருந்து
திருக்கழுக்குன்றம் கற்சாலையில் 3 நாழிகை சென்று, அங்கு நின்றும்
வடக்கே திருப்போரூர் மட்சாலையில் 2 நாழிகையில் வடக்கே
திரும்பி அரை நாழிகையளவில் அடையத்தக்கது.

     மேன்மையின் மிக்கது - "நிலவிய வாழ்வு" என ஒரு
மேன்மை முன்னர்க் கூறப்பட்டதாதலின் மேலும் ஒரு மேன்மை
கூடும்போது மேன்மை மிக்கதாயிற்று என்றார். 13