1093. சொல்லு மெல்லையின் புறத்தன துணர்ச்சுரும்
                         பலைக்கும்
பல்பெ ரும்புனற் கானியா றிடையிடை பரந்து
கொல்லை மெல்லிணர்க் குருந்தினர்மேற்
                        படர்ந்தபூம்பந்தர்
முல்லை மென்புதன் முயலுகைத் தடங்குநீண்
                                முல்லை.
16

     (இ-ள்.) துணர்ச்சுரும்ப ... நீண்முல்லை - பூங்கொத்துக்களில்
மொய்த்த வண்டுகளை அலைத்துக்கொண்டு வரும்
பெரும்புனலுடைய கானியாறுகள் இடையிடையே ஓடிப்பரந்து
சென்று, கொல்லையிலுள்ள மெல்லிய இலைகளையுடைய
குருந்தமரத்தின் மேற்படர்ந்த பூம்பந்தர் போன்ற முல்லைக்
கொடிகளின் மெல்லிய புதல்களிற் பதுங்கியிருந்த முயல்களை
உகைத்துப், பின் அடங்குதற்கிடமாகிய நீண்ட முல்லை நிலங்கள்;
சொல்லும் எல்லையின் புறத்தன - மேற்சொல்லிய எல்லையின்
புறத்தில் உள்ளன.

     (வி-ரை.) சொல்லும் எல்லை - தொல்காப்பியனார் வகுத்துச்
சொன்ன நானிலங்களிற் குறிஞ்சியின் எல்லை.

     கானியாறு - பரந்து - புதல் முயல் உகைத்து அடங்கும்,
முல்லை - எல்லையின் - புறத்தன என்று கூட்டிமுடிக்க.

     அடங்கும் முல்லை - அடங்குதற்கிட மாகிய முல்லைநிலம்.

     பூம்பந்தர் - அயலில் பரந்து குடைபோல விரிந்த குருந்த
மரத்தின் மேற்படர்ந்து நிறையப் பூத்தலின் முல்லைக் கொடியானது
பூம்பந்தர் போன்றதென்பதாம். லதா மண்டபம் என்பர் வடவர்.
(லதை - கொடி).

     மெல்இணர்க் குருந்து - மென்பூம்பந்தர் - மென்முல்லை -
மென் புதல் - மென்முயல் - என இவை யாவையும்
மென்மையோடு பொருந்த உரைத்தது காண்க. "குருந்த மேறிக்
கொடிவிடு மாதவி" (கௌசிகம் - திருவாரூர் - 5), "கொல்லை
முல்லை மெல்லரும், பீனும் குற்றாலம்" (குறிஞ்சி - 3) என்ற
ஆளுடையபிள்ளையார் தேவாரங்கள் காண்க.

     பெரும்புனல் - கானியாறு - இடையிடை பரந்து -
முயலுகைத்து - அடங்கும்
என்றது காட்டாறுகள் வெள்ளத்தாற்
பெருகுங்காலத்தில் முல்லைநிலக்காடுகளில் பலபக்கமும் பரந்து
செல்வதனால் நீரின் வேகம் குறைந்து நிரந்து செல்லும்; அந்நீர்
மெல்லிய முல்லைப்புதல்களினுட் பரந்து செல்லும்போது அங்குப்
பதுங்கியிருக்கும் மென்மைத் தன்மையுடைய முயல்கள் அந்நீரினால்
துரத்தப்பட்டு அங்கு நின்றும் ஓடும்; இவ்வாறு புதல்கள் முதலிய
பல இடங்களிலும் பரந்து சென்றபின் கான்யாற்றின் பெருநீத்தம்
அடங்கும் (வேகம் குறையும்) என்றதாம்.

     இவ்வாறு தொடர்ந்து கூறியவாற்றால் முல்லைக்குரிய
கருப்பொருள்களுள் கானியாறு என்ற நீர்நிலையும், குருந்தம்
முல்லை
என்ற மரமும் பூவும், முயல் என்றமாவும்,
உணர்த்தப்பட்டமை காண்க. கானியாற்றின் இயல்பும்
தன்மையணியிற் சுவைபெற உரைத்ததுவும் கண்டுகொள்க.
மலையின்வீழருவிகள் "பள்ளந்தாழுறுபுனலிற் கீழ்மேலாக"
(திருவாசகம்) என்றபடி அதிவேகமாய் வருதலும், யானை
தேக்கு சந்தனம் முதலியவற்றை வாரி உருட்டிக்கொண்டு
வருதலும்போலல்லாது, கானியாறுகள், பெருநீரினைக்
கொண்டிருந்தும் முல்லையின் பரந்த காடுகளினிடையே
பரந்து செல்லுதலால் மென்புதல்களையும் அலைக்கமாட்டாது
அங்குத் தங்கும் மென்முயல்களை மட்டும் ஓடத் துரத்தி
அம்மட்டில் அடங்குவன என்று தற்குறிப்பேற்றச் சுவை விரவக்
கூறிய நயமும் காண்க.

     நீண் முல்லை - முல்லைநிலக் காடுகளின் பரப்புக்
குறித்தது. 16